பழங்காலத்து கோவில்களில் கடவுள் சிலைகளையும், தங்கம், வைரம் நிறைந்த புதையல் களையும் கண்டுபிடித்து, அதை வெளிநாட்டினருக்கு விற்க, அரசாங்கத்தின் தொல்லியல் துறையிலிருக்கும் சில அதிகாரிகளும், கோவில்களில் இருக்கும் அர்ச்சகர்களும் கூடவே இருந்து, திருடி கொடுத்த செய்திகளைப்பற்றி பல பத்திரிக்கைகளில் படித்து இருப்போம். அதை மையமாக வைத்து அருண்மொழி மாணிக்கம் எழுதி இருக்கும் திரைக்கதைக்கு ஏற்ப பரபரப்பான காட்சிகளை விறுவிறுப்பாக வடிவமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர்.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில், திருச்சிக்கு அடுத்த புதுக்கோட்டையில் உள்ள ‘மாயோன் மலை’ என்ற மலைக் கிராமத்தில் ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. இந்திய தொல்லியல் துறை சார்பாக அந்த கோயிலில் உள்ள கல்வெட்டுக்களையும். அங்குள்ள தங்க புதையல்களையும் கண்டுபிடிக்க தொல்லியல் துறை குழு ஒன்று செல்கின்றது. அந்த கோயிலுக்குள் இருக்கும் புதையல்களை கொள்ளையடிக்க சமூக விரோத கும்பல் ஒன்று திட்டமிடுகிறது. அதற்காக அரசுத் தொல்லியல்த்துறையை சேர்ந்த சில அதிகாரிகளை தங்களுடன் சேர்த்துக் கொண்டு, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
இந்த சூழலில் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணியாற்றி வரும், கதாநாயகன் சிபி சத்யராஜ் கடவுள் சிலைகளை திருடி விற்கும் அரசு அதிகாரி ஹரிஷ் பெராடியுடன் கூட்டணி வைத்து அந்த கோவில் புதையல்களை கொள்ளையடித்து, வெளிநாட்டுக்கு கடத்த நினைக்கிறார்கள். மாயோன் மலை கிராமத்தில், கோயிலில் உள்ள புதையல் கடத்தலில் ஈடுபடும் அவர்களுடைய திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதுதான் ‘மாயோன்’ படத்தின்மீதிக் கதை.
தொல்லியல்துறையில் பணியாற்றுபவராக நடித்திருக்கும் சிபி ராஜ், தனக்கு கொடுத்த பணியை தொய்வில்லாமல் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகள், வில்லத்தனம் மற்றும் எதிர்பாராத திருப்புமுனை எல்லாவிதத்திலும் திறமையாக தனது நடிப்பில் கவனம் செலுத்தி கைத் தட்டல் பெறுகிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், கதைக்கு தகுந்த வாறு தன்னுடைய கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
தொல்லியல்துறை அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், ஊர் தலைவராக வரும் ராதாரவி, மாரிமுத்து, பகவதிபெருமாள் பக்ஸ், ஆகியோர் அனுபவம் வாய்ந்த நடிப்ப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தொல்பொருள் துறையில் நடக்கும் கடத்தலைப்ப்ற்றிய கதை என்பதால் முழு படமும் தொல்லியல்த்துறைப் பற்றி நேர்த்தியாக எடுத்துச் சொல்வதோடு நமது பழங்கால கோவில்களின் பெருமைகளையும் விரிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர். பழங்கால கோவில்களில் இருக்கும் பொக்கிஷங்களையும், சிலைகளையும், புதையல்களையும் மற்றும் அதை பாதுகாக்கும் வழிகளையும் அனைவரையும் வியக்கும் வகையில் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர்.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கத்தின் கதை மற்றும் திரைக்கதை நம் பழங்கால கோவில்களின் வரலாற்றையும், அதன் பெருமைகளையும் கோவில்களில் இருக்கும் பொக்கிஷங்கள் குறித்தும் மிக விரிவாக சொல்லியிருப்பதோடு, இப்படத்தின் கதையையும் மிக சுவாரஸ்யமாக எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.
இளையராஜாவின் இசையில் வரும் பாடல்கள் ரசிக்கும் விதமாக இருக்கிறது. அவரது பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு, ஒவ்வோரு காட்சிக்கும் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.
ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவில் பழங்காலத்து கோவில்களும், கோவில் சார்ந்த இடங்களும் அனைவரும் ரசிக்கும் விதமாக காட்சியளிக்கிறது. மற்றும் கொண்டலராவ் எடிட்டிங் பணி சிறப்பு.
மொத்தத்தில் ‘மாயோன்’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.