அமேசான் காட்டில் பிறந்த கூகுள் என்கிற சந்தானம் அங்கு ஏற்படும் சில பிரச்சனைகளால் தனது தாய்யையும் குடும்பத்தையும் இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் என்கிற சந்தானம் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து வாலிபன் ஆனதும் சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.நாடோடியாக வாழும் கூகுள் என்கிற சந்தானம், யார் வந்து எந்த உதவி கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் எதையும் எதிர்பார்க்காமல் செய்யக்கூடிய குணம் கொண்டவர். அவர் செய்யும் அந்த உதவியால் பல நேரத்தில் பல கஷ்டங்களையும் அனுபவிக்கிறார்.
இப்படி சென்றஇடமெல்லாம் யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்கும் கூகுள் என்கிற சந்தானத்திடம், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டான் என்று கூறி சில இளைஞர்கள் உதவி கேட்டுவருகிறார்கள்.உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் கூகுள்,அவர்களுகளுடன் இணைந்து அந்த நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? கடத்தப்பட்ட நண்பனை காப்பாற்றும்போதுஅவர் சந்தித்த இன்னல்கள் என்ன? என்பதுதான் இப்படத்தின் மீதி கதை..
கதாநாயகனாக வழக்கம் போல் நகைச்சுவை மட்டும் செய்து நடித்து வந்த சந்தானம் இப்படத்தில் அதற்கு நேர்மாறாக உன்னதமாக நடித்து ரசிகர்களை கவருகிறார். படத்தில் வரும் அனைத்து நடிகர்ளும் காமெடி செய்தாலும், சந்தானம் எந்த ஒரு இடத்திலும் காமெடி செய்யாமல் சீரியஸாக நடித்திருப்பது சிறப்பாக இருக்கிறது.எதார்த்தம் கலந்த செண்டிமெண்ட், காட்சிகளில் சூழ்நிலையை புரிந்துகொண்டு செயல்பட்டு அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகிறார். சில இடங்களில் தன்னை கலாய்க்கும் வசனங்களுக்கு, மறு பேச்சு எதையும் சொல்லாமல் அதையும் சீரியஸான வசனங்கள் மூலம் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல்யா சந்த்ரா இருவரும் கதாநாயகிகளாக, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்திருப்பதோடு, காமெடியாக நடித்து சிரிக்கவும் வைக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் ப்ரதீப் ராவத், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மெளரிஷ், யுவராஜ் போன்ற பலர் படத்தில் நடித்திருந்தாலும் அனைவரும் கதையோடு கலந்து பயணித்து இருக்கிறார்கள்.
ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து, வெளிவந்துள்ள திரைப்படம் ‘குலு குலு’. சந்தானத்தை வைத்துக்கொண்டு காமெடி படம் மட்டுமே எடுக்க முடியும் என்ற இமேஜை உடைத்திருக்கிறார் இயக்குநர் ரத்ன குமார். இயக்குனர் ரத்னகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியது.பல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருந்தாலும் கூட, சில நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை. திரைக்கதையில் முதல் பாதி சற்று தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதுடன், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘குலு குலு’ படத்தை சந்தானத்திற்காக அனைவரும் பார்க்கலாம்!
ரேட்டிங் 3./5
RADHAPANDIAN.