இராணுவத்தில் பணி புரியும் கதாநாயகன் துல்கர்சல்மான். அவரது குழுவில் இருக்கும் இராணுவத்தினர் , காஷ்மீரில் நடக்க இருந்த பெரிய மதக்கலவரத்தை புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்துகிறார்கள். அதனால், அவர்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைய, அவர்களை வானொலியில் பேட்டி எடுக்கிறார்கள். அப்போது அவர்கள் வானொலி மூலம் தங்களது குடும்பத்தாரிடம் பேச, துல்கர் சல்மான் தனக்கு யாரும் இல்லை, தான் அனாதை என்று கூறுகிறார். இதனை கேட்டு பொதுமக்கள் பலர் அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதுகிறார்கள்.
அதில் அனுப்புனர் முகவரி இல்லாத ஒரு கடிதத்தில், உங்கள் மனைவி சீதா மகாலட்சுமி என்று குறிப்பிட்ட கடிதம் ஒன்று கிடைக்கிறது. சீதா மகாலட்சுமி என்ற பெயரில் தொடர்ந்து வரும் அந்த கடிதத்தில் இடம்பெறும் காதல் வார்த்தைகளால் துல்கர் சல்மான் புரியாத புதிராக தவிக்கிறார். அந்த கடிதம் மூலம் தன்னை கணவனாக்கிய சீதா மகாலட்சுமி யார்? அவரை தேடி சென்று துல்கர் சல்மான் சந்தித்தாரா? அவர்களது காதல் கைகூடியதா? என்பதை மனதை நெருட வைக்கும் காதலை உன்னதமாக சொல்லியிருக்கும் படம்தான் ‘சீதாராமம்’
கதாநாயகன் துல்கர்சல்மான், ராணுவ வீரராக கம்பீரமாக நடித்திருக்கிறார். அவர் காதல் காட்சிகளில் காதல் மொழி பேசி நடிக்கும்போது நம் மனதையும் நெருட வைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மானை தேர்வு செய்த இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். காதல் காட்சிகளில் துல்கர் சல்மானைப் போல் வேறு எந்த நடிகனாலும் நடிக்க முடியாது, என்பதை தன் நடிப்பின் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்.
சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிருணாள் தாகூர், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கும் அழகு பெட்டகமாக மிளிர்கிறார். அவர் தனது நடிப்பில் கண்களினாலேயே கவிதை பேசி, நம் மனதையும் கவர்ந்து விடுகிறார். தன் அழகிய முகபாவனைகளுடன் , நடனம் ஆடும் காட்சியில், நம்மையே அறியாமல் கைத்தட்டி ரசிக்கின்ற அளவுக்கு அமைதியான முறையில் தன் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி விடுகிறார்.. தமிழில் அவருக்கு பெரிய வரவேற்பு காத்திருக்கிறது.
1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற கற்பனைக்கதையாக இருந்தாலும் வேண்டாவெறுப்பாக சீதாமகாலட்சுமியை தேடிப்போகும் கதாபாத்திரத்தில் ராஷ்மிகாமந்தனா மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய துடிப்பும் நடிப்பும் துடிப்பான பேச்சும் நன்று.
ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், சுமந்த், ராஷ்மிகாவின் நண்பராக நடித்திருக்கும் தருண் பாஸ்கர், வெண்ணிலா கிஷோர் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த பணியை மிகச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.
இப்படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்ல வேண்டுமென்றால் ஒளிப்பதிவுதான். காஷ்மீரில் உள்ள அழகும், அங்குள்ள பிரமாண்டமான அரண்மனையின் முகப்புகளையும் காட்டும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. இராணுவவீரர்களின் உணர்வுகளையும் கூடக் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி மிகுந்த வரவேற்பைப் பெறுகிறார் பி.எஸ்.வினோத்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் 1985 ஆண்டிற்க்கு ஏற்றவாறு அமைத்து இருக்கிறார். அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம்தான் என்றாலும் . தற்காலத் தலைமுறையை வியக்கவைக்கும் பாடல்களாக அமைந்திருக்கின்றன.
இப்படத்தின் பாடல்களோடு, வசனங்களையும் எழுதியிருக்கும் மதன் கார்கியின் ஒவ்வொரு வரிகளும் நம் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் அமைந்து இருக்கிறது.
இது ஒரு உன்னதமான காதல் கதை என்றாலும், நம் இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களையும், அவர்களது வேதனைகளையும் சொல்லியிருக்கும் இயக்குநர் ஹனு ராகவபுடி சில எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் மூலம் அனைவரையும் ஆச்சரிய படவைக்கிறார். சீதா மகாலட்சுமி யார்? என்று தெரியும்போது எல்லோர் மனதிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு அற்புதமான காதல் கதையை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் மிக சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஹனு ராகவபுடியை கைத்தட்டி பாராட்டலாம். மனித நேயம், பிரிக்க முடியாத காதல் என காதலர்கள் மனதில் புதைந்து கிடக்கும் உணர்வுகளை மிகச் சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஹனு ராகவபுடி, பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு ஆகியவற்றை மறைமுகமாக பல இடங்களில் இந்துத்துவா கொள்கையை காட்சிபடுத்தியிருப்பது மிகவும் நெருடலாக இருக்கிறது.
மொத்தத்தில், ‘சீதா ராமம்’ ரசிகர்கள் அனைவரையும் உருக வைக்கும் என்பதில் ஐயமில்லை.
ரேட்டிங் 4/5
RADHAPANDIAN.