சென்னை ராயபேட்டையில் வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்பட விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவின் மாநாடுகளில் மதிய நேரத்தில்தான் வைகோ பேச அழைக்கப்படுவார். அவரது பேச்சுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அவர் பேசி முடிந்தவுடன் நான் அவரை பாராட்டி இருக்கிறேன். 56 வருட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர் வைகோ. திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் போல் அல்லாமல் சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ. எழுச்சிமிக்க, உணர்ச்சிமிக்க, போராளி. உயரத்தில் மட்டுமல்ல, லட்சியம், தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ.
உடல் நலக்குறைவால் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். வைகோ நேரில் வந்து சந்தித்தார். மாடியில் உட்காத்திருந்த கருணாநிதி, வைகோவை பார்த்தவுடன் சிரித்தார். அப்போது கருணாநிதியிடம் வைகோ கவலைப்படாதீங்க, உங்களை போன்று, ஸ்டாலினுக்கும் நான் பக்க பலமாக இருப்பேன் தெரிவித்தார். இதையடுத்து திருச்சி மதிமுக நிகழ்ச்சியில் பேசிய நான், வைகோவுக்கு நான் துணையிருப்பேன் என்று சொன்னேன். எனது விருப்பத்தை ஏற்று தற்போது பாராளுமன்ற உறுப்பினரான வைகோவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.