தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுவக்குறிச்சி எனும் வறட்சியான கிராமத்தில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார் சிம்பு. கருவேலமர கள்ளிக் காட்டில் விறகு வெட்டி முட்களை சுத்தம் செய்யும்போது , எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்க முயலும்போது சிம்புவின் உடல் முழுவதும் முட்கள் குத்தி காயங்கள் ஏற்படுகிறது. இதனைப் பார்த்ததும் அவரது தாய் ராதிகா பதற்றம் அடைந்து இதற்காகவா உன்னை கல்லூரியில் பிஎஸ்சி வரை படிக்க வைத்தேன் என்று வேதனைப்படுகிறார்.
இதன் பிறகு நீ இந்த ஊரில் இருக்க வேண்டாம். வேறு ஏதாவது வேலைக்கு செல்.. என சிம்புவை அழைத்துக்கொண்டு உறவினர் ஒருவர் வீட்டிற்க்கு அழைத்து சென்று, அவரிடம் சிம்புவின் படிப்பிற்க்கு ஏற்றவாறு எதாவது ஒரு வழியைக்காட்டுங்கள் என கெஞ்சுகிறார். அவரும் சம்மதிக்கிறார். இந்த சூழலில் அவர் சிம்புவிடம் ஒரு கடிதம் கொடுத்து மரணமடைய, சிம்பு அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் வேலை பார்த்த மும்பையில் உள்ள உணவகத்திற்கு செல்கிறார். சிம்புவை போல் பிழைப்புக்காக வந்த தமிழக இளைஞர்கள் பலர் அந்த உணவகத்தில் வேலை செய்கிறார்கள்.
அந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் கூலிப்படையினராகவே இருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக தான் தங்கியிருந்த அறையில் ரவுடிகளுடன் சண்டை நடந்தபோது துப்பாக்கியை எடுத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துகிறார் சிம்பு . இதன் பிறகு கூலிப்படையினர் இவரைத் தங்களோடு சேர்த்துக்கொண்டதோடு , அந்த கும்பலின் தலைவனுக்கு மெய்க்காப்பாளராகவும் சிம்புவை நியமிக்கின்றனர். ஆனால் தனக்கு விருப்பம் இல்லாமல் கூலிப்படை தொழிலில் ஈடுபடும் சிம்புவின் வாழ்க்கை மாறியதா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.
இருபது வயது இளைஞராக, தன் உடல் தோற்றத்தை மாற்றி மீசைகூட இல்லாமல் அச்சுஅசலான் தென்மாவட்ட வாலிபராக வருவது, அதற்காக மெனக்கெட்டிருக்கும் சிம்புவின் உழைப்பு அனைத்து காட்சிகளிலும் அழகாக தெரிகிறது. தனது நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அசத்தியிருக்கும் சிம்பு, பிறகு உடல்மொழியை மாற்றி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மும்பையில் உள்ல நகர்ப்புறத்தில் வசித்தாலும் தன் காதலியைச் சந்தித்து தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக, தனது உண்மையான வயதைக் குறிப்பிட்டு பேசுவதும், சட்டையை வைத்து முகத்தை துடைப்பதும், அவருக்கே உண்டான நடிப்பில் வியக்க வைக்கிறார். சிம்புவின் அபரிமிதமான நடிப்பும், உணர்வுகளும் நம்மை அதிர வைக்கின்றன.
கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, புன்னகை செய்யும்போது கன்னத்தில் குழி விழுந்து மிக அழகாக இருக்கிறார். தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து தனது பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.
ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், வில்லன்களாக நடித்திருக்கும் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாடல்கள் அனைத்திலும் பழைய பாடல்களின் பாதிப்பு இருப்பது நன்றாகவே தெரிகிறது. பின்னணி இசை தொய்வில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
சித்தார்த்தாவின் ஒளிப்பதிவு மும்பையின் இருளான முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு அதிகமாக மெனக்கெட்டிருக்கிறது என்றால் மிகையாகாது. மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, தென்மாவட்ட மக்களின் வட்டார வழக்கை அந்த மண்மனம் மாறாமல் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.மும்பையில் உள்ள தாதாக்களின் அடியாட்களாக தமிழர்களும் மலையாளிகளும் இருப்பது போலக் காட்டியிருப்பதும், அவர்களுக்கு தலைவனாக இந்தி மொழி பேசும் வடநாட்டினர் இருப்பதுபோல் கதை அமைந்திருப்பது இப்போதைய காலத்தில் உள்ளது போல் இருக்கிறது.
ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை வசனத்தை கெளதம் மேனனும் சேர்ந்து எழுதியிருக்கிறார். இயக்குநர் கெளதம் மேனனின் பாணி தனியாக தெரிந்தாலும், ஜெயமோகனின் எதார்த்தமும் இணைந்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது.
மொத்தத்தில், ‘வெந்து தணிந்தது காடு’ சிம்புவின் நடிப்புக்காக கண்டிப்பாக பார்க்கலாம்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.