வினய் ராய் நடிப்பில் கிரைம் திரில்லராக தயாராகும் படம் ‘மர்டர் லைவ்’

சென்னை:

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘மர்டர் லைவ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மர்டர் லைவ்’. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மதன் கவனிக்க, கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை டாட் காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

” ஹாலிவுட்டில் வெளியான ‘ப்ளைன்ட் டேட்’, ‘ஸ்கை ஹை’, ‘டெர்மினல் எக்ஸ்போசர்’, ‘கிளிட்ச்’, ‘இன் தி கோல்ட் நைட்’ ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான ‘டாட் காம் ஃபார் மர்டர்’ என்ற ஆங்கில படத்தை தழுவி ‘மர்டர் லைவ்’ எனும் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும்.

ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் பரபர திரைக்கதை. இந்த திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ… இணையதளம் மூலமாகவோ.. ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார். ஆக்சன் காட்சிகளும், பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும்.” என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வினய் ராய் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் ‘மர்டர் லைவ்’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

 

FeaturedVinay Rai starrer 'Murder Live' News
Comments (0)
Add Comment