சோழர்கள் பற்றிய கருத்துகளும், விவாதங்களும் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதற்கு காரணம் அச்சு ஊடகத்தில் இருந்த பொன்னியின் செல்வன் வெள்ளித்திரையில் திரைப்படமாக உருவெடுத்தது தான். இந்த நிலையில், சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார்கள். ஆம், அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய பெருமைகளையும், ரகசியங்களையும் வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘நந்திவர்மன்’ படத்தை இயக்கியிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தை கண்டு பிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதன் பின்னணி என்ன? என்பதை சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இப்படத்தை பெருமாள் வரதன் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று வெளியாகியிருக்கும் படத்தின் டீசர் பல விவாதங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கிறது. மேலும், ‘நந்திவர்மன்’ படத்தின் இசை உரிமையை சரிகம நிறுவனம் வாங்கி யிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்திருப்பதோடு, திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ‘நந்திவர்மன்’ படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, சோழர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மக்களை பல்லவர்கள் பற்றி பேச வைத்திருக்கிறது.
டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றிருப்பது பற்றி தயாரிப்பாளர் அருண்குமார் கூறுகையில்,
“’நந்திவர்மன்’ படத்தை சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக படமாக்கினோம். அதற்கு காரணம், படத்தை தரமாக எடுப்பதற்காக தான். தற்போது டீசர் வெளியாகி இருக்கிறது, டீசரை பார்த்தாலே தெரியும் படம் எவ்வளவு பிரம்மாண்டமாக வந்திருக்கும் என்று. இதனால் தான் ரசிகர்களிடம் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படமும் நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவரும்.” என்றார்.
இயக்குநர் பெருமாள் வரதன் பேசுகையில்,
“நான் செஞ்சிகோட்டைக்கு ஒரு முறை சென்றிருந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெரியவர் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கூறினார். அதை கேட்கவே வியப்பாக இருந்தது. பிறகு மறுநாள் அதே இடத்திற்கு நான் சென்றேன், அப்போது மற்றொருவர் அதே விஷயங்களை சொன்னார். இப்படி அப்பகுதியில் இருக்கும் பலர் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து சொன்னார்கள். அப்போது அங்கு யார் ஆட்சி செய்தது என்று விசாரித்ததில், பல்லவ மன்னர்கள் தான் அப்பகுதியை ஆண்டதாக சொன்னார்கள். பிறகு தான் பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது ஒரு ஐந்து பல்லவ மன்னர்களின் பெயர்கள் தெரிய வந்தது, அதில் நந்திவர்மன் முக்கியமானவராக இருந்ததால் அவருடைய பெயரை தலைப்பாக வைத்துவிட்டேன்.
அதுமட்டும் அல்ல, செஞ்சிகோட்டையில் நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, இப்போதும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் யாராலும் செல்ல முடியாது. வழி இருக்கிறது, அது நமக்கும் தெரிகிறது, ஆனால் அங்கு நம்மால் செல்ல முடியாது. வெறும் அமானுஷ்ய விஷயங்களை மட்டும் சொல்லாமல் பல்லவர்களின் பெருமைகள் பற்றியும் படத்தில் சொல்லியிருக்கிறோம். பாண்டிச்சேரி கடற்கரையில் சில தூண்கள் இருக்கும், அவை செஞ்சி கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தூண்களாகும். பல்லவர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, அவற்றில் அந்த தூண்களும் ஒன்றாகும். இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தளமாக மகாபலிபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை உருவாக்கிய பல்லவர்கள் பற்றியும், அவர்களுடைய பெருமைகள் பற்றியும் இதுவரை சொல்லாத பல தகவல்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். ஐந்து நிமிடம் பல்லவர்களின் வரலாற்றை 2டி அனிமேஷன் மூலம் சொல்கிறோம். அதை தொடர்ந்து தொல்லியல்துறையினர் ஒரு கிராமத்தில் நந்திவர்மன் வாழ்ந்த இடத்தை தேடி செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களில் பல்லவர்கள் பற்றிய பல ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நடத்தினோம். அமானுஷ்ய விஷயங்கள் நடக்கும் அந்த இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை. அதற்கு பதிலாக செங்கல்பட்டு பகுதியில் அந்த காட்சிகளை படமாக்கினோம். இந்த படத்தை எடுக்கும் போது எங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதோடு, சில அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக, செங்கல்பட்டு பகுதியில் படப்பிடிப்புக்காக பெரிய பள்ளம் தோன்றினோம், அப்போது அதில் ஒரு கொடூரமான முகம் போன்ற வடிவமைப்புக் கொண்ட பாறை தெரிந்தது, அதை தொடர்ந்து அப்பகுதியில் போட்ட பிரம்மாண்ட செட் ஒன்று புயலில் சிக்கி சிதைந்து போனது, நல்ல வேலையாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதுமட்டுமா, படத்தின் ஹாட்டிஸ்க் கரெப்ட் ஆகிவிட்டது. இப்போது கூட டீசரை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட லேப்டாப் கரெப்ட் ஆகிவிட்டது. இப்படி பல சிக்கல்கள் எங்களை தொடர்வதே ஒரு அமானுஷ்யம் போலத்தான் இருக்கிறது.” என்றார்.
படத்தின் நாயகன் சுரேஷ் ரவி பேசுகையில்,
“காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையின் மற்றொரு முகத்தை காட்டினோம். அப்போது அனைவரும் என்னிடம் கேட்டது, போலீஸுக்கு எதிரான படத்தில் நடித்து விட்டீர்கள், போலீஸாக நடிப்பீர்களா? என்பது தான். நானும் பார்த்துக்கலாம் என்று சாதாரணமாக இருந்தேன். ஆனால், பெருமாள் வரதன் இந்த கதையை என்னிடம் சொல்ல வரும் போது, இது போலீஸ் வேடம் என்பது தெரியாது. பிறகு கதை முழுவதையும் அவர் என்னிடம் சொன்ன போது தான் போலீஸ் வேடம் என்பது தெரிந்தது. எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு சீக்கிரம் நான் போலீஸ் வேடத்தில் நடிப்பேன் என நினைத்து பார்க்கவில்லை. ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ போன்ற வெற்றி படங்களில் பெருமாள் வரதன் பணியாற்றியிருக்கிறார், என்பதால் அவரிடம் கதை கேட்க சென்றேன். பொதுவாக நடிகர்கள் ஒரு கதையை கேட்டால், இதில் நமக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது, என்று பார்ப்பார்கள், நானும் அப்படித்தன. ஆனால், இந்த படத்தில் நான் நடிப்பதற்கு என்னை தாண்டி ஒரு காரணம் என்றால் அது இயக்குநர் பெருமாள் வரதன் மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் ஆகியோர் தான். அவர்களுடைய உழைப்பு மற்றும் படத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான். இயக்குநர் பெருமாள் வரதன் எப்போதும் இந்த படத்தின் சிந்தனையாகவே இருப்பார், சில நாட்கள் தூக்கம் வரவில்லை என்று இரவு 1 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவார்.
படப்பிடிப்பு தொடங்க மூன்று நாட்களே இருக்கும் நிலையில், பெருமாள் வரதன் நள்ளிரவு 1 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து எனக்கு போன் செய்தார். நான் தான் சார், மூன்று நாட்களில் படப்பிடிப்பு இருக்கு ஓய்வு எடுங்க, என்று கூறினேன். அந்த அளவுக்கு அவர் எப்போதும் இந்த கதையின் சிந்தனையாகவே பயணித்துக்கொண்டிருக்கிறார். அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமாரும் இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு, படமும் பெரிய அளவில் வரும் என்பதால் தான் சார் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தேன், என்றார். முதல் படமாக இருந்தாலும் பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருக்கிரார். இவர்கள் இரண்டு பேருக்காக தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும், அதுவும் முதல் படம் என்றால் அவர்கள் எப்படி உழைக்க வேண்டும் என்பதும் தெரியும், ஆனால் இவர்கள் உழைப்போடு சினிமா மீது ரொம்பவே பேஷனாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வம் என்னை வியக்க வைத்தது. ஒரு புது டீம், இப்படி ஒரு படத்தை பண்ணுவது சாதாரண விஷயம் அல்ல, இருந்தாலும் இதை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம். இனி இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்கள் கையில் தான் இருக்கிறது. நல்ல படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ஊடகங்கள் பாராட்டும் வகையில் தான் படம் உள்ளது. நிச்சயம் ‘நந்திவர்மன்’ அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும்.” என்றார்.
’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு நிறைய வரலாற்று சரித்திர படங்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. நீங்களும் அந்த படத்தை பார்த்து தான் ‘நந்திவர்மன்’ படத்தை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பெருமாள் வரதன்,
“’பொன்னியின் செல்வன்’ படம் அல்ல, அப்படம் பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த படத்தின் முழு திரைக்கதையை எழுதி முடித்து விட்டேன். சில மாதங்கள் தயாரிப்பாளர் தேடிக்கொண்டிருந்தேன். அந்த காலக்கட்டத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. எனவே, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பாகவே என் படம் உருவாக வேண்டியது, தயாரிப்பாளர் கிடைக்காததால் கொஞ்சம் தாமதாமாகி விட்டது. எனவே, பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து இந்த படத்தை எடுக்கவில்லை. இதுவரை எந்த ஒரு படத்திலும் சொல்லப்படாத சம்பவங்கள் நிறைந்த படமாகவும், பல்லவர்கள் பற்றி தெரிந்துக்கொள்ள கூடிய தகவல்கள் அடங்கிய படமாகவும் ‘நந்திவர்மன்’ இருக்கும்” என்றார்.