தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கொண்டாடிய தீபாவளி திருநாள் விழா!

CHENNAI:

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்கம் சார்பாக சிறப்பு மலர் வெளியிட்டும் ,சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கியும் விழா நடத்தி மகிழ்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியை ஒரு திருவிழா மனநிலையோடு பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருடன் வருடந்தோறும் விழா நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நடத்த முடியாமல்  இருந்தது.  இந்த வருடம் உறுப்பினர்களின் இரண்டு வருடகால ஏக்கத்தைப் போக்கும் வகையில் இன்று (22.10.2022)  பிரம்மாண்டமாக தீபாவளி சிறப்பு மலர்   வெளியிடப்பட்டு,  ,உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழம்பெறும் பாடகி பத்மபூஷன் திருமதி பி.சுசீலா,  தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு, மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சதீஷ், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், காமெடி நடிகர் ‘போண்டா’ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை நடிகர் டேனி தொகுத்து வழங்கினார். விழாவின் முக்கிய அம்சமாக பாடகர் திரு வேல்முருகன்  அவரது குழுவினரோடு இணைந்து பத்திரிக்கையாளர் களின் விருப்பத்திற்கு ஏற்ப பல பாடல்களை பாடி விழாவை இனிதே துவக்கி வைத்தார்.

பழம்பெறும் பாடகி பத்மபூஷன் பி.சுசீலா பேசுகையில்…

பத்திரிகையாளர்கள்தான் என்போன்ற கலைஞர்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளனர். என் தந்தை நான் பெரிய பாடகியாக வேண்டும் என ஆசைப்பட்டார். தெலுங்கிலிருந்து வந்த என்னை இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்னை பாடவைத்தார். நான் இதுவரை எழுபதாயிரம் பாடல்கள் பாடியுள்ளேன். எனக்கு மட்டுமல்ல கலைத்துறையினர் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து அமர்ந்தார். இடையிடையே தனது பாடல்களை பாடி அனைவரையும் சந்தோஷப்படுத்தினார்.

விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில்…

“இன்ப நாள் இது இனிய நாள் இது” எனத் துவங்கி.. அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பேசுகையில்… “பத்திரிக்கையாளர்களின் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அல்லவைகளை அகற்றி நல்லவைகளை மட்டும் எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என ரத்தின சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இயக்குனர் ஜெயம் ராஜா பேசுகையில்,

என் தந்தை தாய் எழுதிய புத்தக வெளியீட்டில் பத்திரிகையாளர் கவிதா அவர்கள்  பேச வேண்டும் என்று முடிவு செய்து அழைத்தோம்..விழாவை சிறப்பாக அமைத்து எங்கள் குடும்பத்தில் ஒரு வராக உள்ளார். அவர் இந்த சங்கதுக்கு தலைவராக இருப்பது பல நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்..மேலும் “என் சகோதரர் ஜெயம் ரவி யாரிடமும் அவ்வளவு ஆத்மார்த்தமாக நான் பேசிப் பார்த்ததே இல்லை. ஆனால் பத்திரிகையாளர்களிடம் ஒரு குடும்பமாக ஆத்மார்த்தமாக பேசுவதை பார்க்கும் பொழுது தான் உங்கள் மீது அவருக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பது தெரிகிறது.ரவிக்கு பதிலாக இன்று நான் வந்ததினால் தான் சுசிலா மேடம், தாணு சார் இவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் பெருமை கிடைத்தது. பத்திரிகையாளர்களான நீங்கள் எங்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாகவே கிட்டத்தட்ட மாறி இருக்கிறீர்கள். உங்களின் விழாவில் கலந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன். என் அப்பா அம்மாவிடம் ஒரு அங்கீகாரம் பெற வேண்டும் என வாழ்வின் குறிக்கோளாக நினைத்தவன். அவர்களுக்குப் பிறகு எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைத்தது பத்திரிக்கையாளர்களான உங்களிடம் மட்டுமே. எங்களுடைய அத்தனை வளர்ச்சியிலும் உங்களின் பங்கு இருந்து வருவதை என்றைக்கும் மறக்க முடியாது. சினிமாவே வாழ்க்கை என நினைத்து வாழ்ந்து வரும் பத்திரிகையாளர்களிடம் சினிவை வழிநடத்தும் ஆளுமை திறன்கள் நிறைந்து காணப்படுகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை தலைமையேற்று வழிநடத்தும் தலைமைப் பண்பு பத்திரிகையாளர்களிடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களின் விழாவில் நான் கலந்து கொண்டதை சிறப்பாக உணர்கிறேன். உங்களுடன் இணைந்து இந்த தீபாவளியை கொண்டாடுவதையும் என் அன்பை பகிர்ந்து கொள்வதையும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். இந்த தீபாவளி இனிய தீபாவளியாக அனைவருக்கும் அமைய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்”. என்று மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார் இயக்குனர் எம். ராஜா.

நிகழ்ச்சியில்  நடிகர்  சதீஷ் பேசுகையில்,

“மெரினா படம் வெளியான போது ஒரு விமர்சனத்தில் படத்தின் மிகப்பெரிய ஆறுதல் காமெடி நடிகர் சதீஷ் என என் பெயரை குறிப்பிட்டு எழுதி இருந்தார் ஒரு பத்திரிகையாளர். அப்போது சிவகார்த்திகேயன் ‘எழுதியது யார் உன் நண்பனா’ எனக் கேட்டு கலாய்த்தார். அப்படி என்னுடைய ஒவ்வொரு படத்தின் போதும் என்னை அங்கீகரித்து வழிநடத்தி இந்த இடம் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பத்திரிகையாளர்களான நீங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட உங்கள் விழாவில் கலந்து கொண்டது உங்களுக்கு பெருமை அல்ல எனக்குத்தான் பெருமை. அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்”  என்று கூறி அமர்ந்தார் நடிகர் சதீஷ்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி மீண்டு வந்துள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு சங்கத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. இந்த விழா வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக மாறியது என உறுப்பினர்கள் உற்சாகத்துடனும், மகழ்ச்சியுடனும் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களாக புத்தாடைகள், பட்டாசு, சர்க்கரை, ஆயில் ( இரண்டு வகை ), சுவிட் பாக்ஸ் போன்ற பொருட்களுடன் சிறு தொகையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாக  உணவு உபசரிப்பு செய்த BINGO BOX நிறுவனத்திற்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

"Tamil Movie Journalists Association" NEWSFeatured
Comments (0)
Add Comment