காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் ‘இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி’. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து நிற்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமல்ல அப்படி கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய சிம்புதேவனும் மிக முக்கியம். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் பார்ட் 2 மூலம் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் பார்ட் 2 அறிவிப்பு அறிவிப்பாகவே போய்விட்டது.
இந்த சூழலில் சிம்புதேவன் அடுத்து எந்த அறிவிப்பும் தராமல் பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். அதே நேரம் வடிவேலு விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம் இஷ்டம் போல வந்து கொட்டுகிறது போலும்…தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட பிசியாக இருக்கும் யோகிபாபுவும் இயக்குனர் சிம்புதேவனும் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்ற தகவல் கோலிவுட்டில் பரவியதுமே அனைவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அதுவும் இருவரும் இணையப்போகும் படமும் சரித்திரபடமாம்…
அப்படியென்றால் கண்டிப்பா ‘இம்சைஅரசன் இரண்டாம் புலிகேசி’ 2.0 ஆக இருக்கும் என்றும் முந்தைய பட்த்தைவிட இதில் யோகிபாபுவை வேறுவிதமாக காட்ட திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம். இந்த சரித்திர படத்தின் மூலமாக இயக்குனர் சிம்புதேவனுக்கு பல சவால்கள் காத்திருக்கிறது… அதில் குறிப்பாக “இம்சை அரசன் என்னால்தான் ஓடியது” என்ற வடிவேலுவின் பில்டப்பை உடைத்து இயக்குனரால்தான் எந்த படங்களும் பேசப்படும் ஓடும் என்ற சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அடுத்து “இம்சை அரசன்”வடிவேலு போல சாயல் இல்லாமலும் அதே நேரம் யோகிபாபுவுக்கு தனி அடையாளமும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் இயக்குனர் சிம்புதேவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அடுத்ததாக சரித்திர படமாக இருப்பதால் மெகா பட்ஜெட்டில் உருவாகும் அதை சமாளித்து திரும்ப எடுக்கும் சூழலை வியாபாரத்தில் கொண்டுவர வேண்டும்.
ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் தயாரிக்க வடிவேலு நடிப்பில் ‘இம்சைஅரசன் பார்ட் 2’ எடுக்க செட் போட்டு படம் டிராப் ஆனதால் அதற்கு காரணமானவர்களுக்கு திருப்பி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயமும் சிம்புதேவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகனின் சமீபத்திய போக்கும் தெரிந்து தனக்கு முன் இருக்கும் இத்தனை சவால்களையும் முறியடித்து தெறிக்க விடுவாரா இயக்குனர் சிம்புதேவன்.
வெல்லப்போவது “இம்சை அரசன்” வடிவேலுவா? “யோக அரசன்” யோகிபாபுவா?
பொறுத்திருந்து பார்க்கலாம்…