‘கட்டா குஸ்தி’ திரை விமர்சனம்!

சென்னை:

‘கட்டா குஸ்தி’ என்ற இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷால் ஸ்டூயோஸ் நிறுவனத்தின் சார்பாகவும், தெலுங்கு நடிகரான ரவி தேஜா தனது RT TeamWorks நிறுவனத்தின் சார்பாகவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர்கள் : விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த், ஹரிஷ் பெராடி, காஜராஜ்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்
இயக்கம் : செல்லா அய்யாவு
தயாரிப்பு : விஷ்ணு விஷால், ரவி தேஜா.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக்கொண்டு, தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க அவரது மாமா கருணாஸ் முயல்கிறார்.  இந்த சூழ்நிலையில் விஷ்ணு விஷால் தன் மாமா கருணாசிடம், தான் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று  இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார்.  ‘ஒன்று தனக்கு வரப்போகும் மணப்பெண் தன்னைவிட குறைவாக படித்திருக்க வேண்டும்’ இரண்டாவது அவளது தலை முடி நீளமாக நீண்டதாக இருக்க வேண்டும்’ என்கிறார்.  இதனால் விஷ்ணு விஷாலுக்கு பல பெண்கள் திருமணம் செய்ய முன் வந்தும், இந்த நிபந்தனைகளால் யாரையும் திருமணம் செய்ய முடியாமல் போய்விடுகிறது.  இவர் போட்ட நிபந்தனைகளால் இவருக்கு திருமணம் செய்ய எந்த பெண்ணும் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த சமயத்தில் கேரளாவில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யா லட்சுமிக்கு அவரது சித்தப்பா முனீஸ் காந்த் வரன் தேடிக் கொண்டிருக்கிறார்.  இந்த சூழ்நிலையில் விஷ்ணு விஷாலின் மாமா கர்ணாஸை , முனீஸ் காந்த்  சந்திக்கிறார். இருவரும் பால்ய நண்பர்கள் என்பதால்  விஷ்ணு விஷாலைப் பற்றி கருணாஸ் சொல்ல, ஐஸ்வர்யா லட்சுமியை பற்றி முனீஸ் காந்த்  சொல்ல விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும்  திருமணம் செய்து வைக்கிறார்கள்.  ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம் என்று அந்த காலத்தில் சொல்வார்கள் ஆனால் இரண்டு பொய்களை சொல்லி விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.  இவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு இவரது வாழ்க்கை நல்லவிதமாக அமைந்ததா? அல்லது இருவருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வந்ததா? என்பதுதான் ‘கட்டா குஸ்தி’ படத்தின் மீதி கதை.

எந்த வேலைக்கும்  செல்லாமல் தன் பெற்றோர்கள் சேர்த்து வைத்த முன்னோர்களின் சொத்தை அழித்துக் கொண்டு,  ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால், தன் நண்பர்களுடன் இணைந்து கபடி ஆடிக் கொண்டும், தண்ணி அடித்து விட்டு அனைவரிடமும் சண்டை போடுவது போன்ற கதாபாத்திரத்திற்கு மிக சரியாக பொருந்தி இருக்கிறார். சொந்தவீடு, இருபது ஏக்கர் தோப்புக்குச் சொந்தக்காரர் என்பதற்கு ஏற்றபடி விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்தும் இருக்கிறார். அப்பாவியான தோற்றத்தில் விஷ்ணு விஷால்  நடித்திருந்தாலும், தன் மாமன் கருணாஸ் சொல்லும் ஆணாதிக்க சொல்லாடல்களை அப்படியே நம்பும் அவரது முகபாவனைகள்தான் தியேட்டரில் அனைவரையும் கை தட்ட வைத்திருக்கிறது. மனைவி தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணு விஷால் செய்யும் வேலைகளும், அதில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பும் ரசிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா லட்சுமியை அடக்கி ஆளும் விஷ்ணு விஷால், அவருடைய உண்மையான ரூபத்தை பார்த்த பிறகு மாறும் காட்சிகளில் நடித்த விதம், அவர் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடித்து வெற்றி பெறுவார் என்பதை இப்படத்தில் நிரூபித்து காட்டியிருக்கிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் தனது கோபம், ஆத்திரம், மனைவி மீதான பாசம் என்று அனைத்தையும் காட்டி சண்டையிடும்போது தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நாயகனையே தூக்கி விழுங்கும் அளவுக்கு தன் கதாபாத்திரத்தை உள் வாங்கி நடித்திருக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு போட்டியாக  நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார்.  மல்யுத்த வீராங்கனையாக அறிமுகமாகும் காட்சியில் அச்சு அசலாக  உண்மையான வீராங்கனையாகவே அனைவரையும் மிரட்டி விட்டார். இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும்  முக்கியமான கதாபாத்திரம் என்பதால் . அதை மிக சரியாகவும், சிறப்பாகவும்  செய்திருக்கிறார். குஸ்தி போட்டியில் எதிராளியை தூக்கி எறிபவர், தனது கணவனை அரிவாளால் வெட்ட வந்த எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் ஒட்டு மொத்த தியேட்டரையே எழுந்து நின்று கைதட்ட வைக்கிறார். மல்யுத்த வீராங்கனையாக இருந்தாலும், தனது கணவனை பிடிக்கும் என்று சொல்லி, அவரிடம் அமைதி காக்கும் காட்சிகளில்  நடிப்பில் அசத்தினாலும், சில முக்கியமான காட்சிகளில் நடிப்பில் நம்மை கலங்க வைத்து விடுகிறார்.

ஆணாதிக்க மாமனான கருணாஸ் பேசும் பல வசனங்கள் அப்பாவி கணவன்மார்களை தியேட்டரில் கை தட்ட வைத்து, வீட்டில் உதை வாங்க வைக்கும் என்றே சொல்லாம். அப்படி ஒரு ஆண் என்னும்  திமிரை வசனத்திலும், நடிப்பிலும் சிறப்பாக காட்டி நடித்திருக்கிறார் கருணாஸ். காமெடி கதாபாத்திரத்தில் நடித்தாலும் தற்போது இப்படத்தில் நடித்த கேரக்டர் பாராட்டுக்குரியது.

சித்தப்பாவாக தனது தொந்தியுடன் நடித்திருக்கும் முனீஸ்காந்த் ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்துவதில் தவறில்லை என்பதுபோல் கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு தவிப்பதும், அண்ணன் மகளுக்காகக் கடைசியில் இவர்களிடத்தில் கெஞ்சும்போதும் தனது நடிப்பில்  தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்.

காளி வெங்கட், முனிஷ்காந்த், ஹரிஷ் பெராடி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் வரும் காட்சிகள் அனைத்தும் அனைவரையும் வயிறு குலுங்க  சிரிக்க வைக்கிறது. அதிலும், காளி வெங்கட் கருணாஸை பார்த்து, “அவங்க அம்மா கிட்ட மட்டுமா வாங்கி குடிச்சான், சின்னம்மாகிட்டயும் தானே வாங்கி குடிச்சான்” என்று பேசும் வசனத்திற்கு தியேட்டரே அதிரும் அளவிற்கு கைத்தட்டல் பெறுகிறது.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் அதைவிட பின்னணி இசை மிகவும் கவனம் செலுத்தி இருப்பது பாராட்டாமல் இருக்க முடியாது.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் கேரளாவில் உள்ள  இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை மிக அழகாக கண்ணுக்கு குளிச்சியாக காட்டியிருப்பதோடு, மல்யுத்த போட்டியை மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் எம்.நாதன். இறுதிக்கட்ட காட்சியில் மல்யுத்த சண்டைக் காட்சியை மிக சிறப்பாக படமாக்கி இருப்பதை கைதட்டல் கொடுக்கலாம்.

இப்படத்தின் முதல் பாதியில் இடைவேளைவரை அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டு, இரண்டாம் பாதியில் சிரிப்புடன் சீரியஸாகவும் சில விஷயங்களை தெளிவாக காட்டியுள்ள இயக்குனர் செல்லா அய்யாவு அவர்களை பாராட்டலாம். தற்போதைய குடும்ப வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் இத்திரைப்படம் பேசியிருப்பதுதான் காட்சிக்கு காட்சி காமெடி தெறிக்க, தியேட்டரில் உள்ள மக்களுக்கு நல்ல அட்வைஸாக அமைந்திருக்கிறது. மிக பிரமாதமான வசனங்களை எழுதியிருக்கும்  இயக்குநர் செல்லா அய்யாவு,  காமெடி காட்சி, சீரியஸ் காட்சி, சென்டிமெண்ட் காட்சிகள் என்று அனைத்திலும் தற்போதைய காலக்கட்டத்திற்கேற்ப ஆண், பெண்களை ஒட்டு மொத்தமாய் உண்மையை உரித்திருக்கிறார்மத்த நாட்டுல எல்லாம் போட்டியில ஜெயிக்க எதிரிகளோட சண்டை போடணும். ஆனால் இந்தியால மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்டை போடணும் போன்ற வசனங்கள் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் யதார்த்த வாழ்க்கையைப்பற்றி சிறப்பாக  சொல்லி இருக்கிறார். இவர் இயக்கிய காட்சிகளில் முக்கியமாக சவரி முடியைத் துவைக்கும் காட்சியில் மொத்தத் தியேட்டரும் அதிர்கிறதுஅந்தக் காட்சியில் தன்னுடைய வலியை வெளிக்காட்ட முடியாமல் தவித்து ஐஸ்வர்யாலட்சுமி தன் நடிப்பையும் தாண்டி ஒரு சோக உணர்வை நமக்குள் கடத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி’ படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய சிறப்பான படம் மட்டும் அல்ல! ஒரு  கணவன் தன் மனைவியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையும் மிக தெளிவாக பார்க்கலாம்.

ரேட்டிங் 4/5

RADHAPANDIAN.

 

 

 

 

"KATTA KUSTHI" MOVIE REVIEWFeatured
Comments (0)
Add Comment