“விஜயானந்த்” திரை விமர்சனம்!

சென்னை:

கர்நாடகாவில்  மிகப் பெரிய  தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கை வரலாறை  மையமாக வைத்து, விஜயானந்த் ரோட்லைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சங்கேஸ்வரின் உண்மையான கதையை சினிமாவுக்கென சில மாற்றங்கள்  செய்து “விஜயானந்த்”  படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நிஹால், சிரி பிரகலாத், பாரத் போபண்ணா, ஆனந்த் நாக், வினயா பிரசாத் உள்ளிட்ட பல கன்னட நட்சத்திரங்களின் நடிப்பில், பெண் இயக்குனரான  ரிஷிகா சர்மாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் “விஜயானந்த்”.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில், பிரிண்டிங் அச்சகத்துறையில் இருக்கும் அப்பா வழியில் அத்துறையில் ஈடுபடாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேவரின் வாழ்க்கைக் கதையை  உண்மைத் தன்மைக்கு ஏற்றவாறு தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார்கள். பிரிண்டிங்  அச்சகம் நடத்தி வந்த பி.ஜி. சங்கேஸ்வருக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர் விஜய் சங்கேஸ்வர். தனது மூன்று  மகன்களுக்கும் அதே தொழிலைக் கற்றுக் கொடுத்து, இந்த துறையில் முன்னேற்றம்  காண வேண்டும் என் நினைக்கிறார் பி.ஜி. சங்கேஸ்வர்.

ஆனால் இந்த தொழிலை மட்டும் செய்து வந்தால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது என்று சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு , அதில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார் விஜய் சங்கேஸ்வர். . இதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவிக்கிறார். தந்தை மறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல்  பலரிடம் கடன் வாங்கி, ஒரு லாரியை வாங்கி போக்குவரத்துத் தொழிலை தொடங்குகிறார் விஜய் சங்கேஸ்வர்.  அதன்பிறகு அவர் எதிர்பார்த்த அளவிற்கு  தொழிலில் எதுவும் முன்னேற்றம்  ஏற்படாமல் , தொடர்ந்து தோல்வியை சந்தித்து நஷ்டம் அடைகிறார்.  இருந்தாலும், தன் நம்பிக்கையை  கைவிடாமல் தன்னம்பிக்கையுடன்   நான்கு லாரிகளை வாங்கி தொழிலில் ஈடுபட, அவரது சரக்குப் போக்குவரத்துத் தொழில் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் சரக்கு போக்குவரத்து துறையோடு பத்திரிகை துறையிலும் ஈடுபடுகிறார். இந்த சூழ்நிலையில் அவர் சந்தித்த வேதனைகள், சோதனைகள், எதிர்ப்புகள், இன்னல்களை மற்றும் ஏமாற்றங்களை எப்படி சமாளித்து சாதனை படைத்தார். கர்னாடகாவில் தொழிலதிபர் ஆனது எப்படி? என்பதே ‘விஜயானந்த்’ படத்தின் மீதிக்கதை.

விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஹால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு தத்ரூபமாக நடித்திருக்கிறார். இவர் செய்யும் தொழிலில் போட்டிகள், எதிர்ப்புகள் சோதனைகள் ஏற்படுமிடத்தில் பின் வாங்காமல் அதை அவர் எதிர்கொள்ளும் விதம் தொழில்துறையில் எதிர்காலத்தை முற்றிலும் கவனித்து, தோல்வி அடையும் போதும், வெற்றி கிடைக்கும் போதும் தன் முகபாவனையின் மூலம்  ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அதில் வரும் தடைகளை கடந்து செல்லும் விதம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும்படி இருக்கிறது. அவரது சிறந்த நடிப்பு பாராட்டுபடி இருக்கிறது.

விஜய் சங்கேஸ்வரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாரத் போபண்ணா, உண்மையான மகன் போலவே மிக தத்ரூபமாக நடித்திருக்கிறார். தனது தந்தையின் இடத்தில் இருந்து தொழிலை நடத்துவதும், அதை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதும் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுத்துகிறது.

விஜய் சங்கேஸ்வரின்  மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரகலாத், நல்ல குடும்பத்தலைவி களுக்கு எடுத்துக்காட்டாக, மிக எளிமையான அளவான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

தந்தையாக நடித்திருக்கும் ஆனந்த் நாக், வினயா பிரசாத், அர்ச்சனா கொட்டிகே, பத்திரிகையாளராக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

கீர்த்தன்பூஜாரியின் ஒளிப்பதிவில் அந்தக்காலகட்டத்தை அப்படியே நம் கண்முன்னே காட்டியிருப்பது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப பயணித்து இருப்பது சிறப்பு. அதற்கான வண்ணங்களையும் அவர் பயன்படுத்தியிருப்பதை பாராட்டலாம்..

கோபிசுந்தரின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம். பின்னணி இசையும் அளவாக இருப்பதோடு படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் மிக சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

விஜய் சங்கேஸ்வர் கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் ரிஷிகா சர்மா, திரைக்கதையில் எந்த சமரசமும் ஏற்படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார். பல காட்சிகளை அழகாக வடிவமைத்து இருக்கிறார். சினிமாவுக்காக கதையில் சில கற்பனைகளை சேர்த்து இயக்கி இருக்கும் இயக்குநர் ரிஷிகா சர்மா, ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக  இந்தப் படத்தை நகர்த்தி பயணித்து இருப்பது பாராட்டாமல் இருக்க முடியாது. அவருக்கு நிச்சயமாக கைத்தட்டல் கொடுக்கலாம். கன்னட சினிமாவின் முதல் வாழ்க்கை வரலாற்று படம் என்ற பெருமையை அனைத்து மொழிகளிலும் எடுத்து சென்றிருக்கும் இயக்குநர் ரிஷிகா சர்மாவுக்கு பாராட்டுக்கள்..!

மொத்தத்தில் ‘விஜயானந்த்’ படத்தை அனைவரும்  ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

"VIJAYAANANDH" MOVIE REVIEW NEWSFeatured
Comments (0)
Add Comment