‘அவள் அப்படித்தான் 2’ மனித மனங்களின் ஈகோ யுத்தம் பற்றிப் பேசும் படம்!

சென்னை:

ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978ல் வெளியான ‘அவள் அப்படித்தான் ‘ படம்  பெண்ணின் சுய உரிமையைப் பற்றிப் பேசிய படமாகக் கவனிக்கப்பட்டது.படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பேசப்படும் படமாகவும் குறிப்பிடத்தக்க படமாகவும் இன்றளவும் பேசப்படுகிறது.  அந்தப் படத்தின் நீட்சியாக இப்பொழுது அதே சிந்தனையின் இன்னொரு வடிவமாக ‘ அவள் அப்படித்தான்2’ திரைப்படம் உருவாகி உள்ளது. முந்தைய ‘அவள் அப்படித்தான்’ படத்தின் நாயகியின் பெயர் மஞ்சு. இதிலும் நாயகியின் பெயர் மஞ்சுதான்.

இந்தப் படத்தை ரா .மு. சிதம்பரம் இயக்கியுள்ளார்.திருநெல்வேலியில் பிறந்த இவர், இயக்குநர் ஆதவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.குறும்படங்கள் , விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் இயக்கியவர். ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ திரைப்படத்தின் கதாசிரியர். இந்த ‘அவள் அப்படித்தான் 2 ‘ படத்தில் அந்த ‘அவளாக ‘ சுயமரியாதை கொண்ட ஒரு பெண்ணாக அதாவது கதை நாயகியாக நடித்திருப்பவர் சினேகா பார்த்திபராஜா. திருப்பத்தூரைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர். இந்தியாவில் முதன்முதலாக மதம் ,ஜாதியற்றவர் என்று தனக்கு ஜாதிமறுப்புச் சான்றிதழ் வாங்கியவர். இதற்காகப் பல ஆண்டுகள் போராடி அதைப் பெற்றவர்.இவரது கணவர் பார்த்திபராஜா நாடகக் குழுவைத்துள்ளார் .கணவர் குழுவில் இணைந்து நடித்த அனுபவம் சினேகாவுக்கு உண்டு.

படத்தின் நாயகனாக நடித்துள்ளவர் அபுதாகிர்.இவர்கள் தவிர சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன் ,தனபால், தொல்காப்பியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை யுன் ஃப்ளிக்ஸ் (Yun Flicks)நிறுவனம் சார்பில் செய்யது அபுதாகிர் தயாரித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

“அவள் ஓர் ஆசிரியை.குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியை அவள் வேலையாக இல்லாமல் விருப்பமாகச் செய்து வருகிறாள்.ஒரு சனிக்கிழமையன்று வேலைக்குச் செல்கிற அவள், வழக்கம்போல அன்று மாலை வீடுதிரும்பவில்லை. நேரம் நகர்கிறது.இரவு 10 மணி ஆகிறது.இன்னும் வீடு வந்து சேரவில்லை .அதற்கு மேல் நகரும்  ஒவ்வொரு நிமிடமும் அந்தக் குடும்பத்தினருக்குப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கணவர், மாமியார்,செய்தி கேட்டு வந்திருந்த  அவளின் பெற்றோர் என அனைவரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். அக்கம்பக்கம் செய்தி பரவுகிறது.கணவன் எவ்வளவோ இடங்களுக்கு அலைந்து சென்று தேடியும் கிடைக்கவில்லை.பொழுதும் விடிகிறது. அதிகாலை 6 மணிக்கு அவள் வந்து சேர்கிறாள். இரவு முழுக்க எங்கே சென்று இருந்தாள்? அனைவர் முகத்திலும் இதே கேள்விக்குறிகள் .ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் அனைவரையும் கடந்து, அவர்களது கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு வீட்டுக்குள்  நுழைகிறாள். இரவு பொழுது கழிந்ததைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கிறாள்.இதைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி ஆச்சரியம்.

அதற்குப் பிறகு அவளுக்கும் அவள் கணவருக்கும் ஈகோ யுத்தம் தொடங்குகிறது.ஆணவம் தூண்டப்பட்ட இரு மனங்களும் கூர் தீட்டிக் கொண்டு மோதிக் கொள்கின்றன. வழக்கமான ஆணாதிக்க மனம் கொண்ட அவனும் அதற்குப் பணியாத அவளும் முரண்பட்டு விலகல் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  6 மணிக்கு வீடு வந்தவள் மறு நாள் திங்கட்கிழமை காலை ஒரு முடிவு எடுக்கிறாள்.அது கட்டுப் பெட்டித்தனமும் அல்ல கட்டுடைத்தலும் அல்ல .தனது பெண் என்கிற சுயத்தை இழக்காமல் எடுக்கும் முடிவு. அதற்குள் என்ன நடக்கிறது?அவள் என்ன முடிவெடுக்கிறாள்? என்பதுதான் இப்படத்தின் கதை செல்லும் பாதை.

மனித மனம் ஆணவத்தின் சீண்டல்களால் வெளிப்படும் குரூர தருணங்களையும்  அதன் அசைவுகளையும் இந்தப் படத்தில் அழகாகக் காட்டியுள்ளோம்.  நடித்துள்ளவர்களும்  பாத்திரங்களின் மன இயல்புகளை நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்தப் படத்தை நாங்கள் பத்தே நாளில் எடுத்து முடித்தோம். சரியான திட்டமிடல் இருந்ததால் இது சாத்தியமானது. இந்தப் படத்தின் கடைசி ஒரு நாள் படப்பிடிப்பு பாக்கி இருந்தது. அதை நான்கு நாள் தள்ளி எடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். பிறகு ஏதோ ஓர் உள்ளுணர்வில் ஒரேயடியாக முடித்து விடுவோம் என்று தோன்றியது.ஒரு நாள் களத்தில் இறங்கி முடித்தோம்.என்ன ஒரு ஆச்சரியம் என்றால், மறுநாளிலிருந்து லாக்டவுன் தொடங்கிவிட்டது. இது காலத்தின் ஒத்துழைப்பு அல்லாமல் வேறு என்ன?அதனால்தான் குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடிக்க முடிந்தது.

இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. இப்போதுள்ள ரசிகர்களை உணர்ச்சிகளுக்கு இடமில்லாத வகையில் வெறும் பிரமாண்டத்தைக் காட்டி ஏமாற்ற முடியாது. அவர்கள் மனதைத் தொடும்படி ஏதாவது படங்களில் செய்தாக வேண்டும் .அப்படி இரு மனங்களின் ஆணவச் சிக்கலை, அதன்  மோதலைத் துல்லியமாக இதில் காட்டி இருக்கிறோம் .அது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்”என்கிறார் இயக்குநர் ரா.மு.சிதம்பரம்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- அரவிந்த் சித்தார்த், எடிட்டிங்- அஹமது ,கலை டி. பாலசுப்பிரமணியன். விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் ‘அவள் அப்படித்தான் 2 ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு  மற்றும் பட அறிமுக விழா விரைவில் நடைபெற உள்ளது.

 

 

"AVAL APPADITHAAN" MOVIE NEWSFeatured
Comments (0)
Add Comment