‘பருந்துப் பார்வை’ இதழ் ஆசிரியரும் நடிகருமான சி .எம் .துரை ஆனந்த் தயாரிப்பில் விழித்தெழு ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

சென்னை:

ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் ‘பருந்துப் பார்வை’ இதழ் ஆசிரியரும் நடிகருமான சி .எம் .துரை ஆனந்த் தயாரிப்பில் நடிகர் முருகா அசோக் ,காயத்ரி நடிப்பில் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விழித்தெழு ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பேரரசு ,தயாரிப்பாளர்கள் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் சங்கம், தொழிலதிபர் தாம் கண்ணன், ,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி. எஸ் .ஆர். சுபாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் சி .எம் .துரைஆனந்த் பேசும்போது,

“சென்ற ஆண்டு இதே இடத்தில் ஒரு திரைப்பட விழாவில் நான் கலந்து கொண்ட போது நானும் திரையுலகில் நுழைந்து ஓராண்டுக்குள் ஒரு விழாவில் கலந்து கொள்வேன் என்று கூறினேன். அதேபோலவே இன்று நான் இங்கு வந்திருக்கிறேன். நான் என் பாக்கெட்டில் வைத்துள்ள பிளாட்டினம் பேனா இங்கே வருகை தந்துள்ள அண்ணன் தாம் கண்ணன் எனக்குப் பரிசாக வழங்கியது. அதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் .தாம் கண்ணன் அவர்கள் இந்திய நகரங்களில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஐடி தொழில் செய்பவர். அவரிடம் நான்காயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அவர் ஒரு மாமனிதர்.

நான் பல்லாண்டுகளாகத் திரையுலகத் தொடர்பில் இருக்கிறேன் .பலர் கதை சொல்வார்கள். ஆனால் எடுப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை வராது .ஆனால் இந்த இயக்குநர் தமிழ்ச்செல்வன் சொன்ன மாதிரியே படத்தை எடுத்துள்ளார். இயக்குநர் கதையை என்னிடம் சொன்னபோது ஆறு மாதத்தில் எடுத்து முடிக்க முடியுமா என்றேன். முடியும் என்றார் .அதன்படி ஆறே மாதத்தில் நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டோம். பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

கதையின் நாயகன் அசோக் பேசும்போது,

“இந்தப் பொங்கல் திருநாளில் துணிவோடு வாரிசு பார்ப்பவர்களுக்கும் வாரிசுகளோடு துணிவு பார்ப்பவர்களுக்கும் எனது அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்த போது இதைச் சரியானபடி அழுத்தமாகச் சொன்னால் படம் நன்றாக வரும் என்று நம்பிக்கை வைத்தேன். இப்போதுதான் காட்சிகளைப் பார்க்கிறேன் நன்றாக எடுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் அப்பகுதி மக்களிடம் சம்பாதித்துள்ள அன்பையும் நற்பெயரையும் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.அது எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் வராது. ஒரு பேனாவுக்குள்ள சக்தி எந்த தோட்டாவுக்கும் இல்லை கத்தியிலும் இல்லை.அதை இந்தப் படம் பிரதிபலிக்கிறது” என்றார்.

படத்தின் நாயகி காயத்ரி பேசும்போது,

“இயக்குநர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இயக்கத்தில் முன்பு ஒரு படத்தில் நடித்து இருந்தேன். நீண்டநாள் கழித்து என்னை நினைவு வைத்திருந்து படத்தில் நடிக்க அழைத்தார். நான் இதில் போலீஸ் ஆக நடித்துள்ளேன்.நான் வாய்ப்பு தேடி பல  இடங்களுக்குச் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் போலீஸ்காரர் பாத்திரம் என்றால் இவ்வளவு குள்ளமான இவரால் போலீசாக நடிக்க முடியாது என்று அவநம்பிக்கை கொள்வார்கள். ஆனால் இந்த படத்தில் நான் போலீசாக நடித்துள்ளது பெருமைக்குரியது. என்னுடைய நண்பர்களிடம்  சொன்ன போது நம்பவில்லை. அதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி .படப்பிடிப்பு இடத்தில் அனைவரும் பரபரப்பாக இருந்து கொண்டிருக்கும் போது  எந்த வித பதற்றமுமில்லாமல் பொறுமையாக இருப்பார் அவர். அவரது பொறுமை எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டும்.நான் ஒரு பெரிய ஆர்டிஸ்ட் கிடையாது. இருந்தாலும்,படப்பிடிப்பில் என்னை மதிப்பாக நடத்தினார்கள். அந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்தது  ஆச்சரியமூட்டியது”என்றார்.

படத்தின் இயக்குநர் ஏ. தமிழ்ச்செல்வன் பேசும்போது,

“படக்குழுவினர் நாங்கள் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். நேரம் காலம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் அனைவரும் பணியாற்றி ஒத்துழைத்துக் கொடுத்தார்கள் .அதற்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மொபைல் என்ற விஷயத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்தாலும் இணையதள மோசடிகள் போன்ற கெட்ட விஷயங்களும் நிறைய இருக்கின்றன .அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தான் இந்தப் படம் உருவாகி உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது “என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இங்கே கதாநாயகியாக நடித்த காயத்ரி பேசியபோது அபிநயம் பிடித்துப் பேசியது போல் இருந்தது. அப்போது எனக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில்ஜில் ரமாமணியாக வந்த மனோரமா நினைவுக்கு வந்தார்.இங்கே உள்ளவர்கள் தமிழ் உணர்வு மிக்கவர்கள் அவர்களின் பெயரைப் பார்த்தாலே தெரிகிறது. தமிழா விழித்தெழு என்ற பாடல் வருகிறது. தமிழன் இன்று விழிப்பாக இருக்க வேண்டிய காலம் என்று சொல்வேன். ஏனென்றால் தமிழை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் ஒன்று தானே? தமிழகம் என்றாலும் வாழ்க என்று சொல்ல வேண்டும் தமிழ்நாடு என்றாலும் வாழ்க என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகம் என்றால் அகத்தில் தமிழை வைத்திருக்கிறோம்.தமிழ்நாடு உயர்வு ,தமிழகம் தாழ்வு என்றால் அது தவறு. தமிழனுக்கு இரண்டும் ஒன்றுதான்.தமிழகம் வாழ்க தமிழ்நாடு வாழ்க .தமிழ் வாழ்க ,தமிழினம் வாழ்க.அவ்வளவுதான்.கட்சிகளுக்குள் ஆயிரம் பிரிவுகள் இருக்கலாம் .ஆனால் தமிழன் தமிழனாகவே இருக்க வேண்டும்.

ஆளுநர் இரண்டு வருடங்களில் போய்விடுவார். ஆனால் தமிழன் இங்கே தான் இருப்பான். இப்படத்தில் தமிழன் ஏமாந்து கொண்டே இருப்பான் என்று ஒரு வசனம் வருகிறது. அது உண்மைதான். தமிழ் அரசியலில் தமிழன் சிக்கிக் கொள்ள வேண்டாம்.நான் நிறைய சின்ன பட விழாக்களில் கலந்து கொள்வேன். நான் இந்தப் படத்திற்கு வந்தது சின்ன படம் என்பதால் அல்ல.இந்தப் படத்தை எடுத்தவர்கள் சிவகங்கை மண் என்பதால், அது எனது மண் என்பதால் வந்தேன்.சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்கது. வீரமண், பாசமண் ஆன்மீக மண்.இப்படி எத்தனையோ சிறப்புகள் கொண்டது.

சிவகங்கை சீமையிலிருந்து பிறந்து இந்தக் கலை உலகிற்கு எத்தனையோ பேர் வந்து இருக்கிறார்கள். பெரிய பட்டியலே இருக்கிறது.ஏவி. எம். மெய்யப்ப செட்டியார் அவர்கள், கவியரசு கண்ணதாசன் அவர்கள்,  ரஜினி கமல் போன்ற நட்சத்திரங்களுக்கு ஏராளமான படங்களை இயக்கிய எஸ் .பி .முத்துராமன், இயக்குநர்கள் ராஜசேகர், மகேந்திரன், நடிகர்கள் எஸ். எஸ்.ராஜேந்திரன், எஸ்.எஸ். சந்திரன் , கஞ்சா கருப்பு வரை பலர் உண்டு.   கம்பர் வாழ்ந்து மறைந்த ஊர் சிவகங்கைச் சீமை நாட்டரசன் கோட்டை. அங்கே கம்பனுக்கு சமாதி உள்ளது. உங்கள் பேரரசு கூட சிவகங்கை சீமை தான். இப்படி எத்தனையோ பேர் வந்திருக்கிறோம்.செந்தமிழன் சீமான் எங்கள் அண்ணன் பிறந்த ஊர் சிவகங்கை சீமை தானே.வரலாற்றை எடுத்துக் கொண்டால் வீரம் நிறைந்த மரம் பாண்டியர்கள் பிறந்ததும் இந்த சீமைதான்.எங்கள் ஊரிலிருந்து படம் எடுக்க வந்த இவரைப் பற்றி நான் விடிய விடிய பேசுவேன்.

பெரிய படங்களால் சின்ன படங்கள் என்று பாதிக்கப்படுகின்றன. பெரிய படங்கள் படம் வெளியாகும் போது கின்ன படங்கள் வெளியிடமுடியாது ,சரி. உங்கள் பெரியபடங்கள் வெளியாகும் போது இசை வெளியீட்டு விழா கூட நடக்க கூடாதா?இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

விழாவில்

இயக்குநர்கள் டென்னிஸ் மஞ்சுநாத் ,சக்தி சரோஜ்குமார் ஒளிப்பதிவாளர் இனியன் கதிரவன், சம்பத்குமார்,இசையமைப்பாளர் நல்ல தம்பி, பாடலாசிரியர்கள் முகிலன், செல்வராஜ்,இயக்குநர் சரோஜினி, சண்டை இயக்குநர் ஹரி முருகன், நடிகர்கள் தீபக், ஹரிஹரன், காந்தராஜ்,திருக்குறளினி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

"Vizithezhu" Movie NewsFeatured
Comments (0)
Add Comment