‘பொம்மை நாயகி’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

‘பொம்மை நாயகி’ படத்தின் கதையைப் பொறுத்தவரையில் டீக்கடையில் தினக்கூலி வேலைக்கு செல்லும் யோகிபாபு, மனைவி சுபத்ரா மற்றும் மகள் ஸ்ரீமதியுடன் வாழ்ந்து வருகிறார். தன் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையோடு வறுமையில் வாடினாலும் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  வருகிறார். அதே ஊரில் யோகிபாபு தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவரான  அருள்தாஸ் வசித்து வருகிறார். அவர்  முதல் மனைவிக்கு பிறந்தவராக இருந்தாலும் அவரை தன் கூட பிறந்த  சகோதரனாகவே கருதி, அவர் கொடுக்கும் சில முக்கிய பணிகளையும், அருள்தாஸ் சொல்லுக்கு கட்டுப்பட்டு  செய்து வருகிறார் யோகிபாபு.

ஆனால் தன் தந்தைக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட யோகிபாபுவின் தாய் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால்  அருள்தாஸ் இவர்களை தனது உறவுகளாக கருதாமல் தன் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கிறார். இந்நிலையில், யோகிபாபு தனது குழந்தையுடன் திருவிழாவிற்கு செல்லும் போது, அந்த ஊர் அம்மனுக்கு காணிக்கை செலுத்த எண்ணிய அவரது மகள் ஸ்ரீமதி உண்டியலை எடுத்து வர மறந்ததால், தந்தையிடம் சொல்லாமல் வீட்டிற்கு செல்கிறார். அப்போது ஆதிக்க சாதியினரால் மகள் ஸ்ரீமதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்.  தன் குழந்தையை தேடி கண்டு பிடிக்கும் போது ஆதிக்க சாதியில் இருக்கும் ஒரு சிலர்  தன் மகள் ஸ்ரீமதியிடம் தவறாக நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனால் பதட்டமடைந்த யோகிபாபு, அவர்களிடம் தன் குழந்தையை போராடி காப்பாற்றுகிறார் .

இந்த விஷயத்தை தன்னுடைய சகோதரன் அருள்தாஸிடம் சொல்கிறார். ஆனால் தவறு செய்தவர்கள் அவருடைய ஆதிக்க சாதி என்பதால் யோகிபாபுவுக்கு சமாதானம் சொல்லி, அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிறிதளவு பணத்தையும் கொடுத்து அனுப்புகிறார்.   இந்த சூழலில் யோகிபாபுவின் பிரச்சனைக்கு எப்படியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி கிருஷ்ணன் போராடி வருகிறார். இறுதியில் மகளுக்கு நேர்த்த கொடுமைக்கு நியாயம் கேட்டு யோகி பாபு சட்ட ரீதியாக போராடுகிறார். அந்த ஆதிக்க சாதியை எதிர்த்து யோகிபாபு, தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை  சட்டத்தின் முன் நிறுத்தினாரா? அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா?என்பதுதான்  ‘பொம்மை நாயகி’ படத்தின் மீதிக்கதை.

மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து கதைக்கு பலம் சேர்த்துள்ளார் யோகிபாபு. கதாப்பாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை தன்  நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார். எந்த காட்சியிலும் தன்னை காமெடி நடிகராக காட்டிக்கொள்ளாமல், எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும்  தன்னால் சிறப்பாக       நடிக்க  முடியும் என்பதை, இப்படத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.

யோகி பாபுவின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா எதார்த்தமான  நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து விட்டார்.

மகளாக நடித்திருக்கும் ஸ்ரீமதி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஹரி, ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது பணியை சிறப்பாக செய்து மிக கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

அதிசயராஜின் ஒளிப்பதிவு கடலூர் அதனை சுற்றியுள்ள இடங்களையும், மிக  அழகாக காட்டி இருப்பதோடு, அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.  நீதிமன்றத்தை சுற்றி நடக்கும் கதைகளை மிக இயல்பாக படமாக்கி காட்சிகளின் மூலம் அந்த இடத்திற்கே கொண்டு செல்கிறார்.

இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியின்  இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான். பின்னணி இசைபடத்திற்கு சிறிதளவு பலம் சேர்த்திருக்கிறது.

இப்படத்தின் கதை பல தமிழ் படங்களின் சாயல் போன்று இருந்தாலும், ஓரளவு கதையை வித்தியாசப்படுத்தி  அமைத்து உள்ளார் இயக்குனர் ஷான்.  ஆதிக்க சாதியினர் என்னதான் தப்பு செய்தாலும், சொந்தங்களும், சட்டமும் அவர்களை காப்பாற்ற முயலும்போதும், நீதிமன்றத்தில் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் முன்னால் காட்டாமல் நீதிபதி, அந்த குழந்தையிடம் பேசும் காட்சிகளும் சிறப்பாக இயக்குனர் காட்சிபடுத்தி இருக்கிறார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் இப்படம் மக்கள் ரசிக்கக்கூடிய  படமாகவும், மக்களுக்கு பாடம் சொல்லும் பதிவாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷான் .

மொத்தத்தில், ‘பொம்மை நாயகி’ படத்தை குடும்பத்தோடு கண்டு ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

"Pommai Nayaki Movie ReviewNewsFeatured
Comments (0)
Add Comment