ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் 14-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

சென்னை:

ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் 14-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை, தமிழ்நாடு அரசின் மாநில புலனாய்வுத் துறை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் காவல் கண்காணிப்பாளர் திருமதி தேன்மொழி IPS அவர்களும் சென்னை அரசு மேலாண்மைத்துறையின் செயலர் திருமதி மைதிலி இராஜேந்திரன் IAS அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். கல்லூரிச் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைக்க, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள்  வரவேற்புரை நல்கினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் தங்களின் சிறப்புரையில் கல்வி என்பது பெண்களுக்கு இன்றியமையாத ஒன்று. கல்வி மட்டும்தான் அனைத்து தகுதியினையும் ஏற்படுத்தித் தரும் என்றும் பெண்கல்வி என்பது அவர்களுக்கும் அவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் உரைநிகழ்த்தினர். தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. இதில் 1281 மாணவர்கள் பட்டம் பெற்ற நிலையில்,  பல்கலைக்கழகத் தரவரிசையில் முதல் 3 இடத்தைப் பெற்றவர்களுக்குத் தங்கப்பதக்கமும் அடுத்த 30 இடங்களில் உள்ளவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரேயஸ் – கல்லூரிகளுக்கு இடையிலான கலைவிழாவானது   நடைபெற்றது. முதல்நாள்  நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் திரு.பாபி சிம்ஹா அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவர் தம் உரையில், எந்த வேலையைச் செய்தாலும் ஆர்வத்துடன் செய்தால் அது சிறப்பாக அமையும் என்று கூறினார். நிறைவு விழாவில் நடன இயக்குநர் திரு.சந்தோஷ் குமார் (சாண்டி மாஸ்டர்) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இரண்டாம் நாள்  நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட நடிகர் திரு.கிஷன்தாஸ் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, நிறைவு விழாவினைக் காணொளித் தொகுப்பாளர் (VJ) திரு.கதிரவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல்குரல் வித்தகர் திரு. விக்னேஷ் ஆண்டனி, நகைச்சுவை நடிகர் திரு.அமுதவாணன், காணொளித் தொகுப்பாளர், நடிகர் திரு விஷால் மற்றும் திரு.ராகுல் வர்மா, இசையமைப்பாளர் திரு ஸ்ரீகாந் தேவா, நடிகர் திரு சரவண விக்ரம், பாடகர் திரு கே.ஜே ஐயனார், நடிகர் திரு சஞ்சய் மோகன் என இக்கலைநிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலைவிழாவில் குழுநடனம், பேஷன்வாக், அடாப்டியூன் பேஷன்அவுட் ஆஃப்ட்ராஷ் ஆகிய போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் பொருட்டு ஏற்கனவே பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 ஆம் வரை கல்லூரி வளாகத்தில் டைரக்ட்ரஸ் கட், இன்ஃபினைட் லென்ஸ், ஷிப்ரெக், நகைச்சுவை, லாயர்ஸ் அப், ஸ்கிரிப்ட்ரைட்டிங், ரிப்போர்டேஜ், சேனல்சர்ஃபிங், க்ரூம்அப், மைம், குழுப்பாடல், சைகைமொழி ஆகிய கலைவிழாப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டன. அப்போட்டிகளில் MOP வைணவக் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி ஸ்டெல்லா மகளிர் கல்லூரி, ஸ்ரீ கண்ணிகா பரமேஸ்வரி கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து மாணவிகள் கலந்து கொண்டனர்.  வெற்றியடைந்த மாணவர்களில் அனைத்து நிலைகளிலும் தனது தனித்துவத்தையும் திறமையையும் வெளிக்காட்டிய வைணவ மகளிர் கல்லூரி மாணவி செல்வி சஜிதா அவர்களுக்கு மிஸ் ஸ்ரேயாஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதே வகையில் எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கிய வைணவ மகளிர் கல்லூரியே வெற்றிக் கோப்பையையும் (Overall championship) தட்டிச்சென்றது.
கல்லூரிச் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், ஷசுன் கல்லூரியின் இணைச்செயலர் ஹரிஷ் எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி,  துணை முதல்வர் முனைவர் சா.ருக்மணி ஆகியோர் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தலைமைத் தாங்கி சிறப்பித்தனர்.

 

 

 

FeaturedShri Shankarlal Sundarbai Shasun Jain College for Women" News
Comments (0)
Add Comment