துறைமுகத்தில் சட்டவிரோதமாக நடக்கும் கடத்தல்களுக்கு உடந்தையாக அங்கு பணிபுரியும் அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போதைப் பொருட்களை தனது அடியாட்கள் மூலம் சரக்கு கப்பலில் கடத்தும் தொழிலை செய்பவர் ஹரிஷ் பெராடி. அவரிடம் அடியாளாக பணியாற்றும் ஜெயம் ரவி, எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை கொண்டவராக இருக்கிறார். வாழ்க்கையில் எந்த விஷயத்திற்காகவும் கவலைப்படாமல் வாழ்ந்து வரும் ஜெயம் ரவி, ஹரீஷ் பெராடிக்கு எதிராக துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட முயற்சிக்கும்போது ஜெயம் ரவிக்கும், ஹரிஷ் பெராடிக்கும் மோதல் ஏற்படுகிறது.
இதனால், ஜெயம் ரவியை கொலை செய்ய முடிவு செய்யும் ஹரிஷ் பெராடி, ஜெயம் ரவியை அந்த மாஃபியா கும்பல் தலைவனிடம் கொண்டு செல்கிறார். அப்போது உலக அளவில் தேடிவரும் தீவிரவாதியை கப்பலில் கடந்த வேண்டும் என்று அந்த தலைவன் சொல்ல, இதில் நிறைய சிக்கல்கள் இருப்பதால் மற்றவர்கள் தயங்குகிறார்கள். அப்போது ஜெயம் ரவி தான் செய்து முடிப்பதாக கூறுகிறார். இந்த சூழ்லில் ஜெயம் ரவியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ய முடிவு செய்கிறார்கள். இறுதியில் காவல்துறை அதிகாரிகள் ஜெயம் ரவியை கைது செய்தார்களா? துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஜெயம் ரவி ஜெயித்தாரா? என்பதுதான் ‘அகிலன்’ படத்தின் மீதிக்கதை.
எத்தனை நாளைக்குத்தான் நல்ல கதாநாயகனாகவே நடிப்பது என்று ஜெயம்ரவி நினைத்தரோ என்னவோ இந்தப்படத்தில் வில்லன்களுக்கெல்லாம் வில்லனாக நடிப்பதில் நான் சளைத்தவனில்லை என்று சொல்லுமளவுக்கு எல்லாக்காட்சிகளிலும் நன்றாக மிகச் சிறப்பாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். அகிலன் கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு நடித்து அதற்குப் பொருத்தமாக இருக்க தீவிரமாக முயன்றிருக்கிறார் ஜெயம்ரவி.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும். பிரியாபவானிசங்கருக்கு அதிக வேலை இல்லை. பயமோ பதட்டமோ இல்லாமல் அவரை ரசிக்கின்ற அளவிற்கு இயல்பாக நடித்திருக்கிறார்.
இன்னொரு நாயகி தன்யாரவிச்சந்திரனுக்கு அதிகக்காட்சிகளும் இல்லை, அதிக வேலையும் இல்லை.
ஹரிஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதனன், ஹரிஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.
கடற்கரையையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும், துறைமுகத்தில் நடக்கும் பணிகளையும் தத்ரூபமாக படம் பிடித்து அந்த காட்சிகளை ரசிக்கும்படி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த்..
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கலாம். ஆனால் அவருடைய பின்னணி இசை ஒரே இரைச்சலாக காதை பிளக்கும் அளவுக்கு சவுண்ட் அதிகமாக இருக்கிறது. . பின்னணி இசையில் குறை வைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
துறைமுகம், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடற்கரையும், அதனை சார்ந்த கதைக்களத்தை அமைத்து படத்தின் காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். இதுவரையில் தமிழ் திரை உலகில் வெளியான படங்களில் முழுக்க முழுக்க அதாவது துறைமுகத்தை மையமாக வைத்து ஒரு சிறப்பான கதையை தேர்வு செய்து எடுக்கப்பட்ட படம் இதுதான் என்று சொன்னால் மிகையாகாது. இந்தப் படத்தை எடுப்பதற்கு முன்னாடியே இதில் சில விஷயங்களை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் தெளிவாக உணர்ந்து இயக்கி இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘அகிலன்’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.