சந்தன கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரிப் பாண்டி போன்ற காவல்துறைக்கு சவால் விட்ட சிலரைப்பற்றி தெரிந்துக் கொள்ள சிலர் ஆசைப்படுவார்கள் அல்லவா? அது போன்ற ஆவலில் ஒரு இளம் ஜோடி பேராசிரியர் வயதான ராஜ்குமாரிடம் குருவிராஜன் என்ற ஒரு முக்கிய புள்ளியைப் பற்றி விவரம் கேட்கிறார்கள். முதலில் மறுத்த அவர் குருவிராஜன் என்பவர் யார் என்பதை சொல்கிறார்.
பல அடியாட்களை வைத்துக் கொண்டு காவல்துறைக்கு சவால் விட்டு பல கடத்தல் தொழில் செய்யும் கேங்ஸ்டர் குருவி ராஜன். தன்னை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியில் தெரியாமல் வாழ்ந்து வரும் குருவி ராஜனை, ஒரு சாதாரணமான இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார்கள். அப்போது அவனது அடியாட்கள் அந்த இருவரையும் கொல்ல முயலும்போது,அவனுடைய அடியாட்களையும் கொன்று, கேங்ஸ்டர் குருவி ராஜனின் கூட்டத்தையே இல்லாமல் செய்து விடுகிறார்கள். எதற்காக குருவி ராஜனை கொன்றார்கள்? காவல்துறையால் கூட நெருங்க முடியாத ஒரு கடத்தல்காரன் குருவிராஜன் யார்? என்பதை, சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் சொல்லும் குறும்படம்தான் ‘ஷூட் தி குருவி’
காவல்துறையால் கூட நெருங்க முடியாத ஒரு கேங்ஸ்டர் குருவி ராஜன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார் அர்ஜை. அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கன கச்சிதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்திருக்கிறது. மிரட்டல் பார்வையில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.
வழக்கம் போல் தனது பாணியில் வசனம் பேசி சிரிக்க வைத்திருக்கும் ஷாரா, கூடுதலாக ஆஷிக்கை தம்பியாக ஏற்றுக் கொள்ளும் செண்டிமெண்ட் காட்சிகளில் நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் நன்றாகவே பாராட்டும்படி நடித்திருக்கிறார்
பல படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வந்த ஆஷிக், கதையை உணர்ந்து மிக இயல்பாக தனது கதாபாத்திரத்தை பாராட்டும்படி நிறைவு செய்து நடித்திருக்கிறார்.
பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்குமார் வயதானவராக தத்ரூபமாக நடித்திருக்கிறார்..சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த பணியை அளவான நடிப்பின் மூலம் சிறப்பு செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த் ஒரு அறைக்குள் வைத்தே பெரும்பாலான காட்சிகளை எடுத்து இருந்தாலும் கடைசி கட்ட காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது..
மூன்ராக்ஸ் இசையில் பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசையின்போது வசனங்கள் எதுவும் சரியாக கேட்க முடியவில்லை.
பிரபல தொழிலதிபர் வி கே டி பாலன் என்ற குருவி பாலனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் படமாகவும் ஒரு காமெடி ஜானருடன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் மதிவாணன். உண்மையில் நடந்த சில விஷயங்களை சுருக்கமாக மிக எளிமையாக படமாக்கி இருக்கும் இயக்குனர் மதிவாணன் இப்படத்தில் காமெடி ஆக்சன் செண்டிமெண்ட் என்று சில முக்கிய அம்சங்களை படமாக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது. இதில் நடித்த அனைத்து நடிகர்களிடம் நடிக்க வைத்த விதம் பாராட்டக்கூடியது.
மொத்தத்தில் அனைவரும் பார்க்க கூடிய படம் ‘ஷூட் தி குருவி’
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.