“ராஜா மகள்” திரை விமர்சனம்!

சென்னை:

பல தமிழ் படங்களில்  சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ஆடுகளம் முருகதாஸ் கைபேசி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறார். தன் மனைவி மகளோடு வாடகை வீட்டில் வசிக்கும், அவர் கடையில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினாலும், தனது மகள் கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுத்துவிடுவார். வாங்கிய பொருளையே தனது மகள் திரும்ப கேட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் தன் மகளின் ஆசைக்காக அனைத்தையும் வாங்கிக் கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு மகள் மீது முருகதாஸ் மிகுந்த அன்பு  கொண்டவராக இருக்கிறார்.

ஆனால், அவருடைய மனைவி பிராங்க்ளின் மகளுக்கு அதிக செல்லம் கொடுக்காமல் குடும்ப சூழ்நிலையை புரிய வைத்து, அவளை வளர்க்து ஆளாக்க வேண்டும் என்று முருகதாஸுக்கு அறிவுரை சொன்னாலும் அதை ஏற்காமல் மகளை செல்லமாக வளர்க்கிறார்.

ஒருநாள் மகள் தன்னுடன்  படிக்கும் மாணவனின் பிறந்தநாள் விழாவிற்காக அவனது வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு அவர்களது பிரம்மாண்டமான வீட்டை பார்த்து,  தனக்கும் இது போன்ற ஒரு பெரிய வீடு வேண்டும் என்று தனது தந்தையிடம் கேட்கிறாள். தனது மகள் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லி ஏமாற்ற நினைக்காத  முருகதாஸ், வீடு வாங்கி கொடுப்பதாக கூறுகிகிறார். மகள் விளையாட்டுக்காக கேட்கிறாள் என்று நினைத்து சில தினங்களில் மறந்துவிடுவாள் என்று அவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் மகளோ புதிய வீடு வாங்க வேண்டும் என்ற நினைப்பாகவே இருக்கிறாள்‌.

வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு ஏழை தொழிலாளி எப்படி பெரிய வீடு வாங்க முடியும்.. தனது மகளிடம்  பொய் சொல்லிவிட்டோமே என்று வேதனையுடன் தவிக்கிறார் ஆடுகளம் முருகதாஸ். கடைசியில் மகளுக்காக புதிய வீடு வாங்கினாரா? தன் மகளுக்கு குடும்ப சூழ்நிலையை சொல்லி உண்மையை  புரிய வைத்தாரா? என்பதுதான் “ராஜா மகள்” படத்தின் மீதிக்கதை.

தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ்,  மிக தத்ரூபமாக நடித்து அந்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து, வாழ்ந்து இருக்கிறார்.  ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை நடிப்பின் மூலம் எதார்த்தமாக பிரதிபலிக்கிறார். மகளிடம் பொய் சொல்லி விட்டு, ஒரு கட்டத்தில் மகளை பார்க்கவே கூச்சப்பட்டு அவள் தூங்கிய பிறகு வீட்டிற்கு வரும் காட்சிகளிலும், தன்னால் முடியாது என்பதை மகளுக்கு புரிய வைக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் ஒரு உண்மையான தந்தையாக நடிப்பில் அசத்தி விட்டார்., அன்பு, பாசம், விரக்தி, கோபம் என அனைத்து உணர்வுகளையும் அழகாக நடித்து நம் கண்களை கலங்க வைத்து விட்டார். கதாநாயகன் என்பவர் கதைக்கேற்றவாறு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இந்தப்படத்தையும் இவரது கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்க்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

முருகதாஸின் மனைவியாக நடித்திருக்கும் ஃப்ராங்க்ளின் கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.  சராசரி மிடில்கிளாஸ் குடும்ப தலைவியாக தனது பணியை நன்றாக செய்துள்ளார். மகளை ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டாம் என்று அடிக்கடி இவர் சொல்லும்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் என்பது நன்கு  தெரிகிறது.

சிறுமி பிரதிக்‌ஷாவின் கதாபாத்திரமும் நடிப்பும் மிகவும் சிறப்பு. இந்தச் சிறிய வயதில் இவ்வளவு இயல்பாக நடித்திருப்பது படம் பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கிறது. பள்ளியில் தனது தந்தை வீடு வாங்கி கொடுக்கிறார் என்று சக மாணவர்களிடம் பந்தா காட்டும் காட்சிகளில் அனைவரையும் ரசிக்க வைக்கிறார். முருகதாஸின் நண்பராக நடித்திருக்கும் பக்ஸ் கதாபாத்திரத்தை உணர்ந்து ஓரிரு காட்சிகளில் சிறப்பாக  நடித்திருக்கிறார்.

நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு  கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் மிக அழகாக காட்சிபடுத்தி இருக்கிறார்..

பாடல்கள் சுமார் ரகம்தான். இருந்தாலும்  பின்னணி இசையில் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன்.

தான் பெற்ற குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் மன வலியை மிக அழுத்தமாக சொல்லி, இந்த படத்தை நம் மனதிற்குள் பதிய வைத்து விடுகிறார் இயக்குநர் ஹென்றி.ஐ.. அவருக்கு பெரிய பாராட்டுக்கள். கண்டிப்பாக இப்படம் பல விருதுகளை வாங்கிக் குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம் “ராஜா மகள்”

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.

 

"RAJA MAGAL" MOVIE REVIEW.Featured
Comments (0)
Add Comment