ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ட்ரெட் குமார் வழங்கும் ‘விடுதலை பார்ட் 1’ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்துள்ளனர். மார்ச் 31, 2023 அன்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறையில் சிறந்த ஆளுமைகளுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது பற்றி நடிகை பவானி ஸ்ரீ உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார்.
நடிகை பவானி ஸ்ரீ கூறும்போது,
“பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் நான் கமிட் ஆன போது நான் அனுபவித்த அதே உற்சாகம் இப்போதும் இருக்கிறது. வெற்றிமாறன் சார் சிறந்த இயக்குநர். தனித்துவமான கதைகளை உருவாக்குபவர். மேலும் அவர் கதையில் வரும் கதாபாத்திரங்களை உருவாக்கும் விதமும் தனித்துவமானது. ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடந்தபோது அங்கிருக்கும் ஒரு செடி, பூச்சி கூட தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொள்ள விரும்பினார். இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. உணர்ச்சிப்பூர்வமாக தன் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அவர் சிறந்த இயக்குநர். இந்தப் படத்தில் சூரி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து இந்தப் படத்தில் தீவிரமான கதையின் நாயகனாக அவர் மாறியிருப்பது அவருக்கு பாராட்டுகளை குவிக்கும்”.
அடர்ந்த காடுகளுக்கு இடையே படப்பிடிப்பில் தனது மறக்க முடியாத அனுபவத்தைப் பற்றி நடிகை பவானி மேலும் கூறுகையில், “ஒட்டுமொத்த படப்பிடிப்பே மறக்க முடியாதது. காடுகளின் இந்த சூழலுக்கு நான் புதியவள். அந்த சூழல் எனக்கு ஒரு தியான அனுபவத்தை கொடுத்தது. இது எனக்கு ஒரு நிதானமான மற்றும் இனிமையான அனுபவத்தை பரிசளித்து என்றுமே எனக்கு மறக்க முடியாததாக அமைந்தது”.
தனக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது பற்றி நடிகை பவானி கூறும்போது, “இது உண்மையா என்பது எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு பாடல்களிலும் நான் இருக்கிறேன். இதற்கான பாராட்டுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான பாடல்களால் படத்தை அழகுபடுத்தியிருக்கும் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாருக்கு எல்லாப் புகழும் சேரும்” என்றார்.
இசை மேதைகளின் குடும்பத்தைச் சேர்ந்த பவானிக்கு ‘விடுதலை’யில் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் புன்னகையுடன் மறுத்தார். “இல்லை! என் குடும்பத்தில் நான்தான் ‘ODD ONE’. எனது குடும்பத்தினர் என்னிடம் வற்புறுத்திய போதிலும், நான் இசைப் பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை.
படம் குறித்தான அனுபவத்தை பகிர்ந்த பவானி, “நான் இன்னும் படத்தை முழுதாக பார்க்கவில்லை. ஆனாலும், படக்குழுவில் படம் பார்த்த அனைவரும் ‘விடுதலை’ நன்றாக வந்திருப்பதாகத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பார்வையாளர்களுடன் படத்தைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகளை நிச்சயம் பார்வையாளர்கள் மதிப்பார்கள். எண்டர்டெயின்மெண்ட் என்பதையும் தாண்டி, நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள். நிச்சயம் அது ‘விடுதலை’ படத்திற்கும் நடக்கும்” எனத் தெரிவித்தார்.