தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் 12 லட்சம் ரூபாயை ‘வெப்பன்’ படப்பிடிப்பின் போது தற்செயலாக இறந்த லைட்மேன் எஸ்.குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். மறைந்த எஸ்.குமாரின் மனைவி ஜூலியட், அவரது தாயார் மற்றும் அவரது குழந்தைகள் காசோலையை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர், நிர்வாக தயாரிப்பாளர் திரு. ரிஸ்வான், FEFSI தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, லைட் யூனியன் தலைவர் திரு.செந்தில், மேலாளர் கந்தன் மற்றும் இயக்குநர் குகன் சென்னியப்பன் மற்றும் ‘வெப்பன்’ படக்குழுவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது இரங்கலைத் தெரிவிக்கையில்,
“எஸ் குமாரின் எதிர்பாராத மறைவு எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற வேதனையைத் தந்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதையும் தன் தொழிலுக்காக இரவும் பகலும் செலவழித்தவ ஒருவரை இழந்துள்ளது மனதைக் கனக்கச் செய்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர்களுடைய குடும்பத்திற்கு நிவாரணம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில் ஒரு சிறு பகுதியாக இருக்க விரும்பினேன். அதனால் ஒரு சிறிய பங்களிப்பைச் செய்தேன். எஸ் குமார் என்றென்றும் என் பிரார்த்தனையில் இருப்பார். அவருடைய ஆன்மா சாந்தியடைய நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். மேலும் உறுதியான நம்பிக்கையுடனும், சக்தியுடனும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருப்பதைக் காண விரும்புகிறேன்” என்றார்.
’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி, ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.