’விருபாக்ஷா’ படத்தின் கதையை பொறுத்தவரையில், ஒரு கிராமத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மர்ம மரணங்கள் நடக்கிறது. எதற்காக இந்த மரணங்கள் நடக்கின்றன என்பதை கதாநாயகன் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தில் முதல் காட்சியிலேயே குழந்தைகள் பலர் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதற்கு காரணம் அந்த கிராமத்தில் புதிதாக குடியேறிய மந்திர தந்திர ஜெபங்களை ஆராய்ச்சி செய்யும் கமல் காமராஜர்தான் காரணம் என்று சொல்லி, அந்த கிராமத்து மக்கள் ஒன்று சேர்ந்து அவரது மனைவியுடன் எரித்துக் கொல்கின்றனர். இந்த சூழலில் அவரது மகனை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்க்கிறார்கள்.
அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அங்கு பெரிய அளவில் கோயில் திருவிழா நடக்கிறது. அப்போது அந்த திருவிழாவில் கலந்து கொள்ள தனது தாயுடன் சாய் தரம் தேஜ் வருகிறார். அப்போது அந்த திருவிழா நடக்கும்போது கோயில் கருவறைக்கு உள்ளே ஒருவர் அம்மன் முன் ரத்த வாந்தி எடுத்து இறக்கிறார். இதனால் அந்த கிராம மக்கள் முன்னிலையில் கோயில் பூசாரி கோயிலின் புனித தன்மை கெட்டு விட்டது. அதனால் இந்த கிராமத்து மக்கள் யாரும் எட்டு நாட்களுக்கு வெளியூர் செல்லவும், வெளியூரில் உள்ள மக்கள் அந்த கிராமத்துக்கு வரவும் கூடாது என்று தடை போடுகிறார்.
அந்த சமயத்தில் ஊர் தலைவரின் மகளான சம்யுக்தா மீது காதல் கொள்கிறார் சாய் தரம் தேஜ். இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் ஒவ்வொருவராக மரணம் அடைகின்றனர். இந்த மரணங்களுக்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ராம் தரம் தேஜ் முயலுகிறார். இந்த மர்ம மரணங்கள் நடப்பதை ராம் தரம் தேஜ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘’விருபாக்ஷா’‘ படத்தின் மீதி கதை..
நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகனான சாய் தரம் தேஜ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தெலுங்கு மொழியிலிருந்து வந்திருந்தாலும், தமிழ் ரசிகர், ரசிகைகளைக் கவரும் விதத்தில் அழகும் துடிப்பான நடிப்பும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இப்படத்தில் அவருக்கு அதிகமான வேலை இல்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். சென்டிமென்ட், காதல் காட்சிகளில் இயல்பான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களை பெறுகிறார் சாய்தரம் தேஜ்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா மேனன், இப்படத்தின் கதையை உணர்ந்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். . முதல் பாதியில் அமைதியான அழகு பொம்மையாக வலம் வருபவர் இரண்டாம் பாதியில் ஆவி புகுந்து யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அதிரடியில் அசத்தியிருக்கிறார்.
சுனில், பிரம்மாஜி, ராஜீவ் கனகலா, அஜய், ரவி கிருஷ்ணா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சம்ஹத் சைனுதீனின் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. திகில் காட்சிகளில் தனது ஒளிப்பதிவின் மூலம் படம் பார்ப்பவர்களை மிரட்டவும் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல் கேட்கும்படி நன்றாக இருக்கிறது. காதல் காட்சிகளிலும் திகில் காட்சிகளிலும் அவருடைய பின்னணி இசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
வி.பிரபாகர் தெலுங்கு வசனத்தை தமிழில் டப்பிங் செய்யும்போது பிழை இல்லாமல் நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வுடன் தமிழ் வசனங்களை எழுதி இருப்பது பாராட்டத்தக்கது.
இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை, யாருமே யூகிக்க முடியாத பல திருப்புமுனையோடு எழுதி இருப்பதை பாராட்டலாம். கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் வர்மா டண்டு, எளிமையான கதையை எழுதி இருந்தாலும் திகில், திரில்லிங் காட்சிகள் மூலம் நம்மை பிரமிக்க வைத்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். அனைத்து மொழி ரசிகர்களையும் முழுக்க, முழுக்க திகிலில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் வர்மா டண்டு.
மொத்தத்தில், திகில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து இருக்கும் படம்தான் ’விரூபாக்ஷா’.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.