ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு விதத்தில் காதல் பிறந்திருக்கும். அப்படி காதலித்து அது தோல்வி அடைந்து விட்டால் அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வார்கள். இருந்தாலும் தான் காதலித்த அந்தப் பெண்ணை மறக்க முடியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். “தீராக் காதல்” படத்தின் கதையும் மேலே குறிப்பிட்ட மாதிரி தான். ஒரு காதலர்கள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் காதல் தோல்வி அடைந்து அந்த காதலர்கள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழும்போது மீண்டும் அந்த காதலர்கள் சந்திக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுத்திருக்கும் படம் தான் “தீராக்காதல்”
.இப்படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் காதலர்களாக நடித்திருக்கிறார்கள். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்தாலும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் சிவதாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த சூழ்நிலையில் ஜெய் தன்னுடைய வேலை விஷயமாக மங்களூர் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக தான் காதலித்த ஐஸ்வர்யா ராஜேஷை ரயில் நிலையத்தில் சந்திக்கிறார். இருவரும் மனம் விட்டு பேசிய நிலையில், ரயிலில் ஒன்றாக பயணிக்கும் ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் தங்களது பழைய காதல் நினைவுகளை பற்றி பேசுகின்றனர். அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தான் திருமணம் செய்து கொண்ட கணவன் மிகவும் கொடுமைப்படுத்துவதாக கூறி வருத்தப்படுகிறார். ஜெய்யும் தனது மனைவி குழந்தைடன் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவதாக கூறுகிறார்.
இந்த சூழ்நிலையில் ஜெய் மீது மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெய், ‘தனது மனைவி குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் போது எப்படி உன்னை நான் காதலிக்க முடியும்’ என்று அவரை விட்டு விலகி நிற்கிறார். இந்த சூழ்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவனின் கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து செய்கிறார். அதன்பிறகு ஜெய்யை சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். ஆனால் ஜெய் தன் மனைவி, குழந்தை மீது பாசம் வைத்து இருப்பதால் குடும்பத்தை விட்டு வர மறுக்கிறார். ஆனால் ஜெய் இந்த விஷயத்தை தன் மனைவியிடம் சொல்லாமல் மறைக்கிறார். ஜெய்யின் மனைவி சந்தேகத்தின் பெயரில் கேட்கும் போது ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார். இதனால் மன உளைச்சலில் ஒன்றும் புரியாமல் தவிக்கும் ஜெய் இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்தாரா? தனது குடும்பத்துடன் ஒன்றிணைந்தாரா? இல்லையா? என்பதுதான் “தீராக் காதல்” படத்தின் மீதி கதை.
ஜெய் பல படங்களில் நடித்திருந்தாலும், இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு தனது சிறப்பான நடிப்பினால் அனைவரையும் கவருகிறார். தன் மனைவி குழந்தை மீது பாசம் காட்டும் காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறார். தனது பழைய காதலி ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்த பிறகு மன உளைச்சல் ஏற்படும் காட்சிகளில் அப்பாவி தனமாக நடித்து கைதட்டல் பெறுகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய் அனைவரும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்க்கு இவர்தான் பொருத்தம் என நினைக்கக்கூடிய நடிகர் ஜெய்யை தேர்வு செய்த இயக்குனரை பாராட்டினாலும், அவரது எண்ணத்திற்கு ஏமாற்றம் கொடுக்காமல் மிக பொறுப்பாக நடித்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஜெய்யின் காதலியாக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு உண்மையான காதலி எப்படி தத்ரூபமாக நடிப்பாரோ.. அதேபோல அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனது கணவனால் கொடுமை ஏற்பட்ட போதும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிக சாதாரணமாக இயல்பாகவே நடித்திருப்பது பாராட்டத்தக்கது. இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மக்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. இது போன்ற மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.
ஜெய்யின் மனைவியாக நடித்திருக்கும் ஷிவதா, ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் அம்ஜன் கான், ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ, பேபி வரித்தி விஷால் ஆகியோர் நடிப்பில் சிறப்பு செய்து இருக்கிறனர்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் கதாபாத்திரங்களை அழகாக காட்டியிருப்பதோடு, அவர்களின் உணர்வுகளையும் சிறப்பாக காட்சிபடுத்தி இருப்பது பாராட்டத்தக்கது. சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நம் செவிக்கு மகிழ்ச்சியூட்டும் அளவிற்கு இருக்கிறது.
காதலில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் சந்திக்கும்போது அவர்களின் மனதில் ஏற்படும் வேதனைகளையும் மாற்றங்களையும் மிகத் தெளிவாக இப்போது உள்ள இளைய சமுதாய மக்கள், ரசிக்கும் விதத்தில் காதலால் ஏற்படும் பிரச்சனைகளை மிக உன்னதமாக இப்படத்தின் கதையை சிறப்பாக கையாண்டிருக்கிறார் ரோகின் வெங்கடேசன். முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பரிதாபத்தை உண்டாக்கி விட்டு, பிறகு அவர் செய்யும் காரியங்களால் வில்லியாக சித்தரித்து காட்டியிருக்கும் இயக்குனர், யாரும் குறை சொல்லாத அளவுக்கு திரைக்கதை எழுதி சிறப்பாக காட்சிகளை அமைத்திருக்கிறார். ஒரு காதலன் பழைய காதலியை சந்திக்கும்போது என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை மிகத் தெளிவாக ஒரு புதிய கோணத்தில் மாறுபட்ட முறையில் காட்சிகளை அமைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் சொல்லி இருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
மொத்தத்தில் “தீராக்காதல்” அனைவரின் மனதை கவரும் காதல் என்றால் மிகையாகாது.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.