தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக்குனர் திரு வெற்றி மாறன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கம் ஏற்பாடு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி சிறப்பித்தார்.
மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கியதுடன் ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களையும் பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மேலும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
‘உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம் ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம். நண்பர்களுடன் இணைந்து 2000 வரையிலும் கூட செலவிட்டு பார்ட்டி போன்ற விஷயங்களில் நம் நேரத்தை செலவிடுகிறோம். ஆனால் அதிகாலையில் எழுந்து சின்ன சின்ன உடற்பயிற்சிகள் எனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. பெண்கள் வீட்டில் வீணாகப் போகிறதே என்று நினைத்தே பழைய உணவுகளை சாப்பிட்டு அவர்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.
திட்டமிட்டு சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது மீதம் ஆகிவிட்டால் யோசிக்காமல் மற்றவர்களுக்கு கொடுத்து விடுங்கள். கடைசியாக ஆரோக்கியத்தை பற்றி நினைத்து எந்த பயனும் இல்லை. அதேபோல உணவை சரியாக கணக்கிட்டு சாப்பிட நம்மால் முடியும். பொதுவாகவே முதலில் நார்ச்சத்து கொண்ட ஆகாரங்கள், அடுத்து புரதம் கடைசியாக தான் கார்போஹைட்ரேட் என்னும் வழக்கத்தை எப்போது உணவில் அமர்ந்தாலும் பழக்கப்படுத்திக் கொண்டாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உதாரணத்திற்கு முதலில் காய்கறிகளை எவ்வளவு அதிகமாக எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு அதிகமாக எடுத்துக்கொண்டு அதன் பிறகு சாதம் என வழக்கமாக்கிக் கொள்ளலாம்,
இது பிரியாணியை எடுத்துக் கொண்டாலும் சரி போதுமானவரை கறி துண்டுகளை முதலில் அருந்திவிட்டு பின்னர் பிரியாணியை சாப்பிடும் பொழுது சாப்பிடும் அளவும் குறைவாகும் இன்சுலின் அளவிலும் மாற்றங்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். சுத்திகரிக்கப்பட்ட வெள்ளையான சர்க்கரையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் அதுதான் உலகின் அடிமையாக்கும் போதைப் பொருளுக்கு சமம் என்கிறது ஆய்வு முடிவுகள். என ஆரோக்கியம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பத்திரிகையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் சுவாரசியமான பதில்களை கொடுத்தார்.
“வடசென்னை பாகம் 2” நிச்சயம் வரும் அதற்கு முன்பு இன்னும் இரண்டு பட வேலைகள் இருக்கின்றன. அதை எல்லாம் முடித்துவிட்டு நிச்சயம் ‘வடசென்னை பாகம் 2’ ஆரம்பிக்கப்படும். . சூரியை நாயகனாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது ‘அசுரன்’ பட வேலையிலேயே முடிவு செய்து விட்டேன். ‘அஜ்னபி’ என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க நினைக்கும் ஒருவனை அடிப்படையாகக் கொண்ட கதையாக உருவாக்க நினைத்தோம். படப்பிடிப்பிற்கான இடங்கள் எல்லாம் தேர்வு செய்து படப்பிடிப்பை ஆரம்பிக்கும் தருவாயில் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்துவிட்டது. அதனால் அந்த படத்தை துவங்க இயலவில்லை. இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி என்று இயக்குனர் வெற்றிமாறன் தனது சிறப்பு முறையில் நிறைய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
. விழாவில் முக்கிய அம்சமாக உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினராக விழாவை சிறப்பித்த இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி, துணை தலைவர் ராதா பாண்டியன் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்..