ஆர் பி பிலிம்ஸ் சார்பில் மொழிமாற்றம் படங்களுக்கு வசனம் எழுதும் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியிருக்கும் படம் “லவ்”. இப்படத்தில் பரத், வாணி போஜன்,ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் அனே போப், சுவயம் சித்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-பாடலாசிரியர் – ராஜா, இசையமைப்பாளர் – ரோனி ரஃபேல், எடிட்டர் -அஜய் மனோஜ்,ஒளிப்பதிவாளர் – பிஜி முத்தையா, பிஆர்ஒ-சதீஷ் எய்ம்.
தற்போது “லவ்” திரைப்படம் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்படத்தின் விமர்சனத்தைப்பற்றி அலசுவோம்.
கதாநாயகன் பரத் சொந்தமாக ஏதாவது தொழில் செய்து முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல போராடிக் கொண்டிருக்கும்போது, பரத்தை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார் வாணி போஜன். திருமணம் செய்த பிறகு வாணி போஜனிடம் ஒரு வருடம் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரும் வரை காத்திருக்கலாம் என்று சொல்கிறார் பரத். ஆனால் பரத்தால் சொன்னபடி தொழிலில் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு வருடங்கள் கடந்து விட, இதனால் எப்போது பார்த்தாலும் இருவருக்குள்ளும் சண்டை வருகிறது. இச்சூழலில், வாணி போஜன் கர்ப்பமாகி விடுகிறார்.
குழந்தை வேண்டாம் என்று சொல்லியும் கர்ப்பமாகி நிற்கிறாயே..என இருவருக்கும் வாய் சண்டை ஏற்பட்டு அது கைகலப்பில் முடிய வாணி போஜனை பரத் தள்ளி விட தலையில் அடிபட்டு இறக்கிறார் வாணி போஜன். இதனால் அதிர்ச்சியடைந்த பரத் தனது குளியலறையில் மனைவி வாணி போஜனின் உடலை மறைத்து வைக்கிறார். அந்த சமயத்தில் இறந்த மனைவி வாணி போஜன் உயிரோடு வீட்டிற்கு உள்ளே வருகிறார். இறந்த மனைவி வாணி போஜன் எப்படி உயிரோடு வந்தார்? உண்மையில் என்ன நடந்தது? பரத் அதன் பிறகு என்ன செய்தார்? என்பதுதான் “லவ்” படத்தின் மீதிக் கதை.
காதல் காட்சிகளிலும், மது குடித்து விட்டு நடிக்கும் எமோஷனல் காட்சிகளிலும் சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் சில காட்சிகளில் போரடிக்க வைத்து விடுகிறார்பரத். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வீட்டில் முடங்கி மதுவுக்கு அடிமையானதால் மனைவி வாணிபோஜனின் கோபத்துக்குள்ளாகி அவமானப்படும் கணவனாக படத்தில் வாழ்ந்துள்ளார் பரத். பிணத்தை மறைத்து விட்டு என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் காட்சிகளிலெல்லாம் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் பரத்.
வாணி போஜன் தனக்கான காட்சிகளில் அழகு தேவதையாக குளியறையில் செத்த பிணமாக அழகு பொம்மையாக நடித்து அசத்தியிருக்கிறார். கணவனின் நம்பிக்கை துரோகத்தைப்பற்றி கேட்கும்போது தகராறு ஏற்பட்டு எதிர்பாராதமாக இருவரும் அடித்துக்கொள்ளும் காட்சிகளில் சூப்பராக மிக நேர்த்தியாக தன் நடிப்பால் சிறப்பு செய்துள்ளார்.
பரத்தின் நண்பர்களாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா மற்றும் டேனியல் அனே போப் இருவரும் வழக்கமான வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். ராதாரவி மற்றும் சுவயம் சித்தா ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவ்வளவு மெனக்கெடல் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறார். அது படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் முழு கதையும் நகர்ந்தாலும் வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியிருகிறார். பி ஜி முத்தையா.
இசையமைப்பாளர் ரோனி ரஃபேல் இசையில் பின்னணி இசை கதையோடு பயணம் செய்தாலும் பாடல்கள் சுமார் ரகம்தான்.
ஷைன் டாம் சாக்கோ, ரஜிஷா விஜயன், சுதி கோப்பா மற்றும் ஜானி ஆண்டனி ஆகியோர் நடிப்பில் காலித் ரஹ்மான் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு ஒடிடியில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘லவ்’. இதைத்தான் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் ஆர்.பி.பாலா.கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினைகள் குடும்ப வாழ்க்கையை எவ்வளவு சீர்குலைக்கின்றது என்பதை இயக்குனர் ஆர்.பி.பாலா படமாக காட்டியுள்ளார். இருப்பினும் ஒரே வீட்டில் கதை நகர்வதால் சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த கதை சற்று மாற்றியமைத்து தமிழ் ரசிகர்கள் ரசிக்கிற அளவுக்கு படத்தைக் கொடுத்து இருக்கலாம். இன்னும் அதிகமான மெனக்கெடலை ‘லவ்’வுக்கு கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த “லவ்” படம் சுவாரஸ்யம் இல்லாத ஒரு காதல் கதையாக இருக்கிறது.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.