மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் ‘இறுகப்பற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

சென்னை:

வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்குத் தரமானத் திரைப்படங்களைத் தருவதில் தொடர்ந்து தங்களின் பங்கைச் சிறப்பாக செய்து வருகிறது.

தற்போது பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளனர்.

மனித உறவுகளின் சிக்கலான தன்மைகளைப் பற்றி பேசும் இந்த படம், ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத் தொடும் இசையையும், கார்த்திக் நேதாவின் கவிதையான வரிகளையும் கொண்டுள்ளது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகாம்பரநாதர் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

படத்தைப் பற்றி பேசுகையில், “நாங்கள் மீண்டும் ஒரு தனித்துவமான திரைப்படத்துடன் வருகிறோம், இது உணர்ச்சிகரமான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாக பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஜோடிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

திருமணமான தம்பதிகளுக்கிடையேயான புரிதலைப் பற்றி தெரிந்து கொள்ள, தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்வின் மூலம் தம்பதிகளிடையே நேர்மறையான தாக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வைப் பற்றிய சிறப்பு வீடியோ விரைவில் வெளியிடப்படும்.

‘இறுகப்பற்று’ செப்டம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

Featuredupcoming multi-starer movie ‘Irugapatru’ NEWS
Comments (0)
Add Comment