மதுரைக்கு அடுத்த திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருவறை என்ற கிராமத்தில் வாழும் மக்கள் தங்களுக்கு என்று ஒரு தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் மிகவும் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருகிறார்கள். வெளியூரில் உள்ள எந்த ஆட்களும் அனுமதி இல்லாமல் அந்த ஊருக்குள் செல்லவும் முடியாது. அதே சமயம் உள்ளூரில் உள்ள ஆட்களும் அனுமதி இல்லாமல் கிராமத்தை விட்டு வெளியே செல்லவும் முடியாது. இப்படி மிகுந்த ஒழுக்கமாகவும் கட்டுப்பாடுடனும் வாழும் இந்த ஊருக்கு சிறந்த கிராமம் என்று பட்டம் வழங்க கவர்னர் முடிவு செய்கிறார்.
ஆனால், அந்த பட்டத்தை கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால் கோபமடையும் அமைச்சர் ராதாரவி கருவறை கிராமத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். கவர்னர் கொடுக்கும் விருதை கருவறை கிராம மக்கள் வாங்க மறுப்பதன் காரணம் என்ன? அந்த கிராம மக்கள் ஒற்றுமையாகவும் கட்டுப்பாடுடனும், மாறக் காரணமானவரின் கதை என்ன? என்பதுதான் ‘சான்றிதழ்’ படத்தின் மீதிக்கதை.
வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வரும் கதாநாயகன் ஹரிகுமார், ஒரு கிராமத்தையே முற்றிலும் மாற்றக்கூடியவர்தான் என்று அனைவரும் நம்பும்படி நடித்திருக்கிறார். அமைதி வேகம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி, இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார் .
ஹரிகுமாரைக் காதல் காட்சிகளில் நடிக்க வைக்க வேண்டாமென முடிவெடுத்த இயக்குநர், கருவறை கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் – ஆஷிகா அசோகன் ஆகியோரது காதல் காட்சிகளை இளைஞர்களைக் கவரும் வண்ணம், இருவரது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பு செய்து இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் கவுசல்யா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி, அருள்தாஸ், ரவி மரியா. மனோபாலா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தனிஷா குப்பண்டா, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ ஆகியோர் படத்தில் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
அழகான கிராமம் கதைக்களம் என்றதும் ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன், பலவித கோணத்தில் முழு கிராமத்தையும், பாடல் காட்சிகளையும் மிக அழகாக படமாக்கி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் சிறப்பாக பயணித்திருக்கிறது.
மிகவும் மோசமான ஒரு கிராமம் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் மாறுகிறது என்பதை மையமாக வைத்து, ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம் என்பதை, உணர வைத்து இப்படத்தை அனைவரும் ரசிக்கும்படி உன்னதமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெயச்சந்திரன்.
மொத்தத்தில் சில குறைகளை மறந்து ’சான்றிதழ்’ படத்தைப் பார்த்தால் கண்டிப்பாக ரசிக்கலாம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.