புதுமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வான் மூன்று’ என்ற இப்படத்தை சினிமாக்காரன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஆஹா ஓடிடி’ தளத்திற்காக வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளி வர உள்ள இந்த படத்தின் கதை எப்படி என்பதை பார்ப்போம்,
காதலில் தோல்வி அடைந்து விட்டதால் அம்மு அபிராமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றபோது, அவரைக் காப்பாற்ற அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். அங்கு ஏற்கனவே காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஆதித்யா பாஸ்கரையும் மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கின்ற சூழ்நிலையில் அம்மு அபிராமியும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இரண்டாவதாக அபிராமி வெங்கடாசலம் தன் வயிற்றில் குழந்தை வளரும் சூழ்நிலையில் அவருக்கு மூளைக்கட்டி நோய் இருப்பதால் அவரது காதல் கணவர் வினோத் கிஷன் மருத்துவமனையில் சேர்த்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். இந்நிலையில் அபிராமி வெங்கடாசலம் மூளை அறுவை சிகிச்சைக்கு முன்பு தன் தந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்போது அவரை அரவணைத்து ஆறுதல் சொல்கிறார் அவரது அன்பு கணவரான வினோத் கிஷன்.
இதனை அடுத்து டெல்லி கணேஷ் தனது மனைவி லீலா சாம்சன் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் அவரது ஆபரேஷனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலையில், தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் டெல்லி கணேஷ் பணம் தேடி அலைகிறார். இப்படி மூன்று கதைகளை முக்கோண கதையாக உருவாக்கி மருத்துவமனையை மையமாக வைத்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கி இருக்கும் படம் தான் “வான் மூன்று”
ஆதித்யா பாஸ்கர் தான் ஒரு ஏழை என்பதால் தன்னைவிட்டு வேறொருவனை திருமணம் செய்துக் கொள்ளும் காதலியையும், தன் காதலையும் மறக்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயலும் இளைஞராக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். காதலியால் தனக்கு ஏற்பட்ட சோகத்தை மறந்து அம்மு அபிராமியிடம் தன் மனதில் உள்ளவற்றை சொல்லும் காட்சிகளில் மனதைக் கவர்கிறார்.. இவரும், இவரது அம்மாவான நக்கலைட் தனம் இருவரும் பேசும் சில வசனங்களால் அந்தக் காட்சிகளை ரசிக்க முடிகிறது.
அம்மு அபிராமியும், தன் சோக நடிப்பை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். தன் தாயின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுவிட்டு, தன் தந்தை அவரை விட்டு எங்கு சென்றார் என்றே தெரியாத நிலையில் தாயை அணைத்துக் கொண்டு அழும்போது நம்மை கலங்க வைத்து விடுகிறார் அம்மு அபிராமி.
திருமணமாகி பத்து மாதங்கள் வாழ்ந்த நிலையில் தனது காதல் மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் வினோத் கிஷன் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம் இருவரும் மிக சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். அபிராமி வெங்கடாச்சலத்தின் காதல் கணவராக நடித்திருக்கும் வினோத் கிஷன் அடக்கமே உருவாகக் காட்சியளித்து மாமனாரிடம் கோபப்பட்டு பின்பு அமைதியாகி பேசும்போது நமக்கே பரிதாப உணர்வை ஏற்படுத்துகிறார். மூளைக்கட்டி பாதிப்பால் உயிரோடு இருப்பேனா…என்று வேதனைப்பட்டு கலங்கும் காட்சிகளில் அபிராமி வெங்கடாச்சலத்தின் நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு மிகுந்த பலம் சேர்த்திருக்கிறது.
நாற்பது வருடங்களாக ஒற்றுமையுடன் ஒருவரைஒருவர் புரிந்துக் கொண்டு வாழ்ந்த தம்பதியினராக டெல்லி கணேஷூம், லீலா சாம்சனும் நம் மனதைப் பெரிதும் கவர்ந்துவிட்டனர். அவர்களது அனுபவமான அற்புதமான நடிப்பு, விட்டுக்கொடுத்து போகும் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறது. பல ஆண்டுகள் பல படங்கள் தன் நடிப்பின் உச்சக்கட்டமாக தனது தற்போதைய வயதுக்கேற்ற நடிப்பை மிக சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் டெல்லி கணேஷ். அவருக்கும், அவரது நடிப்பிற்க்கும் பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.
இப்படத்தில் வரும் கதையில் முழுப்படமும் மருத்துவமனையில் நடக்கிறது. ஒரே இடத்தில் கதை நகர்ந்தாலும் வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளை வித்தியாசமாக காண்பித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ்.
ஆர் 2 பிரதர்ஸின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கிறன. பின்னணி இசையும் மூன்று கதைகளை முக்கோண கதையாக உருவாக்கி இருப்பதால் பல காட்சிகளில் இருக்கும் காதல் உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி உயிர் கொடுக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
தற்போதுள்ள காலகட்டத்திற்க்கு ஏற்றவாறு காதல் என்பது திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்பாக மட்டும் இல்லாமல், பின்பாகவும், வாழ்க்கை முழுவதுமாக இருக்கக் கூடியது என்பதை மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.எம்.முருகேஷ். அனைவரும் நன்கு புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லியிருக்கும் இந்தப் படம், இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைத்து வயதினருக்கும் கண்டிப்பாக ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் படமாக மிக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘வான் மூன்று’ படத்தை கண்டிப்பாக ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.