ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. ஆறு எபிசோடுகள் வெளியீடு!

45

சென்னை:

ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில்  வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகlளை இந்த தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள  நெக்சஸ் விஜயா மாலில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ‘வேற மாறி ஆபிஸ்”-ன் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆஹா ஓடிடி இணையதளத்தின் தலைமை நிர்வாகப்  பொறுப்பில் இருக்கும் கவிதா ஜெளபின் பேசும் போது,

“இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும். ஆஹா ஓடிடி இணைய தளத்தில் “வேற மாறி ஆபிஸ்”  புதிய தொடரை தொடங்கி வைப்பது மிகுந்த பெருமை அளிக்கும் விஷயமாகும்.  வேற மாறி ஆபிஸ் என்கின்ற தலைப்பில் உள்ள “வேற மாறி”-க்கும் ஆஹா ஓடிடி க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  இந்த ஓடிடி தளத்தை தொடங்கும் போது வித்தியாசமான கதைக்களங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் தான் இதைத் துவங்கினோம்.  பேட்டைக்காளி, இரத்தசாட்சி இப்படி ஆஹாவில் வெளியான எல்லாத் தொடருமே வித்தியாசமான கதைக்களம் கொண்டது.  அந்த வரிசையில் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் ஒன்லைன் கேட்கும் போதே அது புதியதாகவும் ஜனரஞ்சகமானதாகவும் இருக்கும் என்று தோன்றியது.

மேலும் இந்தக் கதைக் களத்தை எடுக்கும் போது தற்போது நிலவும் வேலை இழப்பு பிரச்சனைகள், ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் வளர்ச்சி போன்ற சமகாலப் பிரச்சனைகளையும் கதைக்குள் கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை இருந்தது.  டீசரில் வரும் காட்சியைப் போல்  வேலை செய்யும் இடத்தை சில்ரன்ஸ் பார்க் ஆகவும் அடுத்த நொடியே ஜூராசிக் பார்க்-ஆகவும் பார்த்த அனுபவங்கள் நம் எல்லோருக்குமே இருக்கும். அதனால் இந்த வேற மாறி ஆபிஸ்- உங்கள் அனைவருக்குமே பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  ஆஹா ஓடிடி இது போன்ற தனித்துவமிக்க கதைகளை உங்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஆஹா ஓடிடி –யின் பயனாளர்களாக எல்லோரும் மாறுங்கள். “வேற மாறி ஆபிஸ்”க்கு கொடுத்த அதே ஆதரவை எங்கள் தளத்தில் வெளியாகும் எல்லாத் தொடர்களுக்கும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி. என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்தின் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த கிரிஷ் பேசும் போது,

“பொதுவாக ஒரு தொடர் வெற்றி பெற்றப் பின்னர் தான் அதற்கான வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த “வேற மாறி ஆபிஸ்” ஆறு எபிசோடுகள் மட்டுமே வெளியான நிலையிலேயே 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. எனவே இந்தத் தொடரை இன்னும் அதிகமான மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் இந்த நிகழ்வை சற்று முன்கூட்டியே நடத்துகிறோம்.  மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் எங்களுக்கு இது போன்ற ஆர்ட்டிஸ்டுகள் கிடைக்கும் பொழுது எங்களது வேலை இலகுவாகிவிடும். ஏனென்றால் இவர்கள் அனைவருமே தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த ஆர்.ஜே-க்கள், விஜே-க்கள்,  மற்றும் சீரியல் நடிகை நடிகைகள். இதனால் மக்களிடையே “வேற மாதிரி ஆபிஸ்”க்கு கிடைத்திருக்கும் வீச்சி அளப்பரியது’ என்றார்.

வி.ஜே. பப்பு பேசும் போது,

“வேற மாறி ஆபிஸ்” தொடர் ஒவ்வொரு வாரமும் வியாழன்,  வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. மறக்காமல் இந்த தொடரைப் பார்த்து ஆதரவு அளியுங்கள். ஆஹா ஓடிடி தளத்தை சஃப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். ஒரு படைப்பின் வீச்சு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், அது நாமாக தேடிப் போய் வேண்டுகோள் வைப்பதாக இருக்கக் கூடாது.  அது தான் உண்மையான வீச்சு.  அந்த வெற்றியை “வேற மாறி ஆபிஸ்” தொடர் பெற்றிருக்கிறது. ஏனென்றால் நான் திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு வெற்றியை கொண்டாடும் நிகழ்விற்குப் போயிருந்தேன் அப்பொழுது அவர்கள் உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்  என்று சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை. பின்னர் தான் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் இரண்டாம் எபிசோடை அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குப் புரிந்தது. இதுவே அதன் வெற்றி. மேலும் இந்திய அளவில் எந்த தொடரிலும் இல்லாத புதுமையாக இத்தொடரில் 50 எபிசோடுகள் நாங்கள்  எடுக்க இருக்கிறோம்.  இதுவும் ஒரு சாதனை தான்.  “வேற மாறி ஆபிஸ்” தொடர் பார்ட் 1, 2,3 என்று சென்று கொண்டே இருக்க வேண்டும்.  அதில் நாங்களே நடிக்க வேண்டும்.  இனி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..” என்று பேசினார்.

ஆர்.ஜே. சரித்திரன் பேசும் போது,

என் கதாபாத்திரம் ஒரு சிடுமுஞ்சி ஹெச்.ஆர் கதாபாத்திரம்.  எப்பொழுதும் வடை போச்சே என்று நான் தான் பிற கதாபாத்திரங்களை கலாய்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த “வேற மாறி ஆபிஸ்” தொடரில் எல்லோரும் என்னை கலாய்ப்பார்கள்.  எவருக்குமே என்னைப் பிடிக்காது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்.  இன்றைய காலச்சூழலில் பணிச்சுமை எவ்வளவு அழுத்தத்தைக்  கொடுக்கிறது என்பதும் இக்கதையில் இருக்கிறது. அனைவரும் இந்தத் தொடரைப் பார்த்து ஆதரவு தாருங்கள். நான் அடிமட்ட நிலையில் இருந்து பல தடைகளை அவமானங்களை கடந்து இந்த இடத்திற்கு வந்தவன். அதனால் உண்மையாகவே நான் ஹெச்.ஆர் என்னும் பதவியில் இருந்தால் கூட நான் அனுபவித்த கொடுமைகளை இன்னொருவருக்கு செய்ய மாட்டேன். அதுதான் மனிதம் என்று கருதுகிறேன்” என்று பேசினார்.

சின்னத்திரை நடிகரான விஷ்ணு விஜய் பேசும் போது,

இத்தொடரில் நான் “ஜோ” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  இந்த ஷாப்பிங் மாலில் எப்படியும் பல “ஜோ” –க்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.  “ஜோ” எப்பொழுதும் ஜாலியாக ஊர் சுற்றும் ப்ளே பாய் கதாபாத்திரம். ஆனால் அந்த கதாபாத்திரத்தை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.  எல்லா பெண்களும் “ஜோ”விடம் தான் பாதுகாப்பாகவும் நட்பாகவும் உணர்வார்கள். அதனால் அவனைச் சுற்றி எப்பொழுதும் பெண்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.  என்னுடன் நடித்த சக நடிகர்களுக்கு அது வயிற்றில் புகைச்சலைக் கொடுத்தது.  டைரக்டரிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பேன். அவர் ஒன்றும் இல்லை. அங்கு போய் உட்காருங்கள் என்று என்னை அனுப்பிவிட்டு, என்னோடு பேசிக் கொண்டு இருப்பதற்கு நான்கைந்து பெண்களை அனுப்புவார்.  ஒரு Guardian Angel கதாபாத்திரம் எனக்கு. ஆனால் ஆர்.ஜே விஜய் நடித்த  கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  “வேற மாறி ஆபிஸ்” தொடர் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது. உங்கள் நேரத்தை வீணாக்காது.  கண்டிப்பாக இக்கதையில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்துடன் உங்கள் குணாதிசயம் ஒத்துப் போகும். இந்தத் தொடரைப்  பார்த்து ஆதரவு கொடுங்கள். ஆஹா ஓடிடி இணையதளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள் என்று பேசினார்.

’எமர்ஜென்ஸி’, ‘வல்லமை தாராயோ’ ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களின் இயக்குநரும் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் இயக்குநருமான சிதம்பரம் மணிவண்ணன் பேசும் போது,

ஆஹா ஓடிடி இணையதள நிர்வாகிகளுக்கும், என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் சத்யா,  கலை இயக்குநர் வாசுதேவன், இசையமைப்பாளர் சரண் ராகவன், எடிட்டர் சித்தார்த்தா ரவீந்திரநாத், காஸ்டியூம் டிசைனர் சிமோனா எழுத்தாளர் சத்யா சரவணன் என அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த மேடை பலருக்கும்  முதல் மேடை.  நான் இதற்கு முன் மூன்று வெப் தொடர்கள் இயக்கி இருந்தாலும் இது போல் ஒரு விழா மேடை இதுவே முதல் முறை, இந்த வெஃப் தொடரைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் பொதுமக்களிடம் கொண்டு போய் சேருங்கள். உங்களால் தான் அது முடியும்.  தொடரில் நடித்த அனைவருமே பிஸி ஆர்டிஸ்ட்.  வி.ஜே, ஆர்.ஜே, ஸ்டேண்ட் அப் காமெடியன்கள், சீரியல் நடிகர் நடிகைகள்  அனைவரையும் ஒன்றிணைப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால்  என் உதவி இயக்குநர்கள் சூர்யா, விஜய் ரத்னம், பூர்ணசந்திரன் மற்றும் மேலாளர் வீர சங்கிலி அவர்களும் சிறப்பாக பணியாற்றி என் வேலைப் பளுவை பெரிதும் குறைத்து உதவினார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று பேசினார்.

நடிகரும், எழுத்தாளரும், இயக்குநரும் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் தயாரிப்பாளரும் ஆன சிவகாந்த்  பேசும் போது,

“கனா காணும் காலங்கள்” சீரியல் முதற்கொண்டு நான் இயக்கத்தில் இருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரை நான் தயாரிக்க முன்வந்த போது என்னை ஆதரிக்க ஆள் இல்லை. நீ இயக்கினால் நாங்கள் தயாரிக்கிறோம் என்று சொன்னார்கள், ஆனால் நான் தயாரிக்கும் போது யாரும் சப்போர்ட் செய்யவில்லை.  கவிதா மேடம் தான் என் மேல் நம்பிக்கை வைத்து இந்தத் தொடரை தயாரிக்க உதவி புரிந்தார். அது போல்  ஒளிப்பதிவாளர் சத்யா,  எடிட்டர்  சித்தார்த்தா ரவீந்திரநாத், எழுத்தாளர்கள் சத்யா சரவணன் போன்றோர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இது ஒரு ப்ரெண்ட் ப்ராஜட். ஏனென்றால் இது முழுக்க முழுக்க நண்பர்களின் ஆதரவில் உருவானது தான்.  எனக்கும் இதுதான் முதல் மேடை.  தயாரிப்பு என்பது குருவி தலையில் பனங்காய் வைத்த கதை தான்.  இத்தனை ஆர்டிஸ்டுகளை ஒருங்கிணைப்பதற்குள் போதும் போதும் என்று  ஆகிவிடும். கலை இயக்குநர் வாசு அவர்கள் எங்களுக்கு ஆபிஸ்  போன்ற ஒரு அற்புதமான செட்டை உருவாக்கிக் கொடுத்தார். அவருக்கு மிகப்பெரிய நன்றி.  கதாபாத்திர தேர்வில் முதலில் நாங்கள் தேர்வு  செய்தது “Guardian Angel” ஆன விஷ்ணுவைத் தான். ஏனென்றால் அவர் கனா காணும் காலங்கள் காலத்தில் இருந்தே தொடர்பில் இருப்பவர்.  பின்னர் ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். நாங்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தான் இந்த வெஃப் தொடரை உருவாக்கி இருக்கிறோம். “வேற மாறி ஆபிஸ்”-க்கு பின்னால் வேற மாதிரியான பல கதைகள் இருக்கின்றன.  இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம் என்று பேசினார்.

ஆர்.ஜே. மிர்ச்சி விஜய் பேசும் போது,

எங்கள் அணியே மிகவும் கற்பனை நயம் வாய்ந்த அணி.  வந்தவுடனே நான் பேசிவிடுகிறேன் என்று  கூறினேன்.  இல்லை  கடைசியாகப் பேசு என்று பாதி பேர் கிளம்பிச் சென்று இருக்கைகள் காலியானப்  பின்னர் என்னை பேச அழைத்திருக்கிறார்கள்.  படப்பிடிப்பு தளத்தில் என்னோடு நடித்த சக நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மேடையில் எல்லாரும் சிறப்பாக நடிக்கிறார்கள். என்னை தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள்.  விக்கல் விக்ரம் என்னிடம் வந்து இதே டயலாக்கை கூறினான். அப்பொழுது தான் எல்லோரையும் ஒரே டயலாக் பேசி ஓகே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எங்கள் இயக்குநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவருக்கு நன்றி.  நண்பரும் தயாரிப்பாளருமான சிவகாந்த் அவர்களுக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.  நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது.  நீங்களும் பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள். “ என்று பேசினார்.