“அடியே” திரைப்பட விமர்சனம்!

49

சென்னை:

பள்ளியில் படிக்கும் போது தன் தாய் தந்தையை இழந்த கதாநாயகன் ஜிவி பிரகாஷ்,  தனது நண்பன் மூலம் அவரது வீட்டில் வாடகைக்கு  குடியிருக்கும் பேச்சிலர்ஸ் இடத்தில் அவரை தங்க வைக்கிறார். இந்த சூழ்நிலையில்  தன் வாழ்க்கையை வெறுத்த நிலையில்  தற்கொலைக்கு முயற்சிக்கும்போது அங்குள்ள தொலைக்காட்சியில் தங்களது பள்ளியில்  படித்த மாணவி கௌரி கிஷன் பேட்டியை பார்க்கிறார். அந்த பேட்டியில் அவர் சொன்ன ஒரு விஷயம் அவரை தற்கொலையிலிருந்து மீட்கிறது. காரணம் அவர் பள்ளியில் படிக்கும் போது சொன்ன ஒரு விஷயம்தான் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷனை காதலிக்க தூண்டுகிறது.

அதன் பிறகு கௌரி கிஷனை சந்திப்பதற்காக அவரது வீட்டின் அருகே பல தடவை முயற்சி செய்கிறார் ஜி.வி.. ஆனால் கௌரி கிஷனுக்கு ஜிவி பிரகாஷ் தெரியாது என்பதால் தன் காதலை எப்படியாவது அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கிறார்.   இந்த சூழ்நிலையில் கௌரி கிஷன் வீட்டில் பணிபுரியும் ஒருவரிடம் டிரைவர் வேலைக்காக,  ஜீ வி பிரகாஷ் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது விபத்துக்குள்ளாகிறார். அந்த விபத்துக்கு பிறகு கண் விழித்து பார்க்கும் போது வேறு ஒரு உலகத்தில் நடமாடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதாவது அதே சென்னை என்ற இடத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்படும் பழைய இடத்தில் இருக்கிறார்.

அப்போது எல்லாமே தலைகீழாக மாறி பல வித விந்தைகளுடன் அனைவரும் வேறு வேறு பெயரில் அங்கு உலா வந்து கொண்டிருக்கிறனர். அங்கு தான் காதலித்த கௌரி கிஷன் தனக்கு மனைவியாக கூடவே இருக்கிறார். இதை நினைத்து வேதனைப்படும் ஜிவி பிரகாஷ்  உண்மையிலேயே கௌரி கிஷன் தன் மனைவி தானா அல்லது கனவா என்று யோசிக்கிறார். பிறகு சில சந்தேகங்களுடன் கௌரி கிஷனுடன் பேசும்போது அவர் தன் மனைவி தான் என்று மன நிம்மதியோடு அவளுடன் வாழ்கிறார். இந்த சூழ்நிலையில் மறுபடியும் பழைய உலகிற்கு வரும் ஜிவி பிரகாஷ் அங்கே அவர் காதலி கௌரிகிஷன் தன் நண்பனை காதலிப்பது தெரிய வருகிறது. இதனால் வேதனையாக  இருந்த ஜி வி பிரகாஷ் மறுபடியும் பழைய உலகிற்கு போகிறார்.. கடைசியில் இந்த இரு வேறு உலக கதையில் ஜி வி பிரகாஷ் தன் காதலி கௌரிகிஷனை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா என்பதுதான் “அடியே” படத்தின் மீதி கதை.

டைம் டிராவல், டைம் லூப், பேர்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பனைகள் உள்ள கதைகள் எல்லாம் ஹாலிவுட் சினிமாவுலகம், மிக அற்புதமான படைப்புகளாக மாற்றித் கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை தமிழ் சினிமாவுக்காக மாற்றியமைக்கும்போது இது சாத்தியமா என்று கேள்வி கேட்க நினைக்கும் நேரத்தில் இது சாத்தியமே என்று நிரூபித்து காட்டிய படம் தான் “அடியே”.

ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பொருத்தமான கதாபாத்திரம்.  இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் மாறுபட்ட முறையில் ஏற்று நடித்திருக்கும் சிறந்த கதாபாத்திரம் என்றால் இது மிகையாகாது. மிக அற்புதமான நடிப்பில் ரசிகர்களை ஏமாற்றாமல் அனைவரையும் கவருகிறார். பள்ளி மாணவனாகவும், இளம் வாலிபனாகவும் இரண்டு கதாபாத்திரங்களிலும் மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.  மீசை தாடியுடன் அதிக தலை முடி, என ஒரு  காதல் மயக்கத்தில் உலா வரும் இவர் உடல் மொழியில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கௌரி கிஷன், அழகாக வந்து சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். கதையை சரியாக புரிந்து கொண்டு  இவர் தனது  முக பாவங்களை மாற்றி நடித்திருப்பதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தில் கௌரி கிஷனை ஜீவி மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவருமே காதலிக்கின்ற மாதிரி உணர்வு எற்படுகிறது. படம் முழுவதும் அதிக காட்சிகளில் இருவருமே போட்டி போட்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் நண்பர்களில் வழக்கம்போல ஆர் ஜே விஜய் கலாய்ப்பதில் தியேட்டரை கலகலக்க வைக்கிறார். முதல் உலகத்தில் வாசிம் அக்ரமாகவும், இரண்டாம் உலகத்தில் வக்கார் யூனுஸ் ஆகவும் அவர் வருவது சிரிக்க வைக்கிறது.

கெளதம் மேனனாக நடித்திருக்கும் வெங்கட் பிரபு, தன்னை தானே நக்கலுடன் நையாண்டி செய்யும்  காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைத்து நடிப்பில் அசத்தி இருக்கிறார்..

ஏற்கனவே டைம் டிராவல் கதைகள் பல வந்திருந்தாலும், தற்போது  டைம் டிராவல், டைம் லூப், பேர்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை மையமாக வைத்து மாறுபட்ட  முறையில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திக். இந்த மாதிரி கதைகளில் திரைக்கதையை மிகவும் முக்கியம். என்பதை தெளிவாக  புரிந்துக் கொண்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் சில காட்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும் படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளிடம்  மிக சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு ஏற்றவாறு படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைப்பதோடு, இளம் காதலர்களை ரசிக்க வைக்கும்படி இப்படம் இருக்கிறது.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு  சிறப்பாக காட்சிப்படுத்தி காட்டியிருப்பதை பாராட்டலாம். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகுந்த பலத்தை சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், ‘அடியே’ படம் மக்கள் மத்தியில் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.