“ஹர்காரா” திரைப்பட விமர்சனம்!

35

சென்னை:

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக  நடித்துள்ளனர். கதாநாயகியாக கௌதமி  நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.

150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்ட காலத்தில் “ஹர்காரா”  என்ற பெயரில் ஒரு தபால்காரரின் வாழ்க்கையை குறிப்பாக மலை பிரதேசங்களில் இருக்கும் ஒரு தபால்காரன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும், நமக்கு தெரியாத சில முக்கிய விஷயங்களையும் சிறப்பாக நம் கண் முன் நிறுத்தி இருக்கும் படம் தான் இந்த “ஹர்காரா” நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பிரீயட் மற்றும் இன்றைய நிகழ் காலத்தை கலந்து சொல்லியிருக்கும் இப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் ஒரு தபால்காரராக நடித்திருக்கிறார்..

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈசன்மலை என்ற கிராமத்தில் இயங்கி வரும் தபால் நிலையத்தில் காளி வெங்கட் போஸ்ட்மேனாக பணியாற்றுகிறார். குறைந்த மக்கள் தொகை கொண்ட ஈசன் மலை கிராமத்தில் பணிபுரிய வந்திருக்கும் அவருக்கு அரசு வேலை என்பதால் திருமணம் செய்துக் கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்.  அந்த மலை கிராமத்தில் காளி வெங்கட்  வந்தவுடன் மக்கள் குறைந்த கல்வியறிவுடன் இருப்பதால் ஒன்றும் புரியாமல் அந்த அஞ்சலகத்தை முதியோர் உதவித்தொகை, சிறு சேமிப்பு போன்ற பல பண பரிமாற்றங்களுக்காக அந்த கிராம மக்கள் சார்ந்திருக்கிறார்கள்.  இதனால் பல தொல்லைகளுக்கு ஆளான காளி வெங்கட்  அந்த கிராமத்தை விட்டு வெளியேற  நினக்கிறார். அங்கு யாரும் படிப்பறிவு இல்லாமல் இருப்பதால் தபால் நிலையத்தை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக கூட்டுறவு வங்கியைத் திறக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில் அரசுக்கு மனு ஒன்றை எழுதி, அந்த மனுவில் கிராமவாசிகளின் கட்டைவிரல் பதிவை வேறு ஒரு காரணம் சொல்லி வாங்குகிறார்.

இந்த நடவடிக்கையால் அங்குள்ள தபால் நிலையம் மூடப்பட்டால் தனக்கு வேறொரு இடத்திற்கு மாற்றலாகி, அங்கிருந்து சென்று விடலாம் என்று கருதுகிறார். அந்த சமயத்தில் ஒரு வயதான பெண்மணிக்கு மாதேஸ்வரன் மலையில் ஒரு அரசாங்க தபால் வர அதை பல மைல்கள், பல மலைகளை கடந்து கொண்டு போய் கொடுக்க வேண்டிய  சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த கடிதத்தை கொடுக்க செல்லும்போது, அங்கு செல்லும் வழியில் ஒரு முதியவர் காளி வெங்கட்டிடம், இந்த மலைக்கிராமத்தில் 150 வருடங்களுக்கு முன்பு முதல் முன்னோடி தபால்காரன் மாதேஸ்வரன் என்றும், அங்குள்ள  மக்கள் இப்போது கடவுளாக வணங்கும் ஹர்காராவைப் பற்றியும் சொல்கிறார். ஹர்காராவின் கதையைக் கேட்ட  காளி வெங்கட்டின் மனம் மாறுகிறது. கடவுளாக வணங்கும் அந்த மாதேஸ்வரன் யார்? அவர்  மக்களுக்காக என்ன தியாகம் செய்தார்? என்பதுதான் ‘ஹர்காரா’  படத்தின் மீதிக் கதை..

தபால்காரராக நடித்திருக்கும் காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.. 33 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத தனது குமுறலை வெளிப்படுத்துவதிலும் சரி, மலைமக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளாமல் தடுமாறும்போதும் சரி,  அவர்களது அன்புத்தொல்லையில் சிக்கி கஷ்டப்படுவதிலும் சரி, தனது யதார்த்தமான நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

மலை கிராமத்தில் குல சாமியாக வாழ்ந்து வரும் மாதேஸ்வரன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் ராம் அருண் கேஸ்ட்ரோ நடிப்பில் மட்டும் அல்லாது இயக்குனராக படத்தின் மொத்த பொறுப்பையும் தனது தலையில் வைத்து தாங்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும், கதைக்கேற்றவாறு திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.  அற்புதமான கதையை கையில் எடுத்து, மாறுபட்ட முறையில் திரைக்கதை அமைத்து ஜனரஞ்சகமாக கொடுத்திருப்பது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். அத்துடன் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. நடிப்பில் இது அவருக்கு முதல் படமா என்று கேள்வி கேட்க தோன்றுகிறது. எந்தவித முன் அனுபவம் இல்லாமல் ஒரு படத்தை இயக்கியும், கதாநாயகனாக  மிக சிறப்பாக நடித்திருப்பதுடன், சிலம்பம் சுற்றுவதிலும் அசத்தியிருக்கிறார் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ. பிரிட்டிஷ் ஆட்சி கால தபால் பணியை மிக துல்லியமான  காட்சியாக இன்றைய சமுதாயத்திற்கு புரியும்படி மலை கிராமத்தையும், மக்களின் அடிமைதன காட்சிகளையும் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

கதாநாயகியாக நடித்திருக்கும் கவுதமி செளத்ரியின் கதாபாத்திரம் சிறியது என்றாலும் நிறைவாகவே  நடித்திருக்கிறார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்திருக்கும் நிக்கோலா ஃபுஸ்ட்டேர், பாலு போஸ், அம்பேத், கயல் விஜயலட்சுமி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் மனதில் நிற்கும்படி தங்களது கதாபாத்திரத்தில் சிறப்பாக  நடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் ஒளிப்பதிவாளர் பிலிப் ஆர் சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் ஆகியோரின் பிரமிக்க வைக்கும் காட்சிகளும், மலை கிராமங்களில் பயணிக்கும் தபால்காரர்களின் வலி மிகுந்த வேதனை பயணத்தை அனைவரும் உணரும்படி காட்சிகளை இயற்கை எழிலோடு படமாக்கப்பட்டு  இருப்பது பாராட்ட வேண்டும்.

ராம் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான் என்றாலும் கேட்கும்படி இருக்கிறது.  பின்னணி இசை ஒவ்வொரு காட்சிகளுக்கும் பெரிய  பலத்தை சேர்த்திருக்கிறது.

தபால்காரர்களின் பணி ஒரு கடிதத்தை ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு கொண்டு செல்வது மட்டும் அல்ல, அந்த காலத்தில் தங்களது உயிரையும் பணயம் வைத்து அந்த பணியை செய்தார்கள், என்பதை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘ஹர்காரா’ படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு படமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஹர்காரா’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்த்து ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.