“ஜவான்” திரைப்பட விமர்சனம்!

83

சென்னை:

பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள இயக்குனர் அட்லி முதன் முதலில் இயக்கியுள்ள படம் “ஜவான்” . ஷாருக்கான் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க,  நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முதன்மை  கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இபடத்தின் கதையைப் பொறுத்தவரையில்:

“ஜவான்” படம் துவங்கும்போது ஆற்றில் அடிபட்டு ரத்த காயங்களுடன் மிதந்து வரும் ஷாருக் கானை அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு காப்பாற்றுகின்றனர். அந்த சமயத்தில் பல தீவிரவாதிகள் அந்த ஊருக்குள் புகுந்து தாக்குகின்றனர். தன் உடலில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஷாருக் கான்,  திடீரென கண் விழித்து அந்த தீவிரவாதிகளை அடித்து விரட்டி அந்த ஊர் மக்களை காப்பாற்றுகிறார். இதனால் அந்த ஊர் மக்களுக்கு ஷாருக்கான்  மீது பெரிய மரியாதை ஏற்படுகிறது. இந்த சூழலில் ஷாருக்கான் தலைமையில் ஆறு பெண்கள் கொண்ட குழு ஒன்று சேர்ந்து அங்குள்ள மெட்ரோ ரயிலை கடத்துகின்றனர்.

அந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை விடுவிக்க வேண்டும் என்றால் நான் என்ன கேட்கிறேனோ,  அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று புலன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு கொண்டு இருக்கும் நயன்தாராவிடம் கட்டளை இடுகிறார். அந்த மெட்ரோ ரயிலில் பெரிய செல்வந்தரான விஜய் சேதுபதியின் மகளும் சிக்கிக் கொள்கிறார். அவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்றால் 40 ஆயிரம் கோடி பணத்தை உடனே வங்கியில் செலுத்த வேண்டும் என்று நயன்தாராவை மிரட்டுகிறார். தன் மகள்  கடத்தல்காரர்கள்  வசம் சிக்கி இருப்பதால்,  உடனே விஜய் சேதுபதி 40 ஆயிரம் கோடியை செலுத்தி விடுகிறார். அடுத்த நிமிடத்தில் இந்த 40 ஆயிரம் கோடி அனைத்து விவசாயிகளுக்காக வங்கியில் போட்டு அவர்களது கடன்கள் அடைக்கப்படுகிறது. இந்நிலையில் கடத்தல்காரரான ஷாருக் கானை சுற்றி வளைத்து பிடிக்க தங்களது படைகளுடன் விரைகிறார் நயன்தாரா.

ஆனால் ஷாருக் கான் தன்னுடன்  ஆறு பெண்களுடன் அங்கிருந்து தப்பித்து விடுகிறார். அதன்பிறகு சுகாதார அமைச்சர் செய்த ஊழலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஷாருக்கானின் கடத்தல் குழு சுகாதார அமைச்சரையம் கடத்துகிறது. இந்நிலையில் விக்ரம் ரத்தோர் என்ற ஷாருக் கான் யார்? என்பதை கண்டுபிடிக்க நயன்தாரா ஓரு கைதியாக பெண்கள் இருக்கும் சிறைக்கு செல்கிறார். அங்குதான்  ஜெயிலர் ஆசாத் என்ற ஷாருக்கானுக்கு உதவி செய்யும் ஆறு பெண்கள் இருக்கின்றனர். அந்த சிறையில் ஜெயிலர் ஆசாத் யார்? விக்ரம் ரத்தோர் யார்? அவருடைய பின்னணி என்ன என்பது நயன்தாராவுக்கு தெரிய வருகிறது.  காளி என்கிற விஜய் சேதுபதி  ஷாருக்கானை எதற்காக கொல்ல முயல்கிறார்? ஷாருக்கான் எதற்காக அரசியல்வாதிகளுடன் மோதுகிறார்? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் படம் தான் “ஜவான்”

விக்ரம் ரத்தோர் என்ற வேடத்தில் தந்தையாகவும், ஆசாத் என்ற வேடத்தில் மகனாகவும் இரட்டை வேட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் ஷாருக்கான். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் இல்லாமல், காதல், எமோஷனல் என அனைத்து காட்சிகளிலும் தன் நடிப்பால் அனவரையும் கவர்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்து செல்லும் அவர் வயதான தோற்றத்திலும் சரி,  இளமையாக வயதிலும் சரி  தனது நடிப்பில்  பட்டையை கிளப்பி அசத்தி உள்ளார்.‌ பத்து  வருடமாக ஆட்சியிலிருந்தும் மக்களுக்கும்,  அரசு மருத்துவ மனைகளுக்கும் அரசாங்கம்  ஒன்றும் நல்லது செய்யவில்லை என்று ஷாருக்கான்  பேசும் வசனங்கள்  பி.ஜே.பி. மத்திய ஆட்சியை நேரடியாக தாக்கி  அதிரவிட்டிருக்கிறது.

விஜய் சேதுபதி வில்லனாக ஸ்டைலிஷாக இல்லாவிட்டாலும், தனது முக பாவங்கள் மூலம் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். என்னத்தான் வில்லானாக இருந்தாலும், அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக  காட்சிகளை அமைத்து அவரது நடிப்பை மெருகூட்டி இருக்கலாம்.  ஆக்ஷன், சண்டைகாட்சிகளில்  அதகளம் செய்துள்ளார். ஆயுத வியாபாரியாக வரும் இவரது கதாபாத்திரம் நாட்டின் சாபக்கேடாக இருக்கும் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபர்களை நியாயப்படுத்தி பேச வைத்து இருக்கிறது.

நயன்தாரா புலன் விசாரணை அதிகாரியாக நடித்து இருந்தாலும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பலம்  சேர்க்கிறது. தீபிகா படுகோனே வரும் காட்சிகள் அனைவரின் கண்களையும்  கலங்க வைத்து விடுகிறது. ஒரு சில காட்சிகளில் வந்து போனாலும் அவருடைய வேடமும், அதில் அவர் நடித்த விதமும் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது. ஷாருக்கானுடன் வரும் பிரியாமணி,  மற்றும் ஐந்து பெண்களின் கதாபாத்திரமும் நன்றாக மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.‌ அவர்களும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்துள்ளனர்.

“ஜவான்” இந்தியிலிருந்து தமிழ் டப்பிங் என்றாலும் அந்த உணர்வே வராமல் நேரடி தமிழ் படத்தை பார்த்ததுப்போல காட்சிகளை இயக்குனர் அட்லி அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.இந்த படத்தில் ஊழல், சமூக அக்கறை, அரசியல்வாதிகளின் அலட்சியம் என நம் நாட்டில் நடக்கும் ஊழல்களை பற்றி பேசியுள்ளார். அதேபோல நம் நாட்டில் பல இடங்களில் நடந்த விஷவாயு தாக்குதல், வங்கி கடனால் விவசாயிகள் உயிரிழப்பு, ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தது என பல உண்மை சம்பவங்களை அழகாக திரைக்கதையில் சேர்த்து அதனை அற்புதமாக காட்சிபடுத்தியுள்ளார் அட்லி.தமிழனின் அடையாளத்தை பாலிவுட் படவுலகில் தடம்.பதித்து வெற்றி பெற்றுள்ளார் என்பதை நினைக்கும்போது தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் பெருமை என்று சொன்னால் மிகையாகாது. தமிழில் உள்ள டெக்னீஷியங்கள் குழுவினருடன் பாலிவுட் படவுலகில் நுழைந்து, அதிரடி காட்டி வெற்றி அடைந்து இருக்கும் இயக்குநர் அட்லி, கண்டிப்பாக  இனி பாலிவுட் சினிமாவிலும் முன்னணி இயக்குநராக வலம் வருவார் என்பதை இந்த ‘ஜவான்’ படம்  நிரூபித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தாலும், காட்சிகளில் இருக்கும் உடல் மொழியை எல்லோரும் ரசிக்கும்படி  மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு ஏற்றவாறு  அனிருத்தின் இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரன்டும் காட்சிகளின் வேகத்தை அதிகரித்து. படம் பார்க்கும் அநைவரையும் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு இசை அமைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘ஜவான்’ படம் உலகம் முழுவதும் பெரிய அளவில்  வெற்றி பெறுவது உறுதி!

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.