CHENNAI:
ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார்,மதன் தக்ஷிணாமூர்த்தி, ஆழியா, திருநாவுக்கரசு, ஹரிதா, மகிமா,வசந்த் மாரிமுத்து,சோபன் மில்லர் மற்றும் பலர் நடிப்பில் ராபர்ட் சற்குணம் இசையில் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ‘நூடுல்ஸ்’.
இப்படத்தின் கதைப் பொறுத்தவரையில்,
உடற்பயிற்சி செய்யும் இடத்தில் பயிற்சியாளரான இருக்கும் கதாநாயகன் ஹரிஷ் உத்தமன், தன் மனைவி ஷீலா ராஜ்குமார், மகள் ஆழியாவுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்த சூழ் நிலையில் முதல் தளத்தில் உள்ள குடும்பமும், இரண்டாவது தளத்தில் உள்ள குடும்பமும், எல்லாம் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமை அன்று இரவு மொட்டை மாடியில் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக அரட்டை அடித்து விளையாடி கொண்டிருப்பது வழக்கம். அவர்களது சத்தத்தை கேட்டு, தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் என்று பக்கத்து வீட்டார் யாரோ ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறை ஆய்வாளர் மதன் அந்த தெரு வழியாக போலீஸ் வேனில் வரும்போது மாடியில் அதிக சத்தம் கேட்டு அவர்களை அமைதியாக.இருக்கச் சொல்லி எச்சரிக்கிறார். இது வாக்குவாதமாகி கைகலப்பில் முடிகிறது.
இதனால் கோபமடைந்த காவல்துறை ஆய்வாளர் மதன் அவர்களை வஞ்சம் தீர்க்க முடிவு செய்கிறார். இதற்கிடையில் ஷீலாவின் குழந்தை வைத்திருக்கும் செல்போனை திருட முயலும் ஒருவரை ஷீலா இழுத்து தள்ளி விட, அந்த நபர் ஷீலா வீட்டிற்குள். விழுந்து இறக்கிறார். தன்னால்தான் அந்த நபர் இறந்து போனார் என்று ஒன்றும் செய்வதென்று தெரியாமல் ஷீலா, ஹரிஷ் உத்தமன் இருவரும் தவித்துக் கொண்டிருக்கும்போது, தன் வீட்டிற்கு அருகே இருக்கும் வக்கீலிடம் வேறொரு விதமாக நடந்த விஷயத்தைச் சொல்லி அவரிடம் உதவி கேட்கிறார் ஹரிஷ். அவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்து காட்டியதும் வீட்டில் ஒருவன் பிணமாக கிடப்பதை பார்த்து வக்கீல் அதிர்ச்சியடைகிறார். இந்த சமயத்தில்தான் அங்கு காவல்துறை ஆய்வாளர் மதன் வருகிறார். அதன் பிறகு அங்கு நடந்தது என்ன? காவல்துறை ஆய்வாளர் மதன் யார் அந்த கொலையை செய்தது என்பதை கண்டுபிடித்தாரா? என்பதுதான் ‘நூடுல்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஸ் உத்தமன், தன் குடும்பத்தை பாதுகாக்க காவல்துறை அதிகாரியின் பழிவாங்கலுக்கு உட்படும் நடிப்பை கண்களினாலே வெளிப்படுத்தி, அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக வாழ்ந்து காட்டியுள்ளார். பல படங்களில் வில்லனாக நடித்த ஹரிஷ் உத்தமன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது பாராட்டத்தக்கது. ஏற்கனவே அவரின் நடிப்பு நம்மை பல படங்களில் கவர்ந்து இருந்தாலும், இந்த படத்தில் கதையின் நாயகனாக வலம் வந்து நம்மை மிகவும் கவர்கிறார்.
பல படங்களில் தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷீலா ராஜ்குமார், இதிலும் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் வழக்கமான தனது அசத்தலான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நடிகை ஷீலா படம் என்றாலே கதைகேற்றவாறு சிறப்பாக நடித்திருப்பார் என்பது கண்டிப்பாக நமக்கு தெரியும். அது ஒரு தரமான படமாக இருக்கும் என்று நாம் நினைத்த மாதிரி, இந்த படத்திலும் மாறுபட்ட முறையில் நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்.
ஹரிஷின் குடியிருப்புவாசி வேடத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர் என இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பு மூலமாக சிறப்பு செய்து இருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ஆழியா, சிறுவர்கள் என அனைவருமே மிக இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
பல படங்களில் தந்தை, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருவி மதன் தட்சிணாமூர்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார். நல்ல குணசித்திர நடிகர் என்று நிரூபித்தவர் இப்படம் மூலம் சிறந்த இயக்குனர் எனவும் நிரூபித்து காட்டியிருக்கிறார். ரசிகர்கள் அசந்து போகும் விதத்தில் ஒரு எளிமையான கதையை, மிக சுவாரஸ்யமான சிறந்த படமாக கொடுத்திருக்கிறார். அவருக்கு தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக மிகப் பெரிய எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது.
கதை முழுவதும் ஒரே வீட்டிற்க்குள் நடப்பதால், கதை சிறு,சிறு அறைகளுக்குள் பயணித்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் நடிகர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி.வினோத் ராஜா.
இசையமைப்பாளர்கள் ரமேஷ் கிருஷ்ணன் எம் கே – ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை கதையோடு பயணித்து இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘நூடுல்ஸ்’ படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் அமர்ந்து சுவைக்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.