“கெழப்பய” திரைப்பட விமர்சனம்!

63

சென்னை:

ஒரு வயதானவரை வைத்து ஒரு முழு படத்தையும் “கெழப்பய” என்ற பெயரில் எடுத்திருக்கும் இப்படத்தில், கதிரேச குமார், கிருஷ்ணகுமா,ர் விஜயரணதீரன், கே என் ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை அஜித்குமார் கவனிக்க, கேபி இசையமைக்க, யாழ் குணசேகரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தை யாழ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,

ஒரு வயதான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கதிரேச குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் ஒரு நாள் கதிரேச குமார் தன்னுடைய பணியை முடித்துவிட்டு, தன் வீட்டிற்கு சைக்கிளில் செல்லும்போது,  அவர் செல்லும் வழியில் ஒரு கார் வருகிறது. அந்த கார் வரும் வழி கிராமப்புறம் என்பதால் சிறிய பாதையாக இருக்கிறது. அந்த காருக்கு முன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் அந்த முதியவர் கதிரேச குமார், அந்த பாதை சிறியதாக இருப்பதாலும்,  ஒரு வாகனம் சென்றால் மறு வாகனம் செல்ல முடியாது என்பதால் சைக்கிளை ஓரம் கட்டி செல்லாமல்,  அந்த காருக்கும் வழி விடாமல் சென்று கொண்டிருக்கிறார் அந்த முதியவர். அந்த காரில் ஒரு நிறை மாத கர்ப்பிணியுடன் மொத்தம் ஐந்து பேர் பயணித்து வருகிறார்கள்.

அந்தக் காரின் ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்து வழி விடும்படி எச்சரித்தாலும், அந்த முதியவர் கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த காரில் வந்தவர்கள் பொறுமையை கடைப்பிடிக்காமல் காரை விட்டு இறங்கி அந்த முதியவரிடம் சண்டை போடுகிறார்கள். ஆனாலும் அந்த முதியவர் அந்த காருக்கு வழிவிடாமல்  செல்கிறார். ஒரு கட்டத்தில் காரில் வந்தவர்கள் கோபமடைந்து அந்த முதியவர் கதிரேச குமாரை அடித்து துவைக்கிறார்கள். அவரை பலமாக அடித்து உதைத்த பிறகும் கதிரேச குமார் அந்த அந்த காருக்கு வழிவிடாமல் தன்னுடைய சைக்கிளை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு, அங்கேயே ரோட்டில் அமர்ந்து காருக்கு வழி விடாமல் தடுக்கிறார். அவர் ஏன் அந்த காருக்கு வழிவிடாமல் தடுக்கிறார்..? அந்தக் காருக்கும் கதிரேசகுமாருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுதான் ‘கெழப்பய’ படத்தின் மீதி கதை.

இந்தக் “கெழப்பய” திரைப்படத்தில் கதாநாயகனாக கதிரேசகுமார் நடித்திருக்கிறார். கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் கதிரேச குமார், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது நடிப்பால் அனைவரின்  கவனத்தையும்  ஈர்க்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடிப்பின் மூலம் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். படத்தின் துவக்கத்தில் அந்த காருக்கு வழிவிடாமல் அவர் சைகிளில் செல்லும்போது அவர் மீது வெறுப்பு ஏற்பட்டாலும், பிறகு அவர் எதற்காக அப்படி செய்கிறார், என்கிற விஷயம் தெரிந்த பிறகு அவர் மீது பரிதாப உணர்வு ஏற்படுகிறது. அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.

காரில் பயணிப்பவர்கள் அனைவரது நடிப்பும்  மிக சிறப்பாக இருக்கிறது. ஒரு கர்ப்பிணி பெண்னை வைத்துக் கொண்டு, காரில் வேகமாக செல்லும் போது, தொந்தரவு  ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வார்களோ அதை மிக சிறப்பாக அனைவரும் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஊர் ‘விஏஓ’ வாக வருபவரும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அஜித்குமாரின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும்படி காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு பலமாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

இசையமைப்பாளர் கேபியின் இசையில், பின்னணி இசை திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது.

இப்படத்தின் இடைவேளைக்கு முன் பாதியில் இருந்த ஒரு சுவாரஸ்யம் இடைவேளைக்கு பின் சற்று குறைந்து விடுவது ஏன்? சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருந்த படத்தின்  இரண்டாம் பாதியில் சற்று குறைவது படத்தை தொய்வடைய செய்து விடுகிறது. 

தற்போது குறைந்த பட்ஜெட்டில் வெளி வரும் பல படங்கள் மக்களை கவருகின்ற மாதிரி எடுத்து வெற்றி பெறுகிறார்கள். அதே மாதிரி இப்படத்தில் ஒரு சாதாரண சம்பவத்தை மைய கருத்தாக வைத்துக்கொண்டு இயக்குநர் யாழ் குணசேகரன், சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும்  இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இம்மாதிரியான தமிழ் படங்களை தமிழ் திரைப்பட ரசிகர்கள் கண்டிப்பாக  வரவேற்பு கொடுத்து ரசிக்கலாம்.

மொத்தத்தில், இந்த ‘கெழப்பய’ படத்தில் வயதானாலும் தன் வலிமையை காட்டி, எதையும் சாதிக்க முடியும் என்று காட்டியிருப்பதை பாராட்டலாம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.