சென்னை:
“ஆர் யூ ஓ கே பேபி” என்ற இப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, ரோபோ சங்கர், அபிஷேக் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பு:; மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் ஆர்.ராமகிருஷ்ணன். இசை:இளையராஜா. ஒளிப்பதிவு: கிருஷ்ண சேகர் இயக்கம்: லட்சுமி ராமகிருஷ்ணன். பி ஆர் ஓ: சதீஷ் ( AIM) சிவா.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
தற்போது திருமணம் செய்து கொள்ளாமலேயே சில ஆண்களும் பெண்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ‘லிவிங் டு கெதர்’ என்ற முறையில் வாழும் முல்லையரிசி தன் காதலன் அசோக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்போது தனது வயிற்றில் வளர்ந்தகருவை பல முறை கருக்கலைப்பு செய்தாலும், ஒரு குழந்தையை கருக்கலைப்பு செய்ய முடியவில்லை. இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அவர்களுக்கு உதவி செய்ய நர்ஸ் வினோதினி வருகிறார். அந்தப் பெண் குழந்தையை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில், வறுமை காரணமாக குடிகாரன் அசோக்கை விட்டு விலகி, தனது குழந்தையை நர்ஸ் வினோதினி மூலம் சமுத்திரகனி– அபிராமி தம்பதிக்கு பணத்திற்கு ஆசைப்பட்டு கொடுத்து விடுகிறார்கள்.
ஒரு வருடத்திற்கு பிறகு தனக்கு பிறந்த குழந்தையை நினைத்து உருகி கொண்டு தவிக்கும் முல்லையரிசி தன் தவறை உணர்ந்து குழந்தைகள் நல வாரியத்தில் புகார் தெரிவிக்க அந்த நல வாரியம் காவல்துறையில் சொன்னவுடன், அவர்கள் விசாரணையை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பல முயற்சிகள் செய்தும் குழந்தையை திரும்ப பெற முடியாமல் போக, இந்த நிலையில் இந்த தகவலை தெரிந்து கொண்ட டிவி சேனல் ஒன்று “சொல்லாததும் உண்மை” என்ற நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சொல்லி அதை நேரடி ஒளிபரப்பில் விசாரணையை தொடர்கிறார்கள். இதனால் குழந்தையை தத்தெடுத்த சமுத்திரகனி அபிராமி தம்பதிகளுக்கு காவல்துறை வழக்கு தொடுக்க முற்படுகிறது. அவர்கள் வளர்த்த பெண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்து விடுகிறார்கள். அந்தக் குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டும் என்று சமுத்திரகனி அபிராமி தம்பதி முற்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் முல்லையரிசியும் தன்னுடைய குழந்தையை மீட்டு வளர்க்க நினைக்கிறார். கடைசியில் அந்த குழந்தை முல்லையரசிக்கு கிடைத்ததா? சமுத்திரகனி- அபிராமி தம்பதிக்கு கிடைத்ததா? என்பதுதான்”ஆர் யூ ஓகே பேபி” படத்தின் மீதி கதை.
குழந்தை இல்லாத தம்பதியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி இருவரும் கதாபாத்திரங்களை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது. சமுத்திரக்கனி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
குழந்தை இல்லாத பெண்களின் வலிகளை உணர்த்தும் வகையில் நடித்திருக்கும் அபிராமியின் நடிப்பு அபாரம். அதிலும், தன் வளர்ப்பு குழந்தைக்காக தாய்ப்பால் சுரக்க வைக்கும் காட்சி நெகிழ்ச்சியடைய வைக்கிறது.
பெற்ற குழந்தையின் பாசத்திற்கு ஏங்கும் தாயாக அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து முல்லையரசி தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பு செய்து இருக்கிறார்.
முல்லையரசியின் காதலனாக நடித்திருக்கும் அசோக், நீதிபதியாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, தங்களுக்கு கொடுத்த பணியை நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடக்கும் உண்மையான அனுபவங்களையும், வியாபார தந்திரங்களையும் வெட்ட வெளிச்சமாக காட்டி குழந்தை தத்தெடுப்பில் இருக்கும் சிக்கல்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்து சிறப்பான முறையில் இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
இளையராஜாவின் இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளை உணர்ந்து காட்சிகளுக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கிருஷ்ண சேகர் கதைக்கு ஏற்றவாறு மிக சிறந்த முறையில் தரமான முறையில் ஒளிப்பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN