CHENNAI:
ETAKI ENTERTAINMENT
சித்தார்த்
நடிக்கும் “சித்தா”
AN S.U.ARUN KUMAR PICTURE
சித்தார்த்
நிமிஷா சஜயன்
அஞ்சலி நாயர்
சஹஷ்ராஸ்ரீ
S.ஆபியா தஸ்னீம்
பாலாஜி
எழுத்து – இயக்கம் : S. U. அருண் குமார்
முகப்பு பாடல் – சந்தோஷ் நாராயணன்
பாடல்கள் – திபு நைனன் தாமஸ்
பின்னணி இசை – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – பாலாஜி சுப்ரமணியம்
படத்தொகுப்பு – சுரேஷ் A பிரசாத்
கலை இயக்குனர் – C. S. பாலச்சந்தர்
பாடல் வரிகள் – விவேக், யுகபாரதி & S.U.அருண் குமார்
ஒலி வடிவமைப்பு – வினோத் தணிகாசலம்
சண்டைப் பயிற்சி – டேஞ்சர் மணி
தயாரிப்பு – சித்தார்த்.
‘சித்தா’ இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
தனது அண்ணன் மகள் சஹஷ்ராஸ்ரீயை மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார் சித்தப்பாவான சித்தார்த். தனது அண்ணன் மறைந்த நிலையில் அவரது குழந்தை சித்தார்த்தின் மீது மிகுந்த பாசத்துடன் எப்போதும் ‘சித்தா சித்தா’ என்று அழைத்துக் கொண்டே பாசமாக இருக்கிறாள். தனது அண்ணன் மகள் மீது பாசமாக இருக்கும் சித்தார்த் , கதாநாயகி நிமிஷா சஜயனை காதலிக்கிறார். இந்த சூழ்நிலையில் சித்தார்த் தனது நண்பனின் அண்ணன் மகளை, சஹஷ்ராஸ்ரீயின் தோழி என்பதால், பள்ளியில் இருந்து அழைத்து வந்து அந்த நண்பனின் வீட்டில் விட்டுவிட, அந்த சமயத்தில் அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சித்தார்த் மீது வீணான பழி சுமத்தப்படுகிறது.
ஒரு கட்டத்தில் உண்மை நிலை வெளியே தெரிய வர சித்தார்த்தின் அண்ணன் மகள் சஹஷ்ராஸ்ரீ திடீரென்று காணாமல் போகிறார். இந்த சூழ்நிலையில் சித்தார்த்தின் அண்ணன் மகளான சஹஷ்ரா ஸ்ரீயை ஒரு மர்ம மனிதன் கடத்தி சென்று விடுகிறான். தன் அண்ணன் மகள் மீது பாசமாக இருந்த சித்தார்த் காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார். காவல்துறையிடம் புகார் கொடுத்தாலும், அவரது நண்பர்கள் மூலம் அண்ணன் மகளை தேடுகிறார். எங்கு தேடியும் அண்ணன் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் காவல்துறை ஒரு 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பிணத்தை எரிந்து நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதை சித்தார்த்திடம் காட்டுகிறார்கள். ஆனால் அது என் அண்ணன் மகள் அல்ல! அவள் எப்படி இருப்பாள்… என்பது எனக்கு தெரியும் என்று மீண்டும் மீண்டும் அண்ணன் மகளை தேடுகிறார் சித்தார்த். காணாமல் போன தனது அண்ணன் மகள் சஹஷ்ராஸ்ரீயை கண்டுபிடித்தாரா சித்தார்த்? காவல்துறையினர் அந்த குழந்தையை கடத்திய கயவனை கண்டுபிடித்து தண்டனை வழங்கினார்களா? என்பதுதான் “சித்தா” படத்தின் மீதி கதை.
“பாய்ஸ்” படத்தில் நடிக்கத் தொடங்கி, அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், ஆனால் இது போன்ற கதாபாத்திரத்தில், சித்தார்த் இதுவரையில் நடித்ததில்லை. ஆனால் ‘சித்தா’ என்ற இப்படத்தில் சித்தப்பா என்ற கதாபாத்திரமாகவே அவர் மாறி வாழ்ந்து இருக்கிறார். ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாகவே வலம் வரும் சித்தார்த், தன் மீது வீண் பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று புரியாமல் தவிக்கும்போதும், தன் அண்ணன் மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து போய் வேதனைப்படுவதும், அண்ணன் மகளை கடத்தியவனை கொலை செய்ய துடிக்கும் காட்சிகளிலும் மிக சிறந்த முறையில் நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார் சித்தார்த். தன் அண்னன் குழந்தையை மோட்டார் சைக்கிளில் அமர்த்திக்கொண்டு அவளை சந்தோஷப்படுத்துவதும், படுத்து உறங்கும்போது தன் அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுமாக ஒரு தந்தைபோல் பாசத்தை வெளிப்படுத்தி நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விட்டார்.
சித்தார்த்தின் காதலியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் எளிமையான பெண்ணாக உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஆக்ரோஷமாக சித்தார்த்திடம் பேசும் காட்சிகளில் நடிப்பில் அசத்தி விட்டார்.
சேட்டையாகவும் அவரது தோழியாகவும் நடித்திருக்கும் சஹஷ்ராஸ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம் இருவரும் இந்த சிறு வயதில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடிக்க எப்படித்தான் பயிற்சி எடுத்தார்களோ தெரியவில்லை. இருவரும் நடிப்பில் அசத்தி விட்டனர். அதுவும் சித்தார்த்தின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் சஹஷ்ராஸ்ரீ, காணாமல் போன பிறகு எதிர்கொள்ளும் வேதனையான காட்சிகளில், அவர் வெளிப்படுத்திய நடிப்பு நம் மனதை விட்டு நீங்காதவையாக இருக்கிறது. படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் சஹஷ்ராஸ்ரீயின் நடிப்பு நம்மை கலங்க வைத்து விட்டது.
சித்தார்த்தின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள், அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், வில்லனாக நடித்திருக்கும் நடிகர், பெண் காவல்துறை அதிகாரி போன்ற அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸின் பாடல்கள் அனைத்தும் கேட்கும்ரகமாக இருப்பதோடு, கதைக்கு தகுந்தவாறு அமைந்திருக்கிறது. விஷால் சந்திரசேகர் பின்னணி இசையை திரைக்கதைக்கு ஏற்றவாறு மிக சிறப்பாக பயணித்து இருப்பது பாராட்டத்தக்கது.
பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு பழனியின் எதார்த்தமான பகுதிகளுக்கும், அங்குள்ள அழகு நிறைந்த இடங்களுக்கும் அழைத்துச் சென்று, மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி ரசிகர்களிடத்தில் பாராட்டு பெறுகிறார்.
தந்தை – மகள் அல்லது தாய்-மகன் பாசம் என பல திரைப்படங்கள் வெளி வந்தாலும், சித்தப்பா – அண்னன் மகள் இடையிலான உறவை மையமாக வைத்து இந்த அளவிற்கு சிறப்பாக யாரும் படம் எடுத்ததில்லை. “சித்தா’ படத்தின் கதையில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களையும் அதன் பின்னணியையும் இணைத்து ஒரு விறுவிறுப்பான ஒரு கதையை நம் மனதை வேதனைபட வைக்கும் திரைக்கதை அமைத்து, உண்மை நிகழ்வு போல் காட்சிகளை புகுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.யு.அருண்குமாரை கைத்தட்டி இந்த திரைப்பட உலகிற்கு வரவேற்கலாம். இந்த கதைக்கு ஏற்றவாறு, கதாபாத்திர தேர்வு மற்றும் அவர்களிடம் மிக சிறந்த முறையில் நடிப்பை வாங்கிய விதம் போன்றவை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘சித்தா’ சிறுவர், சிறுமிகளுக்கு ஒரு பாதுகாப்பு சொல்லும் படம் என்பதில் ஐயமில்லை.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.