ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா தயாரிப்பில் வி ஆர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’

46

CHENNAI:

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளையும் வெற்றியும் பெற்ற ‘லவ்’ திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு ‘கொலைச்சேவல்’  என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரையும் இயக்குநர் பா ரஞ்சித் இன்று வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதைநாயகனாக நடிக்க, யூடியூப் குறும்படங்கள் புகழ் தீபா பாலு நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆகிறார். பால சரவணனும் அகரன் வெங்கட்டும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மிகவும் வலுவான எதிர்மறை வேடத்தில் இதுவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஆதவன் நடிக்கிறார். கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர்.

‘கொலைச்சேவல்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஆர் பி பாலா, “இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும். குறிப்பாக திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இதுவரை கண்டிராத வகையில் இருக்கும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “திறமை வாய்ந்த இளைஞரான துதிவாணனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. கலையரசனுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமையும். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. ‘கொலைச்சேவல்’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்,” என்று கூறினார்.

‘கொலைச்சேவல்’ திரைப்படத்திற்கு பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பிற்கு அஜய் மனோஜும், கலை இயக்கத்திற்கு சரவண அபிநாமனும், சண்டை பயிற்சிக்கு டேஞ்சர் மணியும் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது படைப்பான ‘கொலைச்சேவல்’ திரைப்படத்தை வி ஆர் துதிவாணன் இயக்க கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். வெகு விரைவில் இப்படம் வெளியாகிறது.

*