“சந்திரமுகி- 2” திரைப்பட விமர்சனம்!

52

சென்னை:

கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி’. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி, தற்போது அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் “சந்திரமுகி-2” இப்படத்தில் ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராவ் ரமேஸ், சுரேஷ் மேனன், விக்னேஷ், Y.G மகேந்திரன், ரவி மரியா, சுருஷ்டி டாங்கே, சுபீக்ஷா, சாய் ஐயப்பன், சத்ரூ, கார்த்திக் சீனிவாசன், C.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா, மற்றும் பலர் நடித்திருக்கிந்றனர்.

ஒளிப்பதிவாளர் :- ஆர்.டி ராஜசேகர். படத்தொகுப்பு :- ஆண்டனி. இசையமைப்பாளர் :- எம்.எம. கீரவாணி. தயாரிப்பு நிறுவனம் :- லைக்கா ப்ரொடக்ஷன்ஸ். தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்.

“சந்திரமுகி-2” படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

பல கோடிகளுக்கு அதிபதியான  கோடீஸ்வரி ராதிகாவின் குடும்பத்திற்கு சொந்தமான மில்லில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், குடும்பத்தை பகைத்துக் கொண்டு தன்னுடைய காதலனை கைப்பிடித்த ராதிகாவின் மகளும், மருமகனும் ஒரு விமான விபத்தில் இறந்து விடுகிறார்கள். அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு ராகவா லாரன்ஸ் பாதுகாப்பாக இருக்கிறார். இந்த மாதிரி அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை ராதிகாவின் குடும்பத்திற்கு வந்து கொண்டே இருப்பதால், தன் குடும்ப  ஜோசியரிடம் நடந்த விவரங்களை சொல்கிறார்.

அப்போது அந்த ஜோசியர் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர  நீண்ட நாட்களாக நீங்கள் குலதெய்வத்தை வழிபடாமல் இருப்பதால்தான் இவ்வாறு நடக்கின்றது.  அதனால்  நீங்கள் குடும்பத்துடன் சென்று உங்களது குலதெய்வத்தை வணங்கி வழிபட்டால்தான் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்கிறார். இதனால் தங்களது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்கிறார். அந்த ஊரில் வடிவேலு பராமரிப்பில் உள்ள சந்திரமுகி இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் அனைவரும் தங்குகின்றனர். அங்கு ராகவா லாரன்ஸ் அந்த இரண்டு குழந்தைகளுடன் வருகிறார். அந்த குழந்தைகளை முதலில் சேர்க்க மறுத்த ராதிகா பிறகு அவர்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறார்.

தங்களது குலதெய்வத்தை வழிபடுவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் வடிவேலு மூலம் ராதிகா  செய்கிறார். ஆனால் இவர்களது குலதெய்வ கோயிலில்  யாரும் அங்கு வந்து வழிபடாமல் இருப்பதால் பராமரிப்பு இல்லாமல் மிகவும் பாழடைந்த நிலையில் கோயில் இருக்கிறது. அவர்களது குலதெய்வ கோயிலை சுத்தம் செய்வதற்காக ஆர்.எஸ்.சிவாஜி மூலம் 20 பேர் கொண்ட நபர்கள் சுத்தம் செய்ய முற்படுகிறார்கள். அங்கு கோயில் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். அந்த கோவிலில் வெளிச்சம் வருவதற்கு சந்திரமுகி விடமாட்டாள், மீறி முயற்சித்தால் மரணம் தான், என்று அப் பகுதியில் வாழும் பழமையான சித்தர் ஒருவர் ராதிகாவின் குடும்பத்திரனருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.அதன்பிறகு சந்திரமுகி பங்களாவில் நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் புகுந்து விடுகிறது. லட்சுமி மேனன் உடலுக்குள் சென்ற சந்திரமுகியின் ஆத்மாவினால் பல அசம்பாவித சம்பவங்கள் அந்த பங்களாவில் நடக்கிறது. கடைசியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? ராதிகாவின் குடும்பத்தினர் குல தெய்வ கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்களா? என்பதுதான் “சந்திரமுகி- 2”  படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்திரத்தில்தான் நடிக்கிறார் என நினைத்தபோது,  வேட்டையனின் தோழராக வந்து எதிர்பாராத திருப்பத்தை  கொடுத்திருக்கிறார். ‘வேட்டையனும் நானே,  செங்கோட்டையனும் நானே’ என்று சொல்லும் காட்சிகளில் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  பாண்டியன் என்ற கதாப்பத்திரத்தில் காமெடியையும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என அருமையாக தனது நடிப்பில் கலக்கி இருக்கிறார்.

சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரணாவத் கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். அழகு தேவதையாக தன் நடிப்பில் சிறப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஆனால் அவருக்கான கதாபாத்திரம் சிறியது என்பதால் நடிப்பில் அதிகமான ஸ்கோப் இல்லை.

சக்கர நாற்காலியில் உட்கார வைத்து லட்சுமி மேனனை அழைத்து வரும்போது, அவரது உடலில் சந்திரமுகியின் ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்து விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்திருந்தாலும் சந்திரமுகி ஆவி புகுந்தவுடன் உண்மையிலேயெ பேயாட்டம் போட்டு இருக்கிறார்.

வடிவேலுவின் நகைச்சுவையில் சில காட்சிகள் மட்டுமே சிரிக்க வைக்கிறது. ராகவா லாரன்ஸ்-வடிவேலு இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் சிரிப்பு அலை எழுகிறது.

ராதிகா சரத்குமார் ,ராவ் ரமேஷ் , லட்சுமி மேனன் ,மஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ், ஆர் எஸ் சிவாஜி , மனோபாலா, ஒய் ஜி ,மஹேந்திரன் என நடித்தவர்கள் அனைவரும் தங்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர் .

இப்படத்தில் வரும் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி மிகவும் அருமையாக ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப ரசிக்க வைத்திருக்கிறது.

சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அதே மாதிரியான பங்களாவில் ராதிகா மற்றும் குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு. இப்படத்தில் பல குறைகள் இருந்தாலும் குடும்பமாக சென்று பார்க்க கூடிய விதத்தில் காட்சிகளை புகுத்தியிருப்பதை பாராட்டலாம்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முதல் பாகத்தில் எவ்வளவு அருமையாக  சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாக இருந்ததோ அதேபோல் இரண்டாம் பாகத்தையும் ராகவா லாரன்ஸை வைத்து மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி வாசு.

மொத்தத்தில் ‘சந்திரமுகி 2’  படத்தை ஜாலியாக பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.