சென்னை:
யூனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘ஷாட் பூட் த்ரீ’. இப்படத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹ{ட், வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன், சாய் தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை-ஆனந்த் நாகவ் மற்றும் அருணாச்சலம் வைத்தியநாதன், ஒளிப்பதிவு- சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசை-ராஜேஷ் வைத்தியா, எடிட்டிங்-பரத் விக்ரமன், கலை- ஆறுசாமி, சண்டை-சுதேஷ், நிர்வாக மேற்பார்வை-அருண்ராம் கலைச்செல்வன், நிர்வாக தயாரிப்பு- வெங்கடேஷ் சடகோபன், இணை தயாரிப்பு-முகில் சந்திரன், தயாரிப்பு நிர்வாகி- கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன், பிஆர்ஒ- நிகில்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
ஐடி தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் வெங்கட் பிரபு சினேகா இவர்களுக்கு மாஸ்டர் கைலாஷ் என்ற ஒரே மகன் இருக்கிறான். எந்த நேரமும் வேலை வேலை என்று பிசியாகவும், பரபரப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தன் மகனை கண்காணிக்க நேரமில்லாமல் வலம் வருகிறார்கள் . இதனால் மாஸ்டர் கைலாஷ் வீட்டில் தனிமையில் மிகவும் வேதனை அடைகிறார் தனக்கு உடனிருந்து விளையாடஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று தன் தந்தை வெங்கட் பிரபுவிடம் சொல்கிறார். அதற்கு சினேகா கோபத்தில் மறுக்கிறார்.
அதன் பின் மாஸ்டர் கைலாஷ் நான் ஒரு நாய் வளர்க்க ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறார். அதற்கும் சினேகா மறுப்பு தெரிவிக்கிறார். இந் நிலையில் மாஸ்டர் கைலாஷிற்கு பிறந்தநாள் வர, அவனுடைய நண்பர்களுக்கான வேதாந்த் வசந்தா, மற்றும் ப்ரணிதி பிறந்தநாள் பரிசாக ஒரு நாய்க்குட்டியை கொடுக்கிறார்கள். அந்த நாய்க்குட்டியை தன் நண்பர்கள் மூலம் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்கு கொண்டு வருகிறார் மாஸ்டர் கைலாஷ். முதலில் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கோபத்தில் துடிக்கும் சினேகாவை ஒரு வழியாக சமாளித்து அந்த நாயை வளர்க்க தந்தையும், மகனும் சம்மதம் வாங்குகிறார்கள்.
தன் நண்பர்களுடன் இந்த நாயுடனும் ஜாலியாக பொழுதை கழிக்கும் மாஸ்டர் கைலாஷிற்க்கு ஒரு நாள் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த நாய் திடீரென்று காணாமல் போய் விடுகிறது. காணாமல் போன தனது பாசமான நாயைத் தேடி மாஸ்டர் கைலாஷ், வேதாந்த் வசந்தா, ப்ரணிதி, பூவையார் அனைவரும் ஊரெங்கும் தேடி அலைகிறார்கள். அந்த நாய் எங்கே சென்றது என்று தெரியாமல் தவிக்கின்ற அவர்களுக்கு இறுதியில் அந்த நாயை எப்படி மீட்கிறார்கள்…என்பதுதான் “ஷாட் பூட் த்ரீ” படத்தின் மீதிக் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினேகாவும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடுத்தர வயது பெற்றோர்களாக மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். தன் பார்வையிலே மிரட்டும் மனைவியாக சினேகா மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இருவரும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அளவான நடிப்பு மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பெரிய பலமே, குழந்தை நட்சத்திரமாக நடித்த நால்வரும் அதாவது மாஸ்டர் கைலாஷ், சிறுமி பிரணித்தியும், வேதாந்த் வசந்த், பூவையார் இந்த நால்வரின் நடிப்பும் நம்மை ரசிக்க வைக்கிறது. இவர்கள் நாயை தேடி அலையும் காட்சிகள் அனைவரையும் பரிதாப பட வைக்கிறது.
யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார், சிவாங்கி, இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் சுகேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யாவின் இசை மற்றும் பின்னணி இசை இந்த திரைப்படத்திற்கு மிகவும் பெரிய பலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு அருமையாக சிறப்பாக அமைந்து உள்ளது.
இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் ஒரு சின்ன கதை கருவை எடுத்து கொண்டு அதை மிகவும் ஆக்கபூர்வமாக திரைக்கதை அமைத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்க கூடிய விதத்தில் முக்கியமாக குழந்தைகளுக்கான படத்தை கொடுத்து இருக்கிறார். நமது சென்னையில் எங்கு பார்த்தாலும் நாய் தொல்லை அதிகரித்து வரும் சூழ்நிலையில் அது மக்களை கடித்து குதறும், அட்டூழியத்தை ஒரு காட்சியில் இயக்குனர் சுட்டி காட்டி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில் “ஷாட் பூட் த்ரீ” குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.