“தி ரோட்” திரைப்பட விமர்சனம்!

202

சென்னை:

AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்து வழங்கும் ‘தி ரோட்’ என்ற திரைப்படம் தற்போது வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இபடத்தில் திரிஷா, “டான்சிங் ரோஸ்” ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S. பாஸ்கர், வேலராமமூர்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அருண் வசீகரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “தி ரோட்”.இப்படத்திற்கு கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் திரிஷா தனது ஆறு வயது மகனுடனும்,, தன் அன்பு கணவர் சந்தோஷ் பிரதாப்புடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த குழந்தை பிறக்கும் சூழ்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் திரிஷாவை வெளியூர் எங்கும் செல்லக்கூடாது என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். இந்நிலையில் தனது மகன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, அவனது  சொல்லுக்கு கட்டுப்பட்டு காரில் கன்னியாகுமரி செல்வதற்காக ஆயத்தமாகின்றனர். ஆனால் திரிஷா தன் கணவரிடம் நீங்கள் நம் மகனை அழைத்துச் செல்லுங்கள். என் வயிற்றில் குழந்தை இருப்பதால் அதிக தூரம் என்னால் காரில் பயணம் செய்ய முடியாது என்று கூறியதால் கணவர் சந்தோஷ் பிரதாப் தன் மகனை அழைத்துக் கொண்டு காரில் செல்கிறார்.

கார் மதுரைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கி இருவரும் மரணம் அடைகிறார்கள். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரிஷாவுக்கு தனது கர்ப்பமும் கலைந்து போகிறது. தன் கணவன் சந்தோஷ் பிரதாப்பும்,  செல்ல மகனும் விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததால் மிகுந்த துக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்கும் திரிஷா, எந்த இடத்தில் விபத்து நடந்ததோ அந்த இடத்தை பார்வையிட செல்கிறார். அப்போது அவரது கண்முன்னேயே ஒரு கார் விபத்தில் சிக்கி அங்குள்ள மைல்கல்லின் மீது மோதுகிறது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து  இருந்த அவரை காப்பாற்ற முயலும் போது, வெளியில் சென்று ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்க்கிறார். . இந்நிலையில் மீண்டும் வந்து விபத்து நடந்த பகுதியை பார்த்தபோது காரும், அதில் அடிப்பட்டவர்களும் காணாமல் போய்விடுகிறார்கள்.

அங்கு நடந்த விபத்தை பற்றி அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க முயலும் திரிஷாவுடன், அங்குள்ள காவல்துறை ஆய்வாளர் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்கிறார். அங்கு நடந்த விபத்து குறித்து எந்த தடயமும்,  அடையாளமும் காணப்படவில்லை. அதே சமயம் திரிஷா தன் கண்ணெதிரே நடந்த விபத்து குறித்து எந்தத் தடயமும் கிடைக்காததால், அங்கு ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக கருதுகிறார். அந்த விபத்து நடந்த பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினரிடம்  கேட்டபோது,  அடிக்கடி இதுபோல் இங்கு நிறைய விபத்துக்கள் நடக்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த திரிஷா விபத்தில் நடக்கும் இடத்தையும் அதன் பின்னணியில் உள்ள மர்மத்தையும் கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த விபத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதுதான்  “தி ரோடு” படத்தின் மீதி கதை.

கதாநாயகியாக நடித்திருக்கும் திரிஷா ஒரு கண்ணியமான நடிப்பை மிக சிறப்பான முறையில் வெளிப்படுத்துகிறார், சோகத்துடன் போராடும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா இப்படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தன் தோளில் திறம்பட சுமந்து செல்கிறார். கணவன் மற்றும் மகனின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் அவரது துணிச்சல் மற்றும் நடிப்பு ரசிகர்களின் கவனத்தையும் கவர்கிறது.

இப்படத்தில் மற்றொரு முக்கியமான ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

திரிஷாவின் கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், ஒரு சில காட்சிகள் வந்தாலும் தனக்கு கொடுத்த பணியை சரியாக செய்திருக்கிறார். திரிஷாவின் தோழியாக நடித்திருக்கும் மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி என அனைத்து நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களது பணியை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஜி. வெங்கடேஷ் இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, விபத்து காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அருமையாக அசத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசைதான் அதிக சத்தத்துடன் காதை பிளக்க வைக்கிறது.

கார்களின் விபத்து நடக்கும் காட்சிகளை வைத்து மிகவும் தத்ரூபமாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் அருண் வசீகரன் எதிர்காலத்தில் பெரிய இயக்குனராக வருவார் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் கூட்டி பார்வையாளர்களை சீட் நுனியில் அமர  வைத்திருக்கிறார். ஒரு பக்கம் திரிஷாவின் கதையையும், மறுபக்கம் ஷபீரின் கதையையும் ஆகிய  இரண்டு கதைகளையும் கடைசி கட்ட காட்சியில் இணைத்து செயல்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் ‘தி ரோட்’  பயணத்தில் பயம் ஏற்படுகிறது.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.