கோலாகலமாக நடைபெற்ற குமாரி ஜனனியின் பரதநாட்டிய அரங்கேற்றம்!
கோலாகலமாக நடைபெற்ற குமாரி ஜனனியின் பரதநாட்டிய அரங்கேற்றம்! பண்டைய இந்திய பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியம், கதை சொல்லும் கலையுடன் தீவிர உடல் அசைவுகளை உள்ளடக்கிய ஒரு கலை வடிவமாகும். இந்த அழகிய கலை வடிவத்தை பாதுகாக்கும் பணியில் பல மூத்த கலைஞர்களோடு, இளைய தலைமுறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், பெருநகர் காஞ்சிபுரத்தை சொந்த ஊராக கொண்ட செல்வி ஜனனி.ஜெ, தற்போது பெங்களூரில் வசித்து வந்தாலும், பரதநாட்டிய கலையை முறையாக கற்றுக்கொண்டதோடு, பல வருடங்கள் அக்கலையில் பயிற்சி பெற்று தற்போது தனது அரங்கேற்றத்தை சென்னையில் நடத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார். பெங்களூரில் உள்ள ’நந்தினியின் 9 வது கவுண்ட் டான்ஸ் அகாடமியில், குரு ஸ்ரீமதி நந்தினி வசந்த் அவர்களிடம் பரதம் பயின்ற ஜனனியின் அரங்கேற்றம் நவம்பர் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநரும் நடிகருமான கலைமாமணி திரு.அபிஷேக் சங்கர், வாசுதேவன் நத்தலாயாவின் நிறுவனர் மற்றும் இயக்குனர் துளசி வி.இ.ஆர். செல்வ லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். தனி பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடிய ஜனனியின் திறமையை விருந்தினர்கள் மட்டும் இன்றி நிகழ்ச்சியை காண வந்த பார்வையாளர்களும் வெகுவாக பாராட்டினார்கள். தனது அரங்கேற்றத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனனி, தனது இத்தகைய சாதனையை நிகழ்த்த அவர் பெற்ற அனைத்து ஆதரவிற்கும் தனது குரு, இசைக்குழு, சிறப்பு விருந்தினர்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிறப்பு விருந்தினர்கள் ஜனனியின் நடன திறமையை பாராட்டியதோடு, அவருடைய குரு ஸ்ரீமதி நந்தினி வசந்த் மற்றும் பெற்றோரையும் பாராட்டினார்கள்.