பைரி வாழ்வியலைச் சொல்லும் படம் – Byri Movie Review

பைரி வாழ்வியலைச் சொல்லும் படம் !! இயக்கம் : ஜான் கிளாடி நடிகர்கள்: சையத் மஜீத், மேகனா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார் இசை: அருண் ராஜ் தயாரிப்பு: வி.துரை ராஜ் புறா பந்தய பின்னணியைச் சொல்லும் அழுத்தமான படைப்பு இந்த பைரி முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பதிவாக மாறியிருக்கிறது. நாகர்கோவிலில் வசிக்கும் இளைஞன் லிங்கம் படித்து விட்டு வேலைக்கு போகாமல் புறா பந்தயம் நடத்துகிறான். ஊரில் உள்ள பெரிய ரவுடி சுயம்புவும் புறா பந்தயம் நடத்துகிறார். பந்தயத்தில் சுயம்பு செய்யும் ஊழலை லிங்கம் கண்டுபிடித்து பிரச்சனை செய்ய இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. லிங்கம் பந்தயமே வேண்டாம் என்று வேலை தேடி சென்னை செல்கிறார். இந்த மோதலில் லிங்கத்தின் நண்பர் தாக்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாக உயிருக்கு போராடுகிறார். பின் என்ன நடக்கிறது என்பதே படம். படத்தில் பாராட்டபட வேண்டிய முதல் விஷயமாக இருப்பது புறா பந்தயம்தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் சிறிய பட்ஜெட்டில் பந்தய காட்சிகளை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் முழுதும் வரும் விவரங்கள், விளக்கங்கள், கதைக்களம், பேச்சு மொழி என படத்திற்காக படக்குழு உழைத்திருக்கும் அபாரமான உழைப்பு, படத்தின் கதாபாத்திரங்கள் என ஒவ்வொன்றும் பிரமிப்பை தருகிறது. தான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்யை அத்தனை தத்ரூபமாக திரையில் சித்தரித்துள்ளார் படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி. முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை. நாயகனின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி நடிகராகவும் கவனிக்க வைத்திருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் அந்த வட்டார வாழ்வியலில் இருக்கும் இளைஞனை நடிப்பில் கொண்டு வந்துள்ளார், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடங்களில் அசத்தியுள்ளார் ஒரு ஊரே மொத்தமாக கூடி நடித்திருக்கிறார்கள் அத்தனை ஜனத்திரள் படம் முழுக்க இருக்கிறது, அவ்வளவு பேரும் திரை பயமில்லாமல் பின்னியிருக்கிறார்கள். நாகர்கோவில் மக்களின் பேச்சு மற்றும் உடல் மொழி என அனைத்தும் அட்டகாசம். புறா பந்தய பின்னணியில் இத்தனை விசயங்கள் இதுவரை எந்த தமிழ் படத்திலும் வந்ததில்லை அந்த வகையில் தமிழ் சினிமாவில் இது முக்கியமான படைப்பாக இருக்கும் மாறுபட்ட கதைகளம், நல்லதொரு முயற்சி - பைரி - 1 ஒரு புது அனுபவம்.

48

ec0604a2-8ee3-4372-bfe8-a71eab4ce56a