போர் படம் எப்படி இருக்கு – Por Movie Review

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், டேவிட் படப் புகழ் இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போர். இன்றைய இளைய தலைமுறையை எல்லாவிதங்களிலும் பரவசப்படுத்தும் படைப்பு. பல்கலைக் கழக மாணவர்கள் இரண்டு பேர் பகையாளிகளாகி தங்களுக்குள் மோதிக்கொள்ள, ஒட்டு மொத்த பல்கலைக் கழகமும் ‘போர்‘க்களமாகிற கதை. பள்ளிப் படிப்பின்போது தனக்கு கசப்பான அனுபவத்தை தந்த அர்ஜுன்தாஸை, பல்கலைக் கழகப் படிப்பின்போது பழி வாங்கத் துடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவருக்கும் மாணவ மாணவிகளின் பேராதரவு கிடைக்க, இருவருக்குமான பகை இரு தரப்புக்கான மோதலாக வெடிக்க அடிதடி, வெட்டுக்குத்து என அடுத்தடுத்த காட்சிகள் அத்தனையும் ரணகளம். இடையில் அரசியல்வாதியொருவரும் அவருடைய மகளும் தங்கள் பங்கிற்கு அடாவடி அராஜகத்தில் ஈடுபட நிறைவில் யார் கை ஓங்கியது, யார் கை அடங்கியது என்பதே கதை… லாஜிக் அதுஇதுவென எதையும் யோசிக்காமல் வேகமெடுக்கிறது திரைக்கதை… அர்ஜுன் தாஸுக்கு மிகக் கனமான பாத்திரம் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் காளிதாஸ் இடம் அடி, அடி என்று கதறும் போது, அவரும் முகத்தில் மாறும் பாவங்கள் அவருக்குள் ஒரு நல்ல நடிகன் ஒளிந்திருப்பதை காட்டுகிறது. காளிதாஸ் ஜெயராம் இப்படம் அவருக்கு ஒரு லைஃப் டைம் பாத்திரம். ஆஜானுபாகுவான தோற்றத்தில் அறிமுகமாகும் முதல் காட்சியிலே நம்மை ஈர்த்து விடுகிறார். அர்ஜுன் தாஸ் மீதான கோபம், சஞ்சனா மீதான காதல், பார்க்கும் பெண்கள் இடத்தில் செய்யும் சேட்டை, சீனியர்களுடன் சண்டை என ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். எடுத்த உடனே விஷயத்துக்கு வருவது போல், படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்து, ஒரு கல்லூரிகளில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் திரைக்கதைக்குள் நுழைத்து, எங்கும் நிமிர விடாமல், இறுதிவரை நம்மை அழைத்துச் சென்று அமர்க்களப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்தோடு இரண்டற கலந்து படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அதுவும் இறுதிக் காட்சிகளில் ஒரு மிகப்பெரிய ஆக்சன் சீக்குவன்ஸ் வருகிறது, அந்த ஆக்சன் சீக்வென்சை, இருட்டில் மிக குறைவான வெளிச்சத்தில் எப்படி எடுத்தார்கள் என்ற பிரமிப்பை தரும்படி அமைத்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் என்பது ஒளி, ஒலி, வசனம், பின்னணி காட்சிகள், என பல வகையான விஷயங்களும் ஒன்று சேர்ந்து நமக்குள் ஏற்படுத்தும் உணர்வைத் தர வேண்டும். ஆனால் இது அத்தனையும் தாண்டி, இதை கோர்க்கும் படத்தொகுப்பு மிக முக்கியம். அதை இந்தப் படத்தை பார்த்தால் அதை உணரலாம் அந்த அளவு படத்தொகுப்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது

48