திரை உலகம் போற்றும் படைப்பாளி, GN.ரங்கராஜன் அவரகளின் 90 வது பிறந்த நாள் விழா !

204

திரை உலகில் சில பெயர்கள், அவர்களின் நினைவுகள், எத்தனை காலம் கடந்தாலும், அவர்களின் பிரபல்யம், திரைக்காதலர்கள் மனதிலிருந்து அழியவே அழியாது. அப்படியான புகழ் கொண்டவர்களில் ஒருவர் தான், படைப்பாளி GN. ரங்கராஜன். அவரது அசாத்தியமான திரைப்பயணம் இன்றைய படைப்பாளிகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள், அவரது மகன் GNR குமரவேலன் உட்பட, பலருக்கும் பெரும் தூண்டுகோலாக இருந்து வருகிறது. 2020 டிசம்பர் 17 அந்த வரலாற்று நாயகனின் பிறந்தநாள். அவரது நினைவுகள், அவர் தந்த அற்புதமான அறிவுரைகள் பற்றி, அவரது அன்பு மகன் GNR குமரவேலன் பகிர்ந்துகொண்டதாவது…
அளவில்லாத தொழிநுட்ப அறிவை போதித்ததை தாண்டி என்னிடம் அவர் எப்போதும் ஒழுக்கமாக இருக்க வேண்டும், யாரையும் வார்த்தையால் கூட புண்படுத்திவிடக் கூடாது, எனபதையே சிறந்த அறிவுரையாக கூறியுள்ளார். அவர் “உனது ஒழுக்கத்தையும், நேர்மையையும் இழந்துவிட்டால், எப்போதும் எப்பாடுபட்டாலும், அதனை திரும்ப பெற இயலாது” என்று கூறிக்கொண்டே இருப்பார். வார்த்தைகளிலும், செயலிலும் எச்சரிக்கையுடனும் அதே நேரம் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால், உன்னை வெற்றியிலிருந்து தடுக்க நினைக்கும், பலரையும் கடந்து கண்டிப்பாக நீ வெற்றி பெறுவாய் என்பார். நான் அவரது அறிவுரைகளை மதித்து பின்பற்றியதே, திரைப்பயணத்தில் எனது இந்த வெற்றிக்கு காரணமாகும்.

மேலும் GNR குமரவேலன் கூறும்போது…

எனது தந்தை எடிட்டர் துரை சிங்கம் அவர்களிடம் உதவியாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இயக்குநர் பீம்சிங் அவர்களின் படங்களுக்கு தீவிர விசிறியாக இருந்தார். இயக்குநர் திரு SP முத்துராமன் அவர்களுடன் அசோஸியேட்டாக பல வருடங்கள், 25 படங்களுக்கும் மேலாக பணிபுரிந்தார். அவற்றில் புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை, ப்ரியா மற்றும் மேலும் பல படங்கள் குறிப்பிடதகுந்தவை. இந்த காலகட்டத்தில் நடிகர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமல்ஹாசன் ஆகியோரிடம் மிகச்சிறந்த நட்பை பேணினார். அந்த காலகட்டத்தில் அவர் இருவரிடமும் கால்ஷீட் பெற்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்த் அவர்களும், கமல்ஹாசன் அவர்களும், இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார்கள். அவர் கமல்ஹாசன் அவர்களை வைத்து ‘கல்யாணராமன்’ எனும் மிகப்பெரும் ஹிட் படத்தை எடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் மீண்டும் கோகிலா, கடல் மீன்கள் மற்றும் மகராசன் உட்பட 9 படங்கள் இணைந்து பணியாற்றினார். அவையனைத்துமே சில்வர் ஜூப்லி படங்கள். பின் அவர் “ராணி தேனி” படம் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அந்த படத்திற்காக கமல்ஹாசன் அவர்கள் சம்பளமே வாங்கவில்லை. நான் திரையுலகில் உதவி இயக்குநராக அறிமுகமான படம் கூட இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “சதிலீலாவதி” திரைப்படம் தான்.

GN.ரங்கராஜன் மகராசன் திரைப்படத்திற்கு பிறகு திரை இயக்கத்தை கைவிட்டார். அதன் பின் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கிய அவர், தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் “ரகுவசம்” எனும் முதல் மெகா சீரியலை இயக்கினார். சிங்கப்பூர் சேனலுக்காக ஒரு டெலிஃபிலிமையும் இயக்கினார்.
அது அவருக்கு பெருமளவில் பாராட்டுக்களையும், புகழையும் பெற்று தந்தது. திரை உலகத்தில் எண்ணற்ற கலைஞர்களுக்கு, அவர் தூண்டுகோலாக இருந்துள்ளார் திரைத்துறை மீதான அவரது அர்ப்பணிப்பும், காதலும் அழியவேயில்லை. சமீபத்தில் ரிலீஸாகும் படங்களையும், சீரிஸ்களையும், இசையையும் அவர் ரசித்து மகிழ்கிறார். அவர் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் படைப்புகளை பற்றி குடும்பத்தில் எங்களுடன் விவாதிப்பார். அவரது இந்த குணம் என்னுள் பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது தொழில் மீதான உண்மையான நேசமே, நம் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துகொள்ள வழி என்பதை எனக்கு உணர்த்தியுள்ளது.