விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – விடாமுயற்சி திரைவிமர்சனம் – எப்படி இருக்கிறது அஜித்தின் விடாமுயற்சி ?
எப்படி இருக்கிறது அஜித்தின் விடாமுயற்சி ? இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அஜித்குமார் நடிப்பில், வந்திருக்கும் படம் விடாமுயற்சி. படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை இப்படம் பூர்த்தி செய்து இருக்கிறதா?. அஜித் தான் மாஸ் ஹீரோ என்பதை மறந்து ஒரு நடிகராக தன்னை நிரூபித்துள்ள படம் தான் விடாமுயற்சி. நெடுஞ்சாலை பயணத்தின் போது காணாமல் போன மனைவியை மீட்டெடுக்க முயற்சிக்கும் கணவன் என்பது தான் படத்தின் ஒன்லைன். Slow- Burn திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் மிகவும் சீரான வேகத்தில் நகர்கிறது. எங்கும் ஏறவும் இறங்கவும் இல்லாமல், இந்த வகையான படத்திற்கு நேர்த்தி செய்யும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தன் மனைவியுடன் அஜர்பைஜானின் நீண்ட நெடிய சாலையில் பயணம் செய்ய தயாராகும் ஜோடி. அந்த பயணத்தின் ஆரம்பத்தில் அவர்களுக்குள் இருக்கும் மன சிக்கலில் தொடங்கும் கதை, கதாநாயகி காணாமல் போகும் இடத்தில் வந்து பரபரப்போடு நிற்கிறது. ஒரிஜினலில் இல்லாத ப்ளாஷ்பேக்கில், நாயகன் நாயகி இருவருக்கும் இடையேயான, நெருக்கத்தையும், விலகலையும் மாறி மாறி காண்பித்து, அவர்கள் இருவரும் யார் என்பதை திரைக்கதை மூலமாக மக்களுக்கு புரிய வைத்த பின்னர் கதைக்குள் நுழைந்தது சிறப்பு. குறைவான கதாபாத்திரங்களை வைத்து கொண்டு எல்லை மீறாத ஒரு திரைக்கதையை பரபரப்பாக மகிழ் வடிவமைத்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். ஒருவர் கூட தங்களுக்கு கொடுத்த பணியில் தொய்வு காட்டவில்லை. குறிப்பாக அஜித் நடித்து சமீபத்தில் வந்த படங்களில், இந்தப் படத்தில் அவருக்கு நடிப்பதற்கான பல இடங்கள் இருந்தது. அதை அவர் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவர் உழைப்பு தெரிகிறது. படத்தின் இரண்டு முக்கிய தூண்களாக ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் இருக்கிறார். ஹாலிவுட் தரத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒரு வகையான வண்ண அமைப்பை இந்த படம் காட்டி இருக்கிறது. அஜர்பைஜானின் நிஜ தோற்றத்தை அப்படியே காட்டி இருக்கிறார்கள், எங்கேயும் இது வெளி இடங்களில் எடுக்கப்பட்டது என்ற எண்ணம் வராமல் முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்கிறது என்பதை நம்ப வைக்கும் படியான ஒளிப்பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மட்டும் எலவேசன் மற்ற இடங்களில் கதைக்கு தேவையான இசைகோர்ர்ப்பு என மிகச்சரியான வேலையை அனிருத் பார்த்துள்ளார். பெரும் நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் இருந்து ஒரு படி கீழே இறங்கி அஜித்குமார் நடித்துள்ளார். கதையும் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. உச்ச நட்சத்திரம் இப்படி ஒரு சீரியஸான true to the genre என்ற வகையில் ஒரு படத்தை கொடுத்து இருப்பது ஆச்சர்யப்படும் ஒன்று. விடாமுயற்சி தமிழ் சினிமாவிற்கு மிகத்தேவையான ஒரு பாடத்தை கொடுத்துள்ளது. கதாநாயகர்கள் தங்கள் அந்தஸ்தை இறக்கி, கமர்சியல் விஷயங்களை கைவிட்டுவிட்டு, நேர்த்தியான படத்தை கொடுக்கலாம் என்று அஜித் துணிந்து செய்து காட்டிருக்கிறார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி !!