வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் வேலைக்கு ரூ.18 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி

195

எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவணம்மாள் (வயது 64). இவர் தன்னுடைய மகன் ஜெகன் (30) என்பவருக்கு உதவி என்ஜினீயர் பணி வாங்கி தரும்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் பாபு (40) என்பவரை அணுகி கேட்டார்.
அதற்கு பாபு, தனக்கு ரூ.18 லட்சம் லஞ்சம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதை நம்பிய ரவணம்மாள், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.10 லட்சமும், ஆகஸ்டு மாதம் ரூ.8 லட்சமும் என இரண்டு தவணையாக ரூ.18 லட்சத்தை பாபுவிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் 2 ஆண்டுகளாகியும், வேலை வாங்கி கொடுக்காததால் ரவணம்மாள், பாபுவிடம் கேட்டபோது, தங்கள் மகன் தேர்வாகி விட்டதாகவும், காத்திருப்போர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

ஆனால் 2020-ம் ஆண்டு வெளியான காத்திருப்போர் பட்டியலிலும் ஜெகனின் பெயர் இடம் பெறாததால், தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி ரவணம்மாள் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாபு பணத்தை திருப்பித் தர முடியாது எனவும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவணம்மாள், இது குறித்து எண்ணூர் போலீஸ் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பாபு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

தவணை முறையில் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக கூறி காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நடந்து வந்த நிலையில் ரவணம்மாளிடம், உதவி பொறியாளர் பாபு லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.