பிரபுசாலமன் இயக்கிய ’காடன்’ படத்தில் வில்லனாக மிரட்டிய சம்பத்ராம்!

166

சென்னை.

தமிழ் சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் சம்பத்ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின்  அனைத்து முன்னணி நடிகர்களுடணும் நடித்திருக்கும் இவர், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் நடித்து  வருகிறார்.  பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில்  வெளியாகியுள்ள ‘காடன்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் சம்பத்ராம் நடித்திருக்கிறார்.

வனசரக அதிகாரியாக சம்பத்ராம் நடித்திருக்கும் வேடம் படத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, ராணாவுடன் அவர் போடும்  சண்டைக்காட்சி மிரட்டலாகவும், பிரமிப்பாகவும் அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க ஒரிஜினலாக படமாக்கப்பட்டிருக்கும் அந்த சண்டைக்காட்சியில் சம்பத்ராம், டூப் ஏதும் இல்லாமல் ஒரிஜினலாக  அடிவாங்குவதோடு, உயரமான இடங்களில் அசால்டாக  ஓடி மிரட்டியிருக்கிறார். ’காடன்’ படத்தில் சம்பத்ராமின் கதாப்பாத்திரம் மற்றும் அவரது நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இது குறித்து சம்பத்ராமிடம் கேட்டபோது,

“’காடன்’ படப்பிடிப்பை என்னால் மறக்க முடியாது. 7 நாட்கள் படமக்காப்பட்ட அந்த சண்டைக்காட்சியில் தான் எனக்கு அடிபட்டது. ஒரிஜினலாகவே என்னை ஸ்டண்ட் மேன் ஒருவர் தாக்க, நெஞ்சில் அதிகமாக வலி  ஏற்பட்டு மயக்கமடைந்தேன். இருந்தாலும், வலியுடன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்தேன். பிறகு சென்னை வந்த போது தான், நெஞ்சில் இரத்தம் உறைந்திருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதியாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை  பெற்று வந்தேன். இப்படி வலியோடு நடித்தாலும், என் கதாப்பாத்திரத்திற்கும், நடிப்புக்கும் கிடைக்கும் பாராட்டுகள் பெரும் மகிழ்ச்சியை  கொடுக்கிறது.” என்றார்.

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சம்பத்ராம், பிரபு சாலமனின்  இணை இயக்குநர் மணிபால் இயக்கும் ஒரு படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ‘பெல்பாட்டம்’, தொல்லைக்காட்சி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருபவர் விரைவில் வெளியாக உள்ள கார்த்தியின் ‘சுல்தான்’, பா.இரஞ்சித்தின்  ‘சார்பட்டா’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’நாரப்பா’ படத்திலும் சம்பத்ராம் நடித்துள்ளார். ‘அசுரன்’ படத்தில் நடித்த அதே வேடத்தில் தான் ‘நாராப்பா’ படத்திலும் நடித்திருக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ‘அசுரன்’ படத்தில் நடித்த  நடிகர்களில் சம்பத்ராம் மட்டும் தான் ‘நாரப்பா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக நடிகர்களை தேர்வு செய்யும் போது, ‘அசுரன்’ படத்தில் நடித்த கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் அனைவரும் கிடைத்தாலும், சம்பத்ராம் வேடத்திற்கு மட்டும் பொருத்தமான நடிகர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் தான், சம்பத்ராமையே  ‘நாரப்பா’-விலும் நடிக்க வைத்ததாக, இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டாலா கூறியிருக்கிறார். இப்படி தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் கவனம் பெற்றிருக்கும் நடிகர் சம்பத்ராம், இன்னும் பல பாராட்டுகளை பெற வேண்டும், என்று சென்னைசுடர் சார்பாக வாழ்த்துவோம்.