சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று சென்னை வந்தார். காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் அங்கிருந்து காரில் அடையாறு வந்தார். அங்கு வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, மா.சுப்பிரமணியன், செல்வ பெருந்தகை ஆகியோருக்கு ஆதரவு கேட்டு ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜனதா தமிழகத்தை மிரட்டி அடிமைப்படுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ தமிழர்கள் மீது அன்பை காட்டுகிறது. தமிழர்களிடம் ஒருபங்கு அன்பு காண்பித்தால், 10 மடங்கு திருப்பிக் காட்டுவார்கள். நான் தமிழை கற்றுவருகிறேன். தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகளை படித்துள்ளேன்.பா.ஜனதாவை அகற்ற நானும், ஸ்டாலினும் எந்த சமரசத்துக்கும் உள்ளாக மாட்டோம். இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேரறுக்கப்படும். ஸ்டாலின் முதல்வர் ஆவார்.
தமிழகம் வருவதை நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். மரியாதையாக கருதுகிறேன். என் மீதும் என் குடும்பத்தார் மீதும், தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்பை என்னால் என்றும் மறக்க இயலாது. தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.