சென்னை.
தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்களை கொன்றுவிட்டு அவர்களது கார்களை திருடிச்செல்லும் சம்பவம் பல இடங்களில் நடந்ததை மையமாக வைத்து படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
இப்படத்தில் கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகன் சந்தோஷ் சரவணன் நடித்து இருக்கிறார்.இப்படத்தில் இவரது நண்பர்கள் சிலர் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இதனால் கால்டாக்ஸி ஓட்டும் டிரைவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. டிரைவர்கள் கொல்லப்படுவதால் கொதிப்படைந்த சந்தோஷ் சரவணன் கொலையாளிகளை தேடி செல்கிறார். அந்த கொலையாளிகளை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா? அந்த மர்ம கும்பல் பிடிபட்டதா? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதுதான் படத்தின் மீதி கதை.
கதாநாயகன் சந்தோஷ் சரவணன், தமிழ் சினிமாவிற்கு புதிய முகம் என்றாலும் நல்ல அறிமுகம். ஆக்ஷன், அதிரடி காட்சிகளில் நன்றாக நடிப்பவருக்கு, காதல் காட்சிகளில் நடிப்பதற்க்கு கூச்சப்படுகிறார். . நண்பர்கள் கொலையானதும் வெகுண்டெழுவதும் கொலைகார கும்பல் பற்றி விசாரிக்கும் காட்சிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
கதாநாயகி அஸ்வினி அழகாக இருக்கிறார். அஸ்வினிக்கு வழக்கமான கதாநாயகி வேடம் தான். காதல் தவிப்புகளை வெளிப்படுத்தும் போது நடிப்பிலும் ஜொலிக்கிறார்.
இதுவரை யாரும் சொல்லப்படாத ஒரு உண்மை சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் பா.பாண்டியன், ஆக்ஷன், காதல்,செண்டிமெண்ட், காமெடி கலந்த திரைக்கதையை எழுதி, மக்கள் மத்தியில் கால்டாக்ஸி டிரைவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் விதத்தில் இந்தப் படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தை கால்டாக்ஸி ஓட்டும் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாகவும் கொடுத்திருக்கிறார். கிளைமாஸ் காட்சியில் யாரும் எதிப்பாராத விதத்தில் வரும் திருப்புமுனை சிறு குறைகளை போக்கி படத்திற்க்கு பலம் சேர்க்கிறது.
கால்டாக்ஸி ஓட்டுநர்களாக நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், கணேஷ், போராளி திலீபன், காவலர் வேடத்தில் நடித்திருக்கும் சேரன்ராஜ், இயக்குநர் ஈ.ராமதாஸ் ஆகியோர் அளவான நடிப்பில் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார்கள். கார் கொள்ளைக்காரக் கூட்டத்தின் முதன்மையானவராக நடித்திருக்கும் நிமல் கவனிக்க வைக்கிறார்.
எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. இசையமைத்து பாடல்களை எழுதியிருக்கும் பாணர், பாடல்களில் சற்று தடுமாறியிருந்தாலும், பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். டேவிட் விஜயின் படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தாலும், படத்தின் வேகத்தை அதிகரித்து இருக்கலாம்.
மொத்தத்தில் ‘கால் டாக்ஸி’ படம் ரசிகர்களை கவரும்.
ராதாபாண்டியன்.