அகர்தாலா:
திரிபுரா மாநிலத்தில் நீண்ட காலமாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள்தான் செல்வாக்கோடு இருந்தன. அதிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து அங்கு ஆட்சியில் இருந்து வந்தது. திரிபுராவில் பா.ஜனதா கட்சியை காலூன்ற வைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்தநிலையில் திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினர் தன்னாட்சி பகுதி கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்த இடங்கள் 28. தேர்தலில் பா.ஜனதா அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. இந்த கட்சியை எதிர்த்து திரிபுரா ஆதிமக்கள் முன்னேற்ற கூட்டணி போட்டியிட்டது.
இந்த மாநிலத்தின் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பிரத்யோத் கிஷோர் டெப்பார் சமீபத்தில் திப்ரா லேண்ட் மாநில கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இருந்தது. அவர் ஐ.என்.பி.டி. கட்சியுடன் கூட்டணி அமைத்து திரிபுரா ஆதிமக்கள் முன்னேற்ற கூட்டணி என்ற புதிய அணியை உருவாக்கினார். இந்த கூட்டணி அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.
பா.ஜனதாவுக்கும் இந்த கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.ம்இதில் திரிபுரா ஆதிமக்கள் முன்னேற்ற கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. திப்ரா லேண்ட் மாநில கட்சி மட்டுமே 16 இடங்களில் வெற்றி பெற்றது. ஐ.என்.பி.டி. 2 தொகுதியில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 9 இடங்களில் வென்றது. சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு ஆளுங்கட்சியான பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதை வெளிக்காட்டுகிறது.
அதே நேரத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.