சென்னை.
உலக சினிமாவாக இருக்கட்டும் அல்லது உள்ளூர் சினிமாவாக இருக்கட்டும் கதையில் தன்னை பொருத்திக்கொண்டு மிளிர்கிற ஹீரோவின் படங்கள் அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால் அறிமுகமான சில படங்களுக்குள்ளாகவே கதைளுக்குள் தன்னை பொருத்தி கொண்டு ஒரு சிறப்பான நடிகராக மிளிர்ந்துள்ளார் நடிகர் வெற்றி. தரமான படங்களில் நடித்து விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றதோடல்லாமல் வணிக ரீதியிலும் தன்னை ஒரு முக்கிய நடிகராக முன்னிறுத்தி வெற்றி பெற்றுள்ளார். தொடர் வெற்றி படங்களை அடுத்து தற்போது நடிகர் வெற்றி, விளம்பர படங்களை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். தமிழில் முதல் ரோட் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘இறைவி’ மற்றும் பல படங்களை விநியோகம் செய்த பிக்சர் பாக்ஸ் கம்பெனி தயாரிக்கின்றது.
இயக்குநர் ஷ்யாம் மனோகரன் படம் குறித்து கூறியதாவது…
இது வரை பல வகையிலான விளம்பர கமர்சியல்களை இயக்கியுள்ளேன். ஆனால் எப்போதும் என்னுடைய கனவு திரைப்படத்தை இயக்குவதாகவே இருந்தது. திரைக்கதையை எழுதி முடித்த பிறகு புதுமையான முயற்சிகளை அங்கீகரிக்கும், ஒரு நல்ல தயாரிப்பாளரை தேடினேன். அந்த வகையில் தனது துவக்கத்திலேயே ‘இறைவி’ ‘ கருப்பன்’ என தரமான படங்களை விநியோகம் செய்த, இளமையும் திறமையும் வாய்ந்த தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் அவர்களை அணுகினேன். முழு திரைக்கதையை அவரிடம் விவரித்தவுடனேயே படத்தை தயாரிக்க ஒப்புகொண்டு சம்மதம் தெரிவித்தார். இப்படத்தில் முதன்மை பாத்திரத்திற்கு என்னுடைய முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் வெற்றி. தரமான படங்களில் பரிசோதனை பாத்திரங்களில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர். அவருக்கும் திரைக்கதை வெகுவாக பிடித்திருந்தது. உடனடியாக நடிப்பதற்கு ஒப்புகொண்டார். இளமையும் திறமையும் வாய்ந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என் முதல் படத்திற்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.
பிக்சர் பாக்ஸ் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் கூறியதாவது…
படத்தின் விநியோக தளத்தில் பணிபுரிந்ததில் திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் விருப்பங்கள் குறித்து ஓரளவு பரிச்சயம் உண்டு. இயக்குநர் ஷ்யாம் திரைக்கதையை விவரித்தபோது திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது புரிந்தது. புத்தம் புதிதான கதையாக நாம் இதுவரை பார்த்திராத படமாக இதன் திரைக்கதை இருந்தது. மிஸ்டரி படங்களில் எப்போதும் க்ளைமாக்ஸில் தான் சீட்டின் நுனியில் வைத்திருக்கும் பகுதிகள் இருக்கும். ஆனால் ஷ்யாம் திரைக்கதையில் ஆரம்பத்தில் இருந்தே அம்மாதிரி பகுதிகள் இருப்பதை அறிந்தேன். முதன்மை கதாப்பாத்திரம் குறித்து எங்களது இருவரது தேர்வும் ஒன்றாகவே இருந்தது. மிக குறைவான காலத்தில் கதைகளுக்கான ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் நடிகர் வெற்றி. கோடைகால முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம். தற்போது படத்தின் மற்ற நடிகர் குழு மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணியில் உள்ளோம்.